அமைதியான உலகுக்கு சகலரும் அர்ப்பணிப்பை வழங்க வேண்டும்: ஜனாதிபதி அநுரகுமார
லிற்ரோ நிறுவனத்திடம் எரிவாயு களஞ்சியசாலைக்கான கொள்ளளவு 8000 மெற்றிக்தொன்னாக காணப்படுகிறது.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அமைதியற்ற நிலைமை மற்றும் அதனால் இலங்கைக்கு மறைமுகமாக ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து விசேட கவனம் செலுத்தியுள்ளோம். எந்தவொரு யுத்தமும்,எந்தவொரு சமூகத்தினருக்கும் சாதகமான நிலைமையை ஏற்படுத்தாது. தொழில்நுட்ப ரீதியான முன்னேற்றங்கள்,ஆயுதங்கள் சமூக கட்டமைப்புக்கு எவ்வகையான தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதை விளங்கிக் கொள்ள முடிகிறது. இந்த யுத்தத்துடன் தொடர்புடைய சகல தரப்பினரும் வெகுவிரைவில் அமைதியான உலகுக்கு தேவையான அர்ப்பணிப்பையும், வழிகாட்டல்களையும், வழங்க வேண்டும் என்பது எமது நிலைப்பாடாகும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
மத்திய கிழக்கு நாடுகளின் நிலைமையை எம்மால் தீர்மானிக்க முடியாது.தோற்றம் பெறும் நெருக்கடிகளுக்குத் தீர்வு காண அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.தற்போதைய நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு அரசாங்கம், பாராளுமன்றம் மற்றும் மக்கள் என்ற அடிப்படையில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். அனைவருக்கும் பொறுப்பு உண்டென வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் 03-03-2026 அன்று நடைபெற்ற அமர்வின் போது 'மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அமைதியற்ற நிலைமை ' தொடர்பில் விசேட உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஜனாதிபதி அங்கு மேலும் உரையாற்றியதாவது: மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அமைதியற்ற நிலைமை மற்றும் அதனால் இலங்கைக்கு மறைமுகமாக ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து விசேட கவனம் செலுத்தியுள்ளோம். எந்தவொரு யுத்தமும், எந்தவொரு சமூகத்தினருக்கும் சாதகமான நிலைமையை ஏற்படுத்தாது. தொழில்நுட்ப ரீதியான முன்னேற்றங்கள், ஆயுதங்கள் சமூக கட்டமைப்புக்கு எவ்வகையான தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதை விளங்கிக் கொள்ள முடிகிறது. இந்த யுத்தத்துடன் தொடர்புடைய சகல தரப்பினரும் வெகுவிரைவில் அமைதியான உலகுக்கு தேவையான அர்ப்பணிப்பையும், வழிகாட்டல்களையும், வழங்க வேண்டும் என்பது எமது நிலைப்பாடாகும்.
மத்திய கிழக்கு நாடுகளின் தற்போதைய நிலைமை முழு உலக நாடுகளின் இருப்புக்கும், மக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும். ஆகவே இலங்கைக்கும் இந்த பாதிப்பில் இருந்து விலக முடியாது. ஏனெனில் நாடு என்ற ரீதியில் நாம் தனித்துச் செயற்படவில்லை. சர்வதேச மட்டத்தில் அமைதிக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அமைதியற்ற நிலைமையால் இலங்கைக்கு மறைமுக தாக்கங்கள் ஏற்படும். அவற்றை முறையாக முகாமைத்துவம் செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.மத்திய கிழக்கின் இன்றைய நிலைமையால் எமது நாட்டின் பல்வேறு கட்டமைப்புக்கு மறைமுறை தாக்கங்கள் ஏற்படும். அரசாங்கம் என்ற அடிப்படையில் இந்த நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்கு குறுகிய மற்றும் நீண்டகால திட்டங்களை முன்னெடுத்துள்ளோம்.
தற்போதைய பூகோள நெருக்கடியால் மக்கள் அச்சமடைவது இயல்பானதே கடந்த காலங்களில் ஏற்பட்ட எரிபொருள்,எரிவாயு மற்றும் மருத்துத் தட்டுப்பாட்டால் ஏற்பட்ட நெருக்கடியை மக்கள் நன்கு அறிவார்கள். வெளிநாட்டு கையிருப்பை பலப்படுத்திக் கொண்டு பல நெருக்கடிகளுக்குத் தீர்வு காண வேண்டும்.
ஆட்சிக்கு வந்தவுடன் இந்தியா- பாகிஸ்தான் நெருக்கடி, அமெரிக்காவின் பரஸ்பர தீர்வை வரி மற்றும் தித்வா புயல் தாக்கம் உள்ளிட்ட சவால்களை எதிர்க்கொண்டோம்.தற்போது மத்திய கிழக்கில் யுத்த நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சவாலையும் வெற்றிக் கொள்வோம்.
மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள அமைதியற்ற நிலைமையால் இலங்கையின் பொருளாதாரத்துக்கு ஏற்படும் பாதிப்பு மற்றும் முகாமைத்துவ நடவடிக்கைகள் குறித்து இலங்கை மத்திய வங்கியிடம் அறிக்கை கோரியுள்ளேன். நாளை (இன்று) அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.தற்போதைய நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு அரசாங்கம், பாராளுமன்றம் மற்றும் மக்கள் என்ற அடிப்படையில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். அனைவருக்கும் பொறுப்பு உண்டு.
மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமையால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்று சந்தேகம் ஏற்படுத்தப்படுகிறது. நாட்டில் உள்ள எரிபொருள் களஞ்சியசாலைகளின் கொள்ளளவு இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு களஞ்சியப்படுத்தும் வகையில் தான் காணப்படுகிறது. அடுத்த எரிபொருள் கப்பல் வரும் போது களஞ்சியசாலைகளில் உள்ள எரிபொருளை நிறைவுப்படுத்த வேண்டிய நிலை காணப்படுகிறது.
முத்துராஜவெல மற்றும் கொலன்னாவ எரிபொருள் களஞ்சியசாலையின் கொள்ளவவு 150000 லீற்றராக காணப்படுகிறது.ஆகவே எரிபொருள் கப்பல் வரும் காலத்தை அடிப்படையாக கொண்டு எரிபொருள் களஞ்சியசாலையின் கொள்ளளவை குறைக்க வேண்டும்.களஞ்சியசாலைகளின் கொள்ளளவை அடிப்படையாகக் கொண்டு தான் எரிபொருள் சேமித்து வைக்கப்படுகிறது.
40 நாட்களுக்கு உரிய பெற்றோல் களஞ்சியப்படுத்தப்படுகிறது. தேவைக்கு மேலதிகமாக எரிபொருள் களஞ்சியப்படுத்த முடியாது.களஞ்சியசாலையின் கொள்ளளவுக்கு அமைவாகவே எரிபொருள் கொள்வனவு செய்ய முடியும். தற்போது களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டுள்ள மசகு எண்ணெய் 26 நாட்களுக்கு போதுமானது. எதிர்வரும் வாரம் பிறிதொரு மசகு எண்ணெய் நாட்டுக்கு வரும்.ஆகவே எக்காரணிகளுக்காகவும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது.
தற்போதைய யுத்தச்சூழல் தோற்றம் பெற்றால் அதற்கும் முகங்கொடுக்க நேரிடும். சகல எரிபொருள் தாக்கினால் எதிர்க்கட்சியினர் குறிப்பிடுவதை போன்று எமக்கு கிணற்றில் இருந்து எரிபொருளை அள்ள முடியாது.ஆகவே அனைவரும் யாதார்த்தை விளங்கிக் கொள்ள வேண்டும். மத்திய கிழக்கின் தற்போதைய நிலைமை தொடர வேண்டுமா அல்ல து முடிவுக்கு கொண்டு வர வேண்டுமா என்பதை எம்மால் தீர்மானிக்க முடியாது. ஆனால் மறைமுகமாக ஏற்படும் தாக்கங்களுக்கு தீர்வு காண உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் என்ற அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.
எரிபொருள் களஞ்சியசாலைகளின் கொள்ளளவை அதிகரிப்பது நீண்டகால தீர்வாக அமையும். கொலன்னாவ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் களஞ்சிசாலையின் கொள்ளளவை 86 ஆயிரம் மெற்றிக்தொன் னால் அதிகரிப்பதற்கு 06 புதிய எண்ணெய் தாங்கிகளையும், முத்துராஜவெல எண்ணெய் சுத்திரகரிப்பு நிலையத்தின் கொள்ளளவை 46 ஆயிரம் மெற்றிக்தொன்னால் அதிகரிப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அதேபோல் திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை மறுசீரமைக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.முதற்கட்டமாக 4 எண்ணெய் தாங்கிகளை புனரமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டு அவற்றில் 2 தாங்கிகள் தற்போது புனரமைக்கப்பட்டுள்ளன. மிகுதி தாங்கிகளை புனரமைப்பதற்கு விலைமனுக்கோரல் செய்யப்பட்டுள்ளது.கடந்த 47 ஆண்டுகாலமாக எரிபொருள் களஞ்சியசாலைகளின் கொள்ளளவை அதிகரிப்பதற்கு எவரும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் தற்போது எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்று சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபடுகிறார்கள்.தற்போது 50 ஆயிரம் மெற்றிக்தொன்னாக காணப்படும் கொள்ளளவை 1 இலட்சமாக அதிகரிப்போம்.இதற்காக 20 நிறுவனங்களிடமிருந்து யோசனைகள் கோரப்பட்டுள்ளன.
லிற்ரோ நிறுவனத்திடம் எரிவாயு களஞ்சியசாலைக்கான கொள்ளளவு 8000 மெற்றிக்தொன்னாக காணப்படுகிறது.ஆனால் நாளாந்த தேவைக்கான கேள்வி 1000 முதல் 1200 மெற்றிக்தொன்னாக காணப்படுகிறது.ஆகவே ஒருவாரத்துக்குரிய அளவில் தான் எரிவாயுவை களஞ்சியப்படுத்த முடிந்துள்ளது. தனியார் துறையின் எரிவாயு விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டதால் லிட்ரோ நிறுவனத்தின் நாளாந்த எரிவாயு விநியோகம் 1800 மெற்றிக்தொன்னாக உயர்வடைந்தது.மாலைத்தீவில் எரிவாயு கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டு ஒவ்வொரு வாரத்துக்கும் தேவையான எரிவாயு கொண்டு வரப்படுகிறது.இதுதான் உண்மை நிலை. களஞ்சியசாலை வசதி இல்லாமல் எவ்வாறு மேலதிகமாக எரிவாயுவை கொண்டு வருவது.
தனியார் எரிவாயு நிறுவனத்திடம் களஞ்சியசாலை கொள்ளளவு 30 ஆயிரம் மெற்றிக்தொன்னாக காணப்படுகிறது. இதில் 15 ஆயிரம் மெற்றிக்தொன்னை அரசாங்கத்துக்கு வழங்குமாறு கோரியிருந்தேன்.அந்த நிறுவனம் இதற்கு தற்போது இணக்கம் தெரிவித்துள்ளது.இந்த தனியார் எரிவாயு நிறுவனம் தனது மொத்த நிறுவனத்தில் 20 சதவீதத்தையே தேசிய சந்தைக்கு விநியோகித்தது. கடந்த இரண்டு வாரங்களாக இந்த நிறுவனம் தேசிய சந்தைக்கு எரிவாயுவை விநியோகிக்காத காரணத்தால் மஞ்சள் எரிவாயு சிலிண்டரை பாவித்தவர்கள் பாதிக்கப்பட்டார்கள்.இதனால் மொத்த எரிவாயு விநியோகமும் நெருக்கடிக்குள்ளானது.
இந்த நிலைமையை கருத்திற் கொண்டு தான் அவசரகால சட்ட அமலாக்கத்தை தொடர்ந்து நீட்டித்தேன்.இந்த தனியார் நிறுவனம் சகல வரிகளுக்கும் உட்பட்ட வகையில் மஞ்சள் நிற சிலிண்டரை சந்தைக்கு விநியோகிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளேன். ஒரு இலட்சம் லிட்ரோ வெற்று சிலிண்டர்கள் எதிர்வரும் 12 ஆம் திகதி நாட்டுக்கு கொண்டு வரப்படும்.எரிவாயு இல்லை , தட்டுப்பாடு என்று பாராளுமன்றத்தில் கூச்சலிடுகிறார்கள். யதார்த்தை முதலில் விளங்கிக் கொள்ளுங்கள்.
மத்திய கிழக்கு நாடுகளில் 10 இலட்சத்துக்கும் அதிகளவிலான இலங்கையர்கள் தொழில் புரிகிறார்கள். வெளிநாடுகளில் உள்ள தூதரகங்களில் 24 மணிநேர சேவை தற்போது வழங்கப்படுகிறது.ஆகவே தற்போதைய நெருக்கடியான நிலையில் இருந்து நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். அரசாங்கம் என்ற வகையில் நாங்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறோம். மத்திய கிழக்கு நாடுகளில் அமைதி நிலவும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.





