சகல அரச, கல்வி நிறுவனங்களில் 'போதைப்பொருள் தடுப்புக் குழுக்கள்' - வெளிவரவுள்ள சுற்றறிக்கை
பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஊடாக அமைச்சுகள், திணைக்களங்கள் மற்றும் அனைத்து அரச நிறுவனங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை 17-11-2025 அன்று வெளியிடப்படவுள்ளது.
அனைத்து அரச நிறுவனங்கள், பாடசாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களிலும் போதைப்பொருள் தடுப்புக் குழுக்களை அமைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கும், பாவனைக்கான தேவையை முற்றாக நீக்குவதற்கும் இந்த குழுக்கள் செயற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஊடாக அமைச்சுகள், திணைக்களங்கள் மற்றும் அனைத்து அரச நிறுவனங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை 17-11-2025 அன்று வெளியிடப்படவுள்ளது.
இந்த சுற்றறிக்கையின்படி, ஒவ்வொரு நிறுவன தலைவரும் தமது நிறுவனத்தை போதைப்பொருள் அற்ற நிறுவனமாக உறுதிப்படுத்துவது கட்டாயமாகும்.
போதைப்பொருள் கடத்தல்காரர்கள் அல்லது பாவனையாளர்கள் நிறுவனங்களில் இருப்பது கண்டறியப்பட்டால், அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்து அவர்களை காவல்துறையிடம் ஒப்படைக்கும் பொறுப்பு நிறுவனத் தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, கல்விச் செயலாளர் ஊடாகவும் 17-11-2025அன்று சுற்றறிக்கையொன்று வெளியிடப்படவுள்ளது.
இதன் மூலம், அனைத்து பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களிலும் போதைப்பொருள் தடுப்புக் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்படவுள்ளது.
தொலைதூர கிராமப் பாடசாலைகளில் கூட போதைப்பொருள் பாவனை குறித்த தகவல்கள் காவல்துறைக்குக் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், இந்த நடவடிக்கை அவசியமாகிறது.
போதைப்பொருள் தொடர்பான தகவல்களைப் பொதுமக்கள் வழங்க வசதியாக 1818 என்ற புதிய உதவி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், தேசிய போதைப்பொருள் சபைக்கான அலுவலகம் ஒன்று எதிர்வரும் 22ஆம் திகதி திறக்கப்படவுள்ளது.
தற்போது ஜனாதிபதி செயலகம் ஊடாக தற்காலிகமாக 1818 என்ற உதவி இலக்கம் செயற்பட்டுவருதுடன், முதல் 5 நாட்களில் மாத்திரம் சுமார் 1000 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன.
இந்த தகவல்களின் அடிப்படையில் தற்போது சுற்றிவளைப்புகள் நடத்தப்பட்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.





