தமிழரசுக்கட்சி, ஜனநாயகத் தமிழ்த்தேசிய கூட்டணியும் அடுத்த வாரம் முக்கிய சந்திப்பு
இவ்வருடம் மாகாணசபைத்தேர்தலை நடத்தும் உத்தேசம் அரசாங்கத்துக்கு இல்லை என்றே தோன்றுகிறது.
மாகாணசபைத்தேர்தல் எந்த முறைமையின் கீழ் நடத்தப்படவேண்டும் என்பதை ஆராய்வதற்காக 12 பேரடங்கிய விசேட தெரிவுக்குழுவை நியமிப்பதற்கான யோசனை அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டிருக்கும் நிலையில், தேர்தலை இழுத்தடிப்பதற்கான இந்த முயற்சியை உரியவாறு கையாண்டு, இவ்வருடத்துக்குள் தேர்தலை நடத்துவதற்கான அழுத்தங்களை எவ்வாறு பிரயோகிப்பது என்பது குறித்து இலங்கைத் தமிழரசுக்கட்சியும் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியும் அடுத்த வாரம் யாழில் கூடி ஆராயவுள்ளன.
மாகாணசபைத்தேர்தல்கள் எந்த முறைமையின் கீழ் நடத்தப்படவேண்டும் என்பதை ஆராய்வதற்கும், அதுகுறித்த விதப்புரைகள் மற்றும் யோசனைகளை முன்வைப்பதற்கும் 3 மாத கால அவகாசம் வழங்கப்பட்ட 12 பேரடங்கிய விசேட செயற்குழுவை நியமிப்பதற்கான யோசனை ஆளும் தரப்பின் பிரதம கொறடாவான நளிந்த ஜயதிஸ்ஸவினால் கடந்த வாரத்தொடக்கத்தில் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பாராளுமன்றத் தெரிவுக்குழுவை நியமிப்பது என்பது மாகாணசபைத்தேர்தலுக்கு முகங்கொடுப்பதற்குப் பயந்த அரசாங்கம், அதனை உடன் நடத்தாமல் இழுத்தடிப்புச் செய்வதற்கு மேற்கொள்ளும் ஒரு முயற்சி மாத்திரமேயாகுமென தமிழ்த்தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் ஏற்கனவே கடும் விசனத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.
மறுபுறம் கடந்த வியாழக்கிழமை தேசிய பத்திரிகைகளின் ஆசிரியர்கள் மற்றம் ஊடக நிறுவனங்களின் பிரதானிகளைச் சந்தித்த இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, அரசாங்கம் வெகுவிரைவில் மாகாணசபைத்தேர்தலை நடத்தவேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடாகும் எனத் தெரிவித்திருந்தார்.
இவ்வாறானதொரு பின்னணியில் எதிர்வரும் 16 ஆம் திகதி பிற்பகல் இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கும் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணிக்கும் இடையிலான சந்திப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழரசுக்கட்சியின் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
இச்சந்திப்பின்போது மாகாணசபைத்தேர்தலை இழுத்தடிக்கும் நோக்கில் பாராளுமன்றத் தெரிவுக்குழுவை நியமிப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டுவரும் முயற்சி குறித்தும், அதனை முறியடித்து மாகாணசபைத்தேர்தலை விரைவாக நடத்துவதற்குரிய அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் விரிவாக ஆராயப்படும் என தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
'மாகாணசபைத்தேர்தலை புதிய முறைமையில் நடத்துவதா அல்லது பழைய முறைமையில் நடத்துவதா என ஆராய்வதற்காகவே அரசாங்கம் தெரிவுக்குழுவை நியமிக்கின்றது. அக்குழு புதிய முறைமையிலேயே மாகாணசபைத்தேர்தலை நடத்தவேண்டும் எனத் தீர்மானித்தால், அதன் பின்னர் எல்லை நிர்ணயத்தை மேற்கொள்வதற்கு ஓரிரு வருடங்கள் தேவைப்படும்.
எனவே இவ்வருடம் மாகாணசபைத்தேர்தலை நடத்தும் உத்தேசம் அரசாங்கத்துக்கு இல்லை என்றே தோன்றுகிறது. எனவே அடுத்த வாரம் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியுடனான சந்திப்பின்போது இதுபற்றி விரிவாக ஆராய்வோம்' என அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை இதுபற்றிக் கருத்துரைத்த ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன், தமிழரசுக்கட்சியுடனான சந்திப்பில் பேசப்படவுள்ள விடயங்கள் தொடர்பில் இன்னமும் தீர்மானிக்கப்படாத போதிலும், விசேட தெரிவுக்குழுவை நியமிக்கும் அரசாங்கத்தின் முயற்சி குறித்து நிச்சயமாகப் பேசப்படும் என்றார்.
'மாகாணசபைத்தேர்தலை விரைவில் நடத்தாமல் இழுத்தடிக்கும் நோக்கிலேயே தெரிவுக்குழுவை நியமிப்பதற்கான முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டிருக்கிறது என்ற விடயம் தமிழரசுக்கட்சிக்கும் தெரியும். தற்போது 3 மாத கால அவகாசத்துடன் நிறுவப்படும் தெரிவுக்குழுவின் கால அவகாசம் பின்னர் மேலும் நீடிக்கப்படும். அரசாங்கம் உண்மையிலேயே மாகாணசபை முறைமையில் ஈடுபாடு கொண்டிருப்பின், தற்போது தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் தனிநபர் பிரேரணையை நிறைவேற்றி, பழைய முறைமையில் தேர்தலை உடனடியாக நடத்தவேண்டும்.
அதன் பின்னர் அடுத்த தேர்தல் வரையான காலப்பகுதியில் எல்லை நிர்ணயம் உள்ளடங்கலாக புதிய முறைமையில் தேர்தலை நடத்துவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும். அதனைவிடுத்து, தேர்தலைக் காலதாமதப்படுத்துவதற்கு இவ்வாறான தெரிவுக்குழுவை நியமிக்கக்கூடாது' என்றும் சுரேஷ் பிரேமசந்திரன் வலியுறுத்தினார்.





