பிரபல பாலிவுட் நடிகர் இர்பான் கான் 1988ஆம் ஆண்டு வெளியான சலாம் பாம்பே என்ற படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் வில்லன், குணச்சித்திர வேடம் என அனைத்திலும் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்தார். இவர் பாலிவுட் மட்டுமல்லாது 'லைஃப் ஆஃப் பை', ஜுராசிக் வேர்ல்டு போன்ற ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். விளம்பர படங்களிலும் மாடலிங் செய்து வந்தார்.
இர்பான் கானுக்கு வயது 54. இவர் நியூரோ எண்டாக்ரின் ட்யூமர் எனப்படும் அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக நேற்றிரவு அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இவரின் மறைவு பாலிவுட் பிரபலங்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சனிக்கிழமை இர்பான் கானுடைய தாயார் சாயிதா பேகம், 95, ஜெய்ப்பூரில் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார். கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் லாக்டவுன் போடப்பட்டுள்ளதால், ஜெய்பூருக்கு செல்ல முடியாத நிலையில், வீடியோ காலில் அழுத படி தாயின் இறுதி சடங்குகளை இர்பான் கான் பார்த்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.