2026 பிரிக்ஸ் உச்சி மாநாடு இந்தியாவுக்கு சவாலாகுமா?
இந்தியா தற்போது ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தோனேஷியா போன்ற நாடுகளுடன் இந்திய ரூபாயில் வர்த்தகத்தை மேற்கொள்ள அனுமதிக்கிறது.
2026 ஜூலை மாதம் நடைபெறவுள்ள பிரிக்ஸ் (பிரேஷில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாபிரிக்கா) உச்சிமாநாட்டிற்கு இந்தியா தலைமை தாங்கவுள்ளது.
இந்த மாநாடு, ஏற்கனவே உலகளாவிய புவிசார் அரசியல் ஒழுங்கை உலுக்கியுள்ள மற்றும் உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிசக்தி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள அமெரிக்கா - ஈரான் போரின் நிழலில் நடைபெறுகிறது.
வரும் வாரங்களில் போர் நிறுத்தப்பட்டாலும், அதன் அதிர்வுகள் இன்னும் பல மாதங்களுக்குப் பல்வேறு வழிகளில் உணரப்படும். உண்மையில், போர் வெடிப்பதற்கு முன்பே, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது வரி விதிப்புக் கொள்கைகள் மூலம் பழைய பொருளாதார ஒழுங்கைச் சிதைத்திருந்தார்.
இத்தகைய வளர்ந்து வரும் சூழல், உலக ஒழுங்கை நிர்வகிக்கும் கொள்கைகளை மறுபரிசீலனை செய்யக் கோருகிறது. ஆனால், உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 41 சதவீதத்தையும், உலக வர்த்தகத்தில் 28 சதவீதத்தையும் கொண்டுள்ள பிரிக்ஸ் அமைப்பு, இந்தப் பணியைச் செம்மையாகச் செய்யுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
இந்த ஆண்டு இந்தியா நடத்தும் உச்சிமாநாட்டில், அமெரிக்க - ஈரான் போரில் இந்தியா ஒரு 'வலுவான மற்றும் ஆக்கபூர்வமான' தலையீட்டை மேற்கொள்ள வேண்டும் என்று ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் மற்றும் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இருப்பினும், பாகிஸ்தான் மற்றும் சீனாவிற்கு எதிரான தனது பாதுகாப்புத் தேவைகளுக்காக அமெரிக்காவைச் சார்ந்துள்ள இந்தியா, இக்கோரிக்கையை நிறைவேற்றுவது கடினமாகும்.
குறிப்பாக, பிடிவாதமான மற்றும் கணிக்க முடியாத டொனால்ட் ட்ரம்ப்பை பகைத்துக்கொள்வதை இந்தியா தவிர்க்கிறது. ட்ரம்ப் தொடர்பான இக்கட்டான சூழல்களை எதிர்கொள்ளும்போது 'மௌனம்' ஒன்றையே இந்தியா தனது தாரக மந்திரமாகக் கொண்டுள்ளது.
இந்தியா ஈரானுக்காகக் குரல் கொடுத்தாலும், ஒரு மூன்றாம் உலக நாடான ஈரானைச் சில நாட்களில் அடக்கத் தவறியதால் காயமடைந்துள்ள ட்ரம்ப், இந்தியாவின் ஆலோசனைகளுக்குச் செவிசாய்ப்பாரா என்பதும் சந்தேகமே.
மேற்கு ஆசியாவைப் பொறுத்தவரை இந்தியாவின் கொள்கை முரண்பாடுகள் நிறைந்ததாக உள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேலுக்கு விஜயம் செய்தபோது, அந்த நாட்டிற்கு நிரந்தர ஆதரவை வழங்குவதாக உறுதியளித்தார்.
ஆனால், ஹோர்முஸ் ஜலசந்தியில் சிக்கியுள்ள இந்திய எண்ணெய் கப்பல்களை மீட்பதற்காக ஈரானிய ஜனாதிபதியுடன் பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டபோது, தான் 'ஈரானின் நண்பன்' என்று அவர் கூறினார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கைகளால் கொல்லப்பட்ட ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவிற்கு முறையான இரங்கல் தெரிவிக்க இந்தியா தவறிய பிறகு, மோடியின் இந்த நட்புப் பிரகடனத்தை ஈரானியர்கள் நம்பியிருப்பார்களா என்பது ஐயமாகும்.
இந்திய அரசு ஒரு அதிகாரியை அனுப்பி, நான்கு நாட்கள் தாமதத்திற்குப் பிறகே ஈரானிய இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திடச் செய்தது. எனினும், இந்திய மக்கள் மீது இரக்கம் காட்டிய ஈரான், மூன்று இந்தியக் கப்பல்களை ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்ல அனுமதித்தது.
இந்தியாவுக்கு இந்தப் பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் வெற்றி மிக அவசியமானது. ஏனெனில், இஸ்ரேலுக்கான ஆதரவு மற்றும் ட்ரம்பின் வர்த்தக ஆயுதங்களுக்கு எதிராக நிற்க முடியாத நிலை ஆகியவற்றால் 'உலகளாவிய தெற்கு' நாடுகளில் இந்தியா இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க இது உதவும்.
ஆனால் பிரிக்ஸ் ஒரு ஒருங்கிணையாத அமைப்பாக உள்ளது. இதில் தற்போதைய போரில் எதிரெதிர் துருவங்களாக இருக்கும் ஈரான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய இரண்டு நாடுகளும் உறுப்பினர்களாக உள்ளன. 2026 ஜனவரியில் இந்தியாவின் தலைமைத்துவத்தின் கீழ் போர் குறித்து இதுவரை எந்தவொரு கூட்டு அறிக்கையும் வெளியிடப்படவில்லை.
மேலும், பிரிக்ஸ் அமைப்பில் பரம எதிரிகளான இந்தியாவும் சீனாவும் நிறுவன உறுப்பினர்களாக உள்ளன. சீனாவும் ரஷ்யாவும் இந்த அமைப்பை அமெரிக்க டொலரின் ஆதிக்கத்திற்கு எதிரான ஒரு தளமாகப் பார்க்கின்றன.
ஆனால், அமெரிக்காவின் நூறு சதவீத வரி விதிப்பு அச்சுறுத்தலுக்கு அஞ்சி, இந்தியா 'டொலர் எதிர்ப்பு' பிரசாரத்திலிருந்து பின்வாங்கியுள்ளது.
சீனாவின் 'பாதை மற்றும் மண்டலம் முன்முயற்சியையும்' இந்தியா தனது இறையாண்மைக்கு விடுக்கப்பட்ட சவாலாகவே பார்க்கிறது. குறிப்பாக, சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் காஷ்மீர் வழியாகச் செல்வதை இந்தியா கடுமையாக எதிர்க்கிறது.
சீனா தனது செல்வாக்கை விரிவுபடுத்த பிரிக்ஸ் அமைப்பில் பாகிஸ்தானைச் சேர்க்க முயன்றாலும், இந்தியா அதனைத் தீவிரமாக எதிர்க்கிறது.
பிரிக்ஸ் அமைப்பின் அனைத்து முடிவுகளும் 'ஒருமனதாக' எடுக்கப்பட வேண்டும் என்ற விதியை இந்தியா தனது வீட்டோ அதிகாரமாகப் பயன்படுத்துகிறது.
சீனாவின் ஆதிக்கம் பெருகாமல் தடுப்பதே இந்தியா பிரிக்ஸ் அமைப்பில் தொடர்ந்து நீடிப்பதற்குக் காரணமாகும். அதேபோல், பிரிக்ஸ் நாடுகளின் புதிய வளர்ச்சி வங்கி மூலம் உள்ளுர் நாணயங்களில் வர்த்தகம் செய்வதை இந்தியா ஆதரித்தாலும், அமெரிக்க டொலருக்கு மாற்றாக ஒரு பொதுவான நாணயத்தை உருவாக்கும் திட்டத்தில் இந்தியாவுக்கு உடன்பாடு இல்லை.
2015இல் தொடங்கப்பட்ட புதிய வளர்ச்சி வங்கி, வளரும் நாடுகளுக்கு ஒரு மாற்று நிதி ஆதாரமாகத் திகழ்கிறது. 2024-ஆம் ஆண்டில் பிரிக்ஸ் நாடுகளுக்கிடையிலான வர்த்தகம் சுமார் 5 ட்ரில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது.
இருப்பினும், தங்கம் சார்ந்த பொதுவான நாணயத்தை உருவாக்கும் திட்டத்திலிருந்து இந்தியா பின்வாங்கியுள்ளது. சீனா தனது 'நிதிக் கொடுப்பனவு முறைமை' மூலம் தனது ஆதிக்கத்தைச் செலுத்த முயல்கிறது. இதனைப் பிரிக்ஸ் வங்கியின் ஊடாகத் தனது பாதை மற்றும் மண்டலம் முன்முயற்சிக்குப் பயன்படுத்த சீனா முற்பட்டபோது, இந்தியா அதனைத் தடுத்து நிறுத்தியது.
இந்தியா தற்போது ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தோனேஷியா போன்ற நாடுகளுடன் இந்திய ரூபாயில் வர்த்தகத்தை மேற்கொள்ள அனுமதிக்கிறது.
ஆனாலும், அமெரிக்க டொலருக்கு மாற்றாக ஒரு பிரிக்ஸ் நாணயத்தை உருவாக்கும் எண்ணம் தமக்கு இல்லை என்பதை இந்திய மற்றும் தென்னாபிரிக்க அதிகாரிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில், சீன முதலீடுகளைப் பாதுகாப்பு சோதனையின்றி 10 சதவீதம் வரை அனுமதிக்க இந்தியா சம்மதித்துள்ளது. இருப்பினும், இது அடிப்படை வெளியுறவுக் கொள்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்தாது.
சுருக்கமாகக் கூறின், பிரிக்ஸ் அமைப்பு நிதி ரீதியாகவும் தத்துவ ரீதியாகவும் செயல்பாட்டில் இருந்தாலும், அதன் உட்கட்டமைப்பு மற்றும் இராஜதந்திர முரண்பாடுகள் காரணமாக அதுவொரு பிளவுபட்ட வீடாகவே காட்சியளிக்கிறது.





