'கிவுல் ஓயா' திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டமை கட்டமைக்க இன அழிப்பின் பிறிதொரு வடிவம்: துரைராசா ரவிகரன் எம்.பி
வவுனியா வடக்கிலுள்ள தமிழர்களின் பூர்வீக விவசாய குளங்கள் மற்றும் அவற்றின் கீழான வயல்நிலங்கள், தமிழர்களின் பூர்வீக்கிராமங்கள் பலவும் நீரில்மூழ்கும் அபாயம் ஏற்படும் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
வவுனியா வடக்கில் தமிழ் மக்களின் பூர்வீக குளங்கள், வயல் காணிகள், பழந்தமிழ் கிராமங்கள் என்பவற்றை ஆக்கிரமித்து மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின்,(எல்)வலய பிரிவால் முன்னெடுக்கப்படவுள்ள 'கிவுல் ஓயா' நீர்த்தேக்கத் திட்டத்திற்கு 2026 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தில் 2.5பில்லியன்ரூபா நிதி ஒதுக்கப்பட்டமை தமிழ் மக்கள் மீதான கட்டமைக்க இன அழிப்பின் பிறிதொரு வடிவம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றம்சாட்டினார்.
பாராளுமன்றத்தில் 11-11-2025அன்றுநடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, வவுனியாவின் பூர்வீகத் தமிழ்மக்களுக்குப் பாதகமான கிவுல் ஓயாத் திட்டத்தினை மிகக் கடுமையாக எதிர்க்கின்றேன்.மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையினால் முன்னெடுக்கப்படவிருக்கின்ற கிவுல்ஓயா நீர்த்தேக்க கட்டுமானத் திட்டத்திற்கு 2.5பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.இந்த கிவுல்ஓயாத்திட்டத்தினைச் செயற்படுத்தினால் வவுனியா வடக்கு பிரதேசத்திலுள்ள பூர்வீகத் தமிழ்மக்களின் பத்திற்கும் மேற்பட்ட சிறிய நீர்பாசனக்குளங்களும்,அவற்றின் கீழான வயல்நிலங்களும், பழந்தமிழ் கிராமங்களும் பறிபோகும் அபாயம் ஏற்படவுள்ளது.
மாஓயா அல்லது பெரிய ஆறு மற்றும் சூரியன் ஆறு ஆகிய ஆறுகளை மறித்து பாரிய அணைக்கட்டு அமைக்கப்பட்டு கிவுல் ஓயாத் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த பாரிய நீர்ப்பாசனத் திட்டத்தில் 6000ஏக்கர் நீர்ப்பாசன விவசாயக் காணிகள் வெலிஓயாவில் அத்துமீறி குடியேறியுள்ள பெரும்பான்மை இனத்தவர்கள் 2000பேருக்கு வழங்கப்படவுள்ளது. இவ்வாறாக கிவுல்ஓயா திட்டத்தினைச் செயற்படுத்தினால் வவுனியா வடக்கிலுள்ள தமிழர்களின் பூர்வீக விவசாய குளங்கள் மற்றும் அவற்றின் கீழான வயல்நிலங்கள், தமிழர்களின் பூர்வீக்கிராமங்கள் பலவும் நீரில்மூழ்கும் அபாயம் ஏற்படும் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
அந்த வகையில் இராமன்குளம், கொட்டோடைக்குளம், ஒயாமடுக்குளம், வெள்ளான்குளம், பெரியகட்டுக்குளம், பனிக்கல்மடுக்குளம்,சன்னமுற்றமடுக்குளம், கம்மாஞ்சிக்குளம், குறிஞ்சாக்குளம், புலிக்குட்டிக்குளம், திரிவைச்சகுளம் முதலான சிறிய நீர்ப்பாசனக்குளங்களும், வெடிவைச்சகல்லு குளத்தின் கீழ்வரும் வயல்காணிகள் பகுதியளவிலும், நாவலர்பாம், கல்லாற்றுக்குளம், ஈச்சன்குளம், கூழாங்குளம் வயற்காணிகளும் வவுனியா வடக்கிலுள்ள பழந்தமிழ் கிராமங்களான காட்டுப்பூவரசங்குளம் கிராமம்,காஞ்சூரமோட்டை கிராமம், மருதோடைக் கிராமத்தின் ஒருபகுதி உள்ளிட்ட பகுதிகள் குறித்த நீர்ப்பாசன அணைக்கட்டின் நீரேந்துப்பகுதிகளாக மாறும் அபாயம் ஏற்படும்.
இவ்வாறாக தமிழ்மக்களின் பூர்வீக குளங்களையும் அவற்றின் கீழான வயல் நிலங்களையும், பழந்தமிழ் கிராமங்களையும் அபகரித்து செய்யப்படும் இவ்வாறான திட்டங்கள்,கட்டமைக்கப்பட்ட தமிழ் இனவழிப்பு செயற்பாட்டின் வடிவமாகும். எனவே இந்தவிடயத்தில் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். எனவே இத்தகைய கட்டமைக்கப்பட்ட தமிழ் இனவழிப்புச் செயற்பாட்டினை உடனடியாக நிறுத்துமாறும் இவ்வுயர் சபையினைக் கோருகின்றேன் என்றார்.





