தேசிய வீடமைப்பு அதிகாரசபைக்கு இவ்வாண்டு 16,000 வீடுகளை நிர்மாணிப்பதற்கான இலக்கு நிர்ணயம்
9700 மில்லியன் ரூபாவில் 9700 குடும்பங்களுக்கு தலா 10 இலட்சம் ரூபா வீதம் வழங்கி 9700 வீடுகளை நிர்மாணிப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம்.
தேசிய வீடமைப்பு அதிகாரசபைக்கு இவ்வாண்டு 16 000 வீடுகளை நிர்மாணிப்பதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய அரச நிதி உதவி திட்டத்தின் கீழ் 9700 மில்லியன் ரூபா செலவில் 9700 குடும்பங்களுக்கு தலா 10 இலட்சம் ரூபா வீதம் வழங்கி 9700 வீடுகளை நிர்மாணிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் தலைவர் அறவிந்த சிறிநாத தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் 23-02-2026 அன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசாங்கத்தின் நிதி உதவி திட்டத்தின் கீழ் 2025இல் 3600 வீடுகள் உட்பட ஒட்டுமொத்தமாக 4000 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இவ்வாண்டு அவற்றின் எண்ணிக்கை மூன்று மடங்கால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்காக வரவு - செலவு திட்டத்தில் 10 200 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் 9700 மில்லியன் ரூபாவில் 9700 குடும்பங்களுக்கு தலா 10 இலட்சம் ரூபா வீதம் வழங்கி 9700 வீடுகளை நிர்மாணிப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம்.
களுத்துறையில் 100 குடும்பங்களுக்கும், கண்டியில் 170 குடும்பங்களுக்கும், மாத்தறையில் 112 குடும்பங்களுக்கும், அம்பாந்தோட்டையில் 105 குடும்பங்களுக்கும், மட்டக்களப்புக்கு 120 குடும்பங்களுக்கும், அம்பாறையில் 110 குடும்பங்களுக்கும், குருணாகலில் 307 குடும்பங்களுக்கும், புத்தளம் 125 குடும்பங்களுக்கும், அநுராதபுரத்தில் 125 குடும்பங்களுக்கும், பொலன்னறுவையில் 100 குடும்பங்களுக்கும், இரத்தினபுரியில் 175 குடும்பங்களுக்கும், மொனராகலையில் 100 குடும்பங்களுக்கும் மற்றும் கம்பஹாவில் 175 குடும்பங்களுக்கும் என 1775 பயனாளிகளுக்கு தலா ஒரு இலட்சத்து 50 000 ரூபா பெறுமதியான முதலாவது காசோலை வழங்கப்படவுள்ளது.
கொழும்பில் 501, கம்பஹாவில் 1058, களுத்துறையில் 685, கண்டியில் 523, மாத்தளையில் 243, நுவரெலியாவில் 221, காலியில் 789, மாத்தளையில் 563, அம்பாந்தோட்டையில் 176, யாழ்ப்பாணத்தில் 131, மன்னாரில் 44, வவுனியாவில் 9, முல்லைத்தீவில் 55, கிளிநொச்சியில் 27, மட்டக்களப்பில் 240, கம்பஹாவில் 430, திருகோணமலையில் 149, குருணாகலில் 136, புத்தளத்தில் 491, அநுராதபுரத்தில் 621, பொலன்னறுவையில் 153, பதுளையில் 257, மொனராகலையில் 242, இரத்தினபுரியில் 519 மற்றும் கேகாலையில் 238 என இவ்வாண்டில் சுமார் 9700 வீடுகளை நிர்மாணிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இவை தவிர அரச உத்தியோகத்தர்களுக்கான வீட்டுக்கடன் திட்டம், ஏனைய பிரஜைகளுக்கான வீட்டுக்கடன் திட்டம் என்பவற்றின் கீழ் 3500 வீடுகளும், செவண நிதியத்தின் கீழ் 500 மில்லியன் நிதியில் மேலும் 500 வீடுகளும் மற்றும் இந்திய வீட்டுத்திட்டமும் உள்ளடங்களாக வீடமைப்பு அதிகாரசபைக்கு இவ்வாண்டு 16 000 வீடுகளை நிர்மாணிப்பதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.





