தெற்கு ஆழ்கடலில் போதைப்பொருளுடன் ஆழ்கடல் மீன்பிடி படகு - 5 சந்தேக நபர்கள் கைது
கைது செய்யப்பட்ட ஆழ்கடல் மீன்பிடி படகில் போதைப்பொருள் அடங்கியது என சந்தேகிக்கப்படும் பொதிகளும் மீட்கப்பட்டுள்ளன.
தெற்கு ஆழ்கடலில் போதைப்பொருளுடன் பயணித்ததாக சந்தேகிக்கப்படும் மற்றொரு ஆழ்கடல் மீன்பிடி படகொன்று கடற்படையினர் முன்னெடுத்திருந்த விசேட நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்பட்டுள்ளது.
மேற்படி ஆழ்கடலில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேகத்திற்கிடமான மீன்பிடி படகு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கரைக்கு அழைத்து வரப்படுவதாகவும் கடற்படை ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இலங்கைக்கு சொந்தமான மேற்படி ஆழ்கடல் மீன்பிடி படகு தேவேந்திரமுனை பகுதியில் தெற்கு கடற்பரப்புக்கு அப்பால் ஆழ்கடலில் சஞ்சரித்துக் கொண்டிருந்தபோது கடற்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டது. புலனாய்வுப்பிரிவு வழங்கியிருந்த தகவலுக்கமைய கடற்படையின் நீண்ட தூர கப்பல் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினர் சோதனை நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்து ஆழ்கடலில் வைத்து, சந்தேகத்திற்கிடமான மீன்பிடி படகை கைது செய்திருந்தனர்.
கடற்படையினரின் இந்த தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த மீன்பிடி படகில் பயணித்த 5 சந்தேக நபர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட ஆழ்கடல் மீன்பிடி படகில் போதைப்பொருள் அடங்கியது என சந்தேகிக்கப்படும் பொதிகளும் மீட்கப்பட்டுள்ளன.
எவ்வாறெனினும் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்ட படகு மற்றும் சந்தேக நபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இன்று (16) கரைக்கு அழைத்து வரப்படுவதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.





