ஊழல்களை மறைக்க கணக்காய்வாளர் நியமனம் காலம் தாழ்த்தப்படுகிறது: பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்
தேர்தலுக்கு முன்னர் பேசப்பட்ட விடயங்கள், தேர்தல் விஞ்ஞாபனங்களில் கூறப்பட்ட விடயங்கள் அனைத்தும் மீறப்பட்டுள்ளன.
கணக்காய்வாளர் நாயகத்தின் நியமனத்தை அரசாங்கம் திட்டமிட்டு காலம் தாழ்த்தி வருகிறது. பொது சேவைத்துறையில் இடம்பெறும் ஊழல்களை மறைப்பதற்காகவே இவ்வாறான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. பொது சேவையை முழுமையாக அரசியல் மயப்படுத்துவதற்கு ஜனாதிபதி முயற்சிக்கின்றார் என்பது தெளிவாகிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், கணக்காய்வாளர் நாயகத்தின் நியமனத்தை அரசாங்கம் தொடர்ந்தும் காலம் தாழ்த்தி வருகிறது. இந்த அரசாங்கம் ஆட்சியேற்ற முன்னர் கணக்காய்வு, வெளிப்படை தன்மை குறித்து கூறிய விடயங்கள் அனைத்தையும் ஜனாதிபதி மறந்துவிட்டார். கணக்காய்வாளர் நியமனம் தெரிந்தே காலம் தாழ்த்தப்படுகிறது என்பது தெளிவாகிறது. 2025ஆம் ஆண்டுக்கான சகல பொது சேவைகளையும் கணக்காய்விற்கு உட்படுத்த வேண்டியுள்ளது.
எனவே தான் அரசாங்கம் தமக்கு தேவையான ஒருவரை கணக்காய்வாளராக நியமிப்பதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறது. ஆனாலும் ஜனாதிபதியால் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து பெயர்களும் அரசியலமைப்பு பேரவையால் நிராகரிக்கப்பட்டுள்ளன. விடயம் தொடர்பான அறிவுள்ள அதே வேளை பொறுத்தமான ஒருவரது பெயரைக் கூட ஜனாதிபதி முன்மொழியவில்லை.
கணக்காய்வாளர் நாயகம் நியமிக்கப்படாததால் கோப் குழு, கோபா குழு என முக்கிய குழுக்கள் எவையும் கூடவில்லை. இவற்றை நன்கு அறிந்திருந்தும் தெரிந்தே அரசாங்கம் இந்த நியமனத்தைக் காலம் தாழ்த்திக் கொண்டிருக்கிறது. இதன் ஊடாக பொது சேவையை முழுமையாக அரசியல் மயப்படுத்துவதற்கு ஜனாதிபதி முயற்சிக்கின்றார் என்பது தெளிவாகத் தெரிகிறது.
தேர்தலுக்கு முன்னர் பேசப்பட்ட விடயங்கள், தேர்தல் விஞ்ஞாபனங்களில் கூறப்பட்ட விடயங்கள் அனைத்தும் மீறப்பட்டுள்ளன. ஐக்கிய மக்கள் சக்தி என்ற ரீதியில் கல்வி சீர்திருத்தங்களை நாம் ஒருபோதும் எதிர்க்கவில்லை. முறையான திட்டமிடலின்றி ஆரம்பித்தமையால் ஏற்பட்ட சிக்கல்களால் ஜனாதிபதி அதனை நிறுத்தியுள்ளார். ஆனால் தற்போது பழி எம்மீது சுமத்தப்படுகிறது. எதற்காக இது நிறுத்தப்பட்டது என்பதை பெற்றோர் ஜனாதிபதியிடமே கேட்க வேண்டும்.
ஜனாதிபதி தனது முகநூல் பக்கத்தில் எதற்காக இவை நிறுத்தப்பட்டுள்ளன என்பதற்கு மூன்று காரணிகளைக் குறிப்பிட்டுள்ளார். அவற்றை விரைவில் நிவர்த்தி செய்து கல்வி சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே எமது கோரிக்கையுமாகும் என்றார்.





