நாட்டை வந்தடைந்த எரிவாயு, எரிபொருள் கப்பல்கள்
லிட்ரோ நிறுவனம் ஊடாக 38,000 மெட்ரிக் தொன் எரிவாயுவை அரசாங்கம் கொள்வனவு செய்ததாக ஜனாதிபதி விளக்கமளித்தார்.
உஸ்வெட்டகெய்யாவ, தல்டியவத்தை எரிவாயு இறக்குமதி முனையத்திற்கு 18-03-2026 அன்றுகாலை திரவ பெட்ரோலிய எரிவாயு தாங்கிக் கப்பல்கள் வந்தடைந்தன. குறித்த முனையத்தில் எரிவாயுவை இறக்கும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நேற்றைய தினம் அதிகாலை எரிபொருள் தாங்கிக் கப்பல் ஒன்றும் நாட்டை வந்தடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. செவ்வாயன்று விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இம்மாதத்தில் இலங்கை ஏற்கனவே 38,000 மெட்ரிக் தொன் எரிவாயுவை இறக்குமதி செய்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்வதற்குத் தேவையான விநியோகத்தை உறுதிப்படுத்தும் வகையில், அடுத்த இரண்டு நாட்களில் மேலும் 33,000 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய மற்றுமொரு கப்பல் வருகை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மார்ச் மாதத்திற்கான ஆரம்பத் தேவை 33,000 மெட்ரிக் தொன்னாக இருந்த போதிலும், தனியார் விநியோகஸ்தர் ஒருவர் விநியோகத்தைக் குறைத்த காரணத்தினால், லிட்ரோ நிறுவனம் ஊடாக 38,000 மெட்ரிக் தொன் எரிவாயுவை அரசாங்கம் கொள்வனவு செய்ததாக ஜனாதிபதி விளக்கமளித்தார்.
தற்போது வருகை தந்துள்ள அந்த தொகையில் ஒரு பகுதி ஏற்கனவே சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதுடன், சில பகுதிகள் உள்நாட்டு களஞ்சியசாலைகளிலும் ஏனையவை மாலைதீவில் உள்ள களஞ்சியசாலைகளிலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மற்றுமொரு எரிவாயு கப்பல் இன்று வியாழக்கிழமை அல்லது நாளை வெள்ளிக்கிழமை வருகை தரும் என எதிர்பார்க்கப்படுவதுடன், இதன் மூலம் தட்டுப்பாடுகள் ஏற்படாமல் தடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. அடுத்த எரிவாயு விநியோகம் ஏப்ரல் 21-23 காலப்பகுதியில் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, எரிவாயு சந்தையில் நெருக்கடி ஏற்படும் அபாயம் மிகவும் குறைவு என பொதுமக்களுக்கு உறுதியளித்தார்.





