கொழும்பில் துப்பாக்கிச்சூடு நடத்த திட்டமிட்டிருந்த 5 பேர் கைது
மற்றைய சந்தேகநபரை கைது செய்த பொலிஸார், கைவிடப்பட்ட பையை பரிசோதித்தபோது, அதனுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ரி-56 ரக துப்பாக்கி ஒன்றும், 30 தோட்டாக்கள், கூரிய ஆயுதம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டிலிருந்தவாறு திட்டமிட்ட குற்றச்செயல்களை வழிநடத்தும் பாதாள உலககுழு தலைவர் ஒருவரின் வழிகாட்டலின் பேரில் கொழும்பு, கொள்ளுப்பிட்டி மற்றும் மாளிகாவத்தை ஆகிய பகுதிகளில் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ள திட்டமிட்டிருந்த 5 சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொள்ளுப்பிட்டி பகுதியில் எல்பர்ட் பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை இரவு பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கையில் ஈடுப்பட்டிருந்ததுடன், மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரை நிறுத்தி சந்தேகத்தின் பேரில் சோதனையிட்ட நிலையில், சந்தேகநபர் ஒருவர் தான் சுமந்து வந்த பையை தூக்கி எறிந்துவிட்டு தப்பியோடியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மற்றைய சந்தேகநபரை கைது செய்த பொலிஸார், கைவிடப்பட்ட பையை பரிசோதித்தபோது, அதனுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ரி-56 ரக துப்பாக்கி ஒன்றும், 30 தோட்டாக்கள், கூரிய ஆயுதம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
கைதான நபரிடமிருந்து மூன்று கையடக்கத் தொலைபேசிகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவ்விடயம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்திருந்த பொலிஸார் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அளித்த தகவல்களின் அடிப்படையில், தப்பியோடிய சந்தேகபர் உட்பட நான்கு சந்தேகபர்களை மாளிகாவத்தை, போதிராஜ மாவத்தை பகுதியில் வைத்து கைதுசெய்துள்ளனர்.
அத்தோடு சந்தேகநபர்களிடமிருந்து 18 கிராம் ஐஸ் போதைப்பொருள், மோட்டார் சைக்கிள் மற்றும் 2 கையடக்கத் தொலைபேசிகள் ஆகியன விசாரணை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன. கைதான சந்தேக நபர்கள் 19, 25, 40 மற்றும் 48 வயதுடைய கொழும்பு 14, வெல்லம்பிட்டிய, மாளிகாவத்தை மற்றும் தெமட்டகொடை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
வெளிநாட்டுக்குச் தப்பிச்சென்றுள்ள திட்டமிட்ட குற்றச்செயல்களை வழிநடத்தும் பாதாள உலக குழு உறுப்பினருமான நபரொருவரின் உத்தரவின் பேரில் கைதான சந்தேகநபர்கள் கொழும்பு, கொள்ளுப்பிட்டி மற்றும் மாளிகாவத்தை ஆகிய பிரதான பகுதிகளில் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு தயாராகி இருந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
செவ்வாய்க்கிழமை அன்று துப்பாக்கிச் சூடு நடத்துவதற்காகவே சந்தேகநபர்கள் இருவரும் துப்பாக்கியுடன் வருகைத்தந்திருந்ததாகவும் விசாரணையின் போது மேலும் தெரியவந்துள்ளது. இதையடுத்து சந்தேகநபர்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.





