அமைச்சுக்கள் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்க தவறியுள்ளன: தயாசிறி ஜயசேகர எம்.பி
கடந்த சில தினங்களாக கிழங்கு மற்றும் வெங்காய விவசாயிகள் வீதிகளில் இருக்கின்றனர். பொருளாதார மத்திய நிலையங்கள் செயற்பாடின்றி இருக்கின்றன.
வெங்காயம் மற்றும் கிழங்கு விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் தீர்வுகளை வழங்க தவறியுள்ளது. குறித்த அமைச்சர்களை பதவி விலக்கி, அமைச்சுக்களின் அதிகாரங்களை ஜனாதிபதி பொறுப்பேற்க வேண்டும் என்றும் விவசாயிகள் போராட்டங்களை முன்னெடுத்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 11-11-2025 அன்று நடைபெற்ற அமர்வின் போது சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, பாராளுமன்ற உறுப்பினர்கள் பின்பற்றும் ஒழுக்க கோவைகளுக்கமைய சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது அதிகாரங்களை பயன்படுத்தும் போதும் மற்றும் பணிகளை முன்னெடுக்கும் போதும் பொதுவாக நாட்டின் நலனுக்காகவும் மற்றும் வாக்காளர்களின் நலனுக்காகவும் செயற்பட வேண்டும்.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக கிழங்கு மற்றும் வெங்காய விவசாயிகள் வீதிகளில் இருக்கின்றனர். பொருளாதார மத்திய நிலையங்கள் செயற்பாடின்றி இருக்கின்றன. அங்கே பொருட்கள் இல்லை. அவர்கள் இப்போது போராட்டம் நடத்தி வருகின்றன.
விவசாய அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சரை பதவி விலகுமாறும் மற்றும் வர்த்தக அமைச்சரும் பதவி விலக வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கின்றனர. அந்த அமைச்சுக்களின் அதிகாரங்களை ஜனாதிபதி பொறுப்பேற்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. அமைச்சர்கள் தமது பணிகளை சரியாக செய்யாத காரணத்தினாலேயே விவசாயிகள் வீதிக்கு இறங்கி போராட்டம் நடத்துகின்றனர்.இவ்வாறான நிலைமையில் வெங்காயம் மற்றும் கிழங்கு விவசாயிகளுக்கு நியாயமான விலைக்கு அவற்றை விற்க அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டம் என்ன? என்று கேள்வியெழுப்பினார். இதன் போது எழுந்து உரையாற்றிய ஆளும் தரப்பின் பிரதம கொறடாவான நளிந்த ஜயதிஸ்ஸ,இப்போது பாராளுமன்றத்தில் பொருளாதாரம் தொடர்பிலேயே விவாதம் நடக்கின்றது. இதனால் இந்த விடயத்தில் அதன்போது முன்வைக்கலாம்.
குழுநிலையின் போதும் கூறலாம். இதற்கு அமைச்சர்கள் பதிலளிப்பர். அவசர பிரச்சினைகளுக்கு எவ்வேளையிலும் பதிலளிக்க தயாராகவே இருக்கின்றோம். ஆனால் பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும் மற்றும் ஊடகங்களின் அவதானங்களை பெற்றுக்கொள்ளவும் நடந்துகொள்வதை போன்றே இது இருக்கின்றது என்றார்.





