இலங்கைக்கு நெருக்கடிகளின் போது உதவுவது எமது கடமை: சீன தூதுவர்
அனர்த்தங்களால் சேதமடைந்துள்ள பாலங்களை துரிதமாக மீள் நிர்மாணிப்பதற்கான பணிகளுக்கான கண்காணிப்பில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தித்வா புயலால் நெருக்கடிக்குள்ளாகியுள்ள இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க தாம் தயாராகவுள்ளதாக இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென்ஹாங் தெரிவித்துள்ளார்.
கண்டிக்கு விஜயம் செய்திருந்த அவர் மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மாநாயக்க தேரர்களை சந்தித்து கலந்துரையாடிய போதே சீன தூதுவர் இதனைத் தெரிவித்தார்.
இதன் போது மல்வத்து பீடத்தின் மாநாயக்க திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரருடனான சந்திப்பில் கருத்து வெளியிட்ட சீனத் தூதுவர், இலங்கை நெருக்கடிகளை எதிர்கொள்ளும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதற்கு உதவுவது எமது கடமையாகும். அதற்கான காரணம் இலங்கையும் சீனாவும் மிக நெருங்கிய நண்பர்களாவர். பெருந்தெருக்கள் மற்றும் பாலங்கள் தொடர்பான விசேட நிபுணர்கள் 6 பேர் கொண்ட குழுவினர் இங்கு வருகை தந்துள்ளனர்.
அனர்த்தங்களால் சேதமடைந்துள்ள பாலங்களை துரிதமாக மீள் நிர்மாணிப்பதற்கான பணிகளுக்கான கண்காணிப்பில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். அது மாத்திரமின்றி சீன அரசாங்கம் இந்நாட்டு பாடசாலை மாணவர்களின் சீருடைகளுக்காக ஒன்றரை கோடி மீற்றர் துணியை நன்கொடையாக வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.
அதன் பின்னர் அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரரை சந்தித்து கலந்துரையாடிய சீனத் தூதுவர், இலங்கையின் கல்வித் துறைக்கு பெருமளவான உதவிகளை வழங்குவதற்கு நாம் தயாராகவுள்ளோம். அதற்கமைய இங்குள்ள 500 பாடசாலைகளில் 900 வகுப்பறைகளை நவீன வகுப்பறைகளாக்குவதற்கு சீனா தயாராகவுள்ளது.
அத்தோடு இந்நாட்டில் காற்றின் தரம் மோசமடைவதை குறைப்பதற்கு 100 இலத்திரனியல் பேரூந்துகளை வழங்கவும் நாம் தயார். அந்த பேரூந்துகளின் பெறுமதி இரண்டு இலட்சத்து 25 000 டொலர்களாகும். தித்வா புயலால் அனைத்து புறங்களில் இலங்கை எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளிலிருந்து அதனை மீட்ப்பதற்கு சீனா எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தயாராகவே உள்ளது என்றார்.
இதேவேளை சந்திப்புக்களின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், ஆரம்ப காலத்திலிருந்து இலங்கை - சீனா ஆகிய இரு நாடுகளும் மிகவும் நெருங்கிய நட்பு நாடுகளாகும். புதிய ஆட்சியமைக்கப்பட்டதன் பின்னர் அந்த தொடர்புகளை நாம் இன்னும் சிறந்த முறையில் பேணி வருகின்றோம். கடந்த ஆண்டு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகிய இருவரும் சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்தனர்.
அந்த விஜயத்தின் போது அவர்கள் பல்வேறு பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்தனர். இதன் போது ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகள், வேலைத்திட்டங்கள் என்பவற்றை இலங்கையின் அபிவிருத்திக்காக துரிதமாக நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளோம் என்றார்.





