ஈரான் கப்பல்களுக்கான அழைப்பும் அரசாங்கத்தின் தடுமாற்ற மறுப்பும்
சர்வதேச மட்டத்தில் நடுநிலை வகிப்பதாகக் கூறும் இலங்கை, நடைமுறையில் ஒரு துருவ அரசியலை நோக்கித் தள்ளப்படுவது அதன் இராஜதந்திர மரபிற்கு ஏற்புடையதல்ல.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் மையம் கொண்டுள்ள தற்கால அரசியல் மற்றும் இராணுவ நகர்வுகள், இலங்கை ஒரு இறையாண்மையுள்ள நாடாகத் தனது தீர்மானங்களை எடுக்கிறதா அல்லது வல்லரசுகளின் அழுத்தங்களுக்குப் பணிந்து தனது இராஜதந்திரக் கொள்கைகளை வளைத்துக் கொள்கிறதா என்ற பாரிய வினாவை உலகரங்கில் எழுப்பியுள்ளது.
குறிப்பாக, ஈரானியப் போர்க்கப்பலான 'ஐ.ஆர்.ஐ.எஸ்.டெனா' இலங்கைக் கடற்பரப்பிற்கு மிக அருகாமையில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்ட சம்பவமும், அதனைத் தொடர்ந்து ஈரானியத் தூதுவர் அலிரெஸா டெல்கோஷ் வெளியிட்டுள்ள கருத்துக்களும் இலங்கை எதிர்கொண்டுள்ள இராஜதந்திர நெருக்கடியை அப்பட்டமாக வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன. இந்தியாவின் 'மிலான் - 2026' சர்வதேசக் கடற்படைப் பயிற்சியில் பங்கேற்ற ஈரானியக் கப்பல்களை, இலங்கைக் கடற்படைத் தளபதி ஒரு ''நட்புறவு விஜயத்திற்காக' அழைப்பு விடுத்திருந்ததாகத் தூதுவர் குறிப்பிட்டுள்ளமை இங்கு மிக முக்கியமான திருப்பமாகும்.
அழைப்பு விடுத்த தரப்பே அத்தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் காட்டிய மந்தகதியும், அனுமதி வழங்குவதில் ஏற்பட்ட இழுபறிகளும் இலங்கையின் பாதுகாப்பு மற்றும் வெளிவிவகாரக் கொள்கைகள் தன்னிச்சையானவை தானா என்ற சந்தேகத்தை வலுப்படுத்துகின்றன.
எனினும், இது குறித்துக் கருத்துத் தெரிவித்த அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ, இராஜதந்திர மட்டத்தில் எவ்விதமான உத்தியோகபூர்வ அழைப்பும் விடுக்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
பிறிதொரு நாட்டில் இடம்பெற்ற நிகழ்வின் போது இராஜதந்திர மட்டத்தில் உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்க முடியாது என்றும், இலங்கைக் கடற்படைத் தளபதி ஈரானியக் கப்பலின் தளபதிக்கு விடுத்தது ஒரு 'சிநேகபூர்வமான' அழைப்பு மட்டுமே என்றும் அவர் விளக்கமளித்தார்.
சர்வதேச கடல் சட்ட உடன்படிக்கையின்படி, ஒரு நாட்டின் பிராந்தியக் கடற்பரப்பு என்பது அதன் கடற்கரையிலிருந்து 12 கடல் மைல் வரை நீடிக்கிறது. அதேவேளை, 200 கடல் மைல்வரை உள்ள பகுதி 'பிரத்தியேக பொருளாதார மண்டலம்' என்று வரையறுக்கப்படுகிறது.
ஈரானியக் கப்பலான 'ஐ.ஆர்.ஐ.எஸ்.டெனா' காலிக் கடற்பரப்பிற்கு அப்பால் 19 முதல் 44 கடல் மைல் தொலைவில் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், இது இலங்கையின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்குள் நிகழ்ந்த ஒரு அத்துமீறலாகும்.
சர்வதேச கடல் சட்ட உடன்படிக்கை விதிகளின்படி, ஒரு நாட்டின் பிரத்தியேக பொருளாதார மண்டல பகுதிக்குள் பிற நாடுகள் 'கப்பல் போக்குவரத்து சுதந்திரத்தை' கொண்டிருந்தாலும், அங்கு மற்றொரு நாட்டின் கப்பல் மீது இராணுவத் தாக்குதலை நடத்துவது அந்த கடலோர நாட்டின் இறையாண்மைக்கும் பாதுகாப்பிற்கும் விடுக்கப்பட்ட நேரடி சவாலாகும்.
மேலும், சர்வதேச கடல் சட்ட உடன்படிக்கை பிரிவு 95இன் படி, கடலில் உள்ள ஒரு போர்க்கப்பல் அது எந்த நாட்டிற்குச் சொந்தமானதோ அந்த நாட்டின் முழுமையான அதிகார வரம்பிற்கு உட்பட்டது. போர் பிரகடனம் செய்யப்படாத ஒரு சூழலில், அதிலும் குறிப்பாக ஒரு 'நட்புறவு விஜயத்திற்காக' அழைக்கப்பட்ட கப்பல் மீது தாக்குதல் நடத்துவது சர்வதேச சட்டங்களை அப்பட்டமாக மீறும் செயலாகும்.
அத்தோடு, பாதிக்கப்பட்ட மாலுமிகளுக்கு புகலிடம் அளிப்பதும், அவர்களைத் தடுத்து வைக்காமல் பாதுகாப்பாகத் தாய்நாட்டிற்கு அனுப்பி வைப்பதும் 'கடல்சார் மனிதாபிமான சட்டங்களின்' கீழ் இலங்கையின் கடமையாகும். அமெரிக்காவின் அழுத்தங்களுக்குப் பணிந்து இந்த நடைமுறைகளைத் தாமதப்படுத்துவது, இலங்கை சர்வதேச சட்டங்களுக்கு வழங்கும் மரியாதையைக் கேள்விக்குள்ளாக்குகிறது.
ஒரு நாட்டின் கடல் எல்லைக்குள் நுழையும் வெளிநாட்டுக் கப்பல்களுக்கான அனுமதி என்பது மிக நீண்ட மற்றும் நுணுக்கமான பாதுகாப்புப் பரிசீலனைகளை உள்ளடக்கியது. பொதுவாக, ஒரு வெளிநாட்டுப் போர்க்கப்பல் நாட்டின் துறைமுகத்திற்குள் நுழைய வேண்டுமாயின், அத்தேசத்தின் வெளிவிவகார அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றின் ஊடாக முறையான இராஜதந்திரக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட வேண்டும்.
ஈரானியக் கப்பல்கள் இலங்கை நோக்கி வந்து கொண்டிருந்த வேளையில், அனுமதி வழங்குவதில் ஏற்பட்ட 11 மணிநேரத் தாமதம் மற்றும் அதன் பின்னரான தாக்குதல் என்பன தற்செயலான நிகழ்வுகளாகத் தெரியவில்லை. ஒருபுறம் ஈரானின் நட்புறவு அழைப்பு, மறுபுறம் அமெரிக்காவின் பாதுகாப்பு அழுத்தங்களென இலங்கை இருமுனை நெருக்கடியில் சிக்கியிருந்தது தெளிவாகிறது.
ஈரானியத் தூதுவரின் வெளிப்படுத்தல்கள், தாக்குதலுக்கு உள்ளான கப்பலில் இருந்தவர்கள் போருக்கோ அல்லது எதிர்த்தாக்குதலுக்கோ தயாராக இருக்கவில்லை என்பதையும், அங்கு படைவீரர்களை விட இசைக்கலைஞர்களே அதிகம் இருந்தனர் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றன. இதுவொரு மனிதாபிமான ரீதியிலான இழப்பாகப் பார்க்கப்பட வேண்டிய வேளையில், இலங்கை அரசு இச்சம்பவத்தை 'கண்கட்டப்பட்ட சாட்சியாக' நின்று வேடிக்கை பார்த்தது சர்வதேச அரங்கில் அதன் இராஜதந்திரத் தோல்வியாகவே கருதப்படுகிறது.
அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான விசேட தூதுவர் செர்ஜியோ கோரின் இலங்கை விஜயமும், அமெரிக்கப் போர் விமானங்கள் மத்தளை விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதி கோரியமையும் இலங்கை ஒரு போர்க்கள மையமாக மாற்றப்பட முயல்வதையே காட்டுகிறது.
தெற்காசியாவிற்கான அமெரிக்க மேலாதிக்கத்தை நிலைநாட்ட இலங்கையைப் பகடைக்காயாகப் பயன்படுத்தும் இத்தகைய நகர்வுகள், இலங்கையின் 'அணிசேராக் கொள்கை' என்பது வெறும் ஏட்டளவில் மட்டுமே எஞ்சியிருப்பதை உணர்த்துகிறது. அதேவேளை, 'ஐ.ஆர்.ஐ.எஸ். புஷேர்' கப்பலைத் திருகோணமலைக்கு இழுத்துச் செல்வதில் நிலவும் தாமதங்கள், இலங்கையின் கடல்சார் பாதுகாப்பின் பலவீனத்தை வெளிப்படுத்துகின்றன.
இரு இலட்சம் டொலர் செலவை ஏற்க ஈரான் முன்வந்தும் கூட, அமெரிக்கா அல்லது இஸ்ரேலின் தாக்குதல் அச்சத்திற்குப் பயந்து இலங்கை அரசாங்கம் தயக்கம் காட்டுவது, தனது நாட்டின் பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கும் ஒரு வெளிநாட்டுப் பிரதிநிதிக்குக் கூடப் பாதுகாப்பளிக்க முடியாத நிலையையே காட்டுகிறது.
இலங்கையின் இராஜதந்திரச் சமநிலை குலைந்துள்ளதையே இச்சம்பவங்கள் உணர்த்துகின்றன. மாலுமிகளைத் திருப்பி அனுப்புவதில் நிலவும் சிக்கல்கள் மற்றும் வெலிசறை கடற்படைத் தளத்தில் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள விதம் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களுக்கு முரணானது மட்டுமன்றி, எதிர்காலத்தில் மத்திய கிழக்கு நாடுகளுடனான இலங்கையின் பொருளாதார மற்றும் இராஜதந்திர உறவுகளில் பாரிய விரிசல்களை ஏற்படுத்தக்கூடும்.
ஒரு சிறிய தேசமானது வல்லரசுகளின் இராணுவப் போட்டியில் மௌன சாட்சியாக இருப்பது அதன் எதிர்கால தேசியப் பாதுகாப்பிற்குப் பாரிய அச்சுறுத்தலாகும். சர்வதேச மட்டத்தில் நடுநிலை வகிப்பதாகக் கூறும் இலங்கை, நடைமுறையில் ஒரு துருவ அரசியலை நோக்கித் தள்ளப்படுவது அதன் இராஜதந்திர மரபிற்கு ஏற்புடையதல்ல.
துணிச்சலான இராஜதந்திர முடிவுகளை எடுக்கத் தவறும்பட்சத்தில், ஈரானியக் கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்ட இந்தச் சம்பவம் இலங்கையின் இறையாண்மையின் மீது விழுந்த அழியாத வடுவாகவே வரலாற்றில் நிலைத்திருக்கும். மேலும், இது போன்ற நிகழ்வுகள் தொடருமாயின், இலங்கைத்தீவு தனது கடல்சார் உரிமைகளை நிலைநாட்ட முடியாதவொரு பலவீனமான நிலப்பரப்பாக சர்வதேச வரைபடத்தில் அடையாளப்படுத்தப்படும் அபாயம் உள்ளது.





