பல பகுதிகளில் வெப்ப சுட்டெண் அதிகரிப்பு – பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுத்தல்
வீடுகளுக்குள் இருக்கும் போது முதியவர்கள் மற்றும் நோயாளிகள் குறித்து விசேட கவனம் செலுத்துவதுடன், எக்காரணம் கொண்டும் சிறுவர்களை வாகனங்களுக்குள் தனியாக விட்டுச் செல்ல வேண்டாம் என பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் மனித உடலில் உணரப்படும் வெப்பத்தின் அளவு எச்சரிக்கை மட்டம் வரை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்தங்கள் பற்றிய முன்கூட்டிய எச்சரிக்கை மையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய கொழும்பு, கம்பஹா, களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை, குருநாகல், புத்தளம் ஆகிய மாவட்டங்களிலும் வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் சில இடங்களில் வெப்பச் சுட்டெண் 39 முதல் 45 வரையான மட்டம் வரை அதிகரிக்கக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
வளிமண்டலத்தின் ஈரப்பதம் மற்றும் உச்ச வெப்பநிலையைக் கருத்திற்கொண்டு கணிக்கப்படும் இந்த வெப்பச் சுட்டெண் காரணமாக, அதிக நேரம் வெயிலில் இருப்பவர்களுக்கு களைப்பு, சோர்வு மற்றும் தசைப்பிடிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வெப்பமான வானிலை நிலவும் காலப்பகுதியில் வேலைத்தளங்களில் உள்ளவர்கள் போதியளவு நீர் அருந்துவதோடு, நிழலான பகுதிகளில் அடிக்கடி ஓய்வெடுக்க வேண்டும் எனவும், வெளியக நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் தங்களை வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வீடுகளுக்குள் இருக்கும் போது முதியவர்கள் மற்றும் நோயாளிகள் குறித்து விசேட கவனம் செலுத்துவதுடன், எக்காரணம் கொண்டும் சிறுவர்களை வாகனங்களுக்குள் தனியாக விட்டுச் செல்ல வேண்டாம் என பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், இலேசான மற்றும் வெள்ளை அல்லது வெளிர் நிறத்திலான ஆடைகளை அணியுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளதோடு, இது தொடர்பான மேலதிக ஆலோசனைகளுக்கு சுகாதார அமைச்சின் அனர்த்தத் தயார்நிலை பிரிவையோ அல்லது 011-7446491 என்ற இலக்கத்தையோ தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.





