தந்தை செல்வாவின் கனவும் தமிழரசுக்கட்சியின் சிதைவும்
தமிழரசுக் கட்சிக்கு வாக்களித்தவர்களுக்கு மாத்திரம் இந்த கவலை என்றில்லை. தமிழ் தேசிய அரசியலின் எதிர்காலம் குறித்துச் சிந்திக்கின்ற - கவலை கொள்கின்றவர்கள் அனைவருக்கும் இதுவொரு தாக்கம் செலுத்தும் விடயமாகவே இருந்து கொண்டிருக்கிறது.
தமிழர்களின் அரசியல் வரலாற்றில் 'தந்தை செல்வா' எனப் போற்றப்படும் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் அவர்கள் ஒரு சகாப்தம். மார்ச் 31ஆம் திகதி அவரது 128ஆவது பிறந்த தினத்தை நினைவுகூரும் இவ்வேளையில், அவர் எந்த உயரிய நோக்கத்திற்காக இலங்கைத் தமிழரசுக் கட்சியைத் தோற்றுவித்தாரோ, அந்த நோக்கம் தற்போது உட்கட்சிப் பூசல்களால் சிதைந்து போகும் அபாயத்தில் உள்ளது.
முக்கால் நூற்றாண்டு கால வரலாற்றைக் கொண்ட ஒரு அரசியல் பேரியக்கமான தமிழரசுக்கட்சி கொள்கை ரீதியான விவாதங்களை விடுத்து, நீதிமன்றப் படிக்கட்டுகளிலும் தனிநபர் விமர்சனங்களிலும் தேங்கி நிற்பது தந்தை செல்வாவின் ஆன்மாவிற்குச் செய்யும் துரோகமாகவே அமையும்.
தமிழரசுக் கட்சிக்குள் அண்மைக்காலமாகத் தொடங்கியுள்ள பூசல்கள் அந்தக் கட்சியை நீதிமன்றத்தில் நிறுத்தியுள்ளது மாத்திரமன்றி, பொதுவெளியில் ஒருவருக்கொருவர் சேறு பூசிக்கொள்ளும் கலாசாரத்தையும் உருவாக்கியிருக்கிறது.
கட்சியின் தலைமைத்துவத் தெரிவு ஆரோக்கியமான முறையில் ஒருமித்த கருத்துடன் முடிந்திருந்தால், தற்போது கட்சி இந்த நிலைக்கு வந்திருக்காது. தலைமைத்துவத்திற்காக வாக்கெடுப்பு நடத்த எடுத்த முடிவே கட்சியைப் பிளவுபடுத்தியிருக்கிறது.
ஒரு பக்கத்தில் நீதிமன்ற வழக்குகள் தொடர, மறுபக்கத்தில் கட்சிக்குள் 'களையெடுப்புக்கள்' தீவிரமாக நடக்கின்றன. இவையெல்லாம் தமிழரசுக் கட்சியின் எதிர்காலம் பற்றிய அச்சத்தை அதன் ஆதரவாளர்களுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழரசுக் கட்சிக்கு வாக்களித்தவர்களுக்கு மாத்திரம் இந்த கவலை என்றில்லை. தமிழ் தேசிய அரசியலின் எதிர்காலம் குறித்துச் சிந்திக்கின்ற - கவலை கொள்கின்றவர்கள் அனைவருக்கும் இதுவொரு தாக்கம் செலுத்தும் விடயமாகவே இருந்து கொண்டிருக்கிறது.
ஏனென்றால், முக்கால் நூற்றாண்டு வரலாற்றைக்கொண்ட தமிழரசுக் கட்சி சிதைந்து போவதோ அல்லது வலுவிழந்து போவதோ தமிழ்த் தேசிய அரசியலின் ஒட்டுமொத்த எதிர்காலத்திற்கும் ஆபத்தானது.
இந்தக் கட்சி சரியான திசையில் பயணிக்க வேண்டும் - சரியான பாதையில் பயணிக்க வேண்டும் - தமிழரின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் சக்தியாக மாற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, அதனுடன் போட்டி அரசியல் செய்யும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்களுக்கும்கூட இருக்கிறது.
கொள்கை ரீதியாக முரண்பட்டிருந்தாலும், ஒரு வரலாற்றுப் பேரியக்கத்தின் வீழ்ச்சியை அல்லது அழிவைத் தமிழ் தேசியத்தின் மீது பற்றுள்ள எவராலும் சகித்துக்கொள்ள முடியாது. ஆனால், இந்த அபாயகரமான சூழலைத் தமிழரசுக் கட்சிக்குள் இருப்பவர்கள் எந்தளவுக்குப் புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதுதான் மிகப்பெரிய கேள்விக்குறியாகும். அவர்கள் உள்ளக மோதல்கள் மற்றும் முரண்பாடுகளில் மாத்திரம் கவனம் செலுத்துகின்ற நிலை தொடர்வதால், அதன் பிரதான இலக்கு தவறவிடப்படுகிறது.
அரசியல் என்பது தேங்கி நிற்கும் குட்டை அல்ல, அது நீரோடை போல ஓடிக்கொண்டிருந்தால் மாத்திரமே இலக்கை அடையும். இல்லாவிட்டால் அது ஆங்காங்கே தேங்கியிருக்கும் வெள்ளமாகவோ அல்லது சகதியாகவோ கருதப்பட்டு விடும்.
ஆறு போல பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தால் மாத்திரமே அரசியலில் வெற்றி பெறமுடியும். கடந்த 17 ஆண்டுகளில் தமிழரசுக் கட்சி தமிழ்த் தேசிய உணர்வை வைத்துத் தேர்தல் வெற்றிகளைப் பெற்றதே தவிர, கட்சியை வலுப்படுத்தி மக்களை ஒன்றிணைத்து அந்த ஆதரவுடன் வெற்றி பெற்றதாகக் கருத முடியாது.
கடந்த தேர்தல்களில் தமிழ் வாக்காளர்கள் திசை திரும்பியது அந்தக் கட்சிக்கு அதிர்ச்சியைக் கொடுத்த போதும் அவர்கள் திருந்துவதாக இல்லை. தாங்கள் வாக்களித்து ஆணை வழங்குகின்ற போதிலும் தெளிவான, தீர்க்கமான அரசியலை முன்னெடுக்கவில்லை என்ற ஏக்கமும் கவலையும் மக்களிடத்தில் இருந்ததால் தான், தமிழ் வாக்காளர்கள் பலர் வேறொரு தெரிவைப் பரீட்சிக்கின்ற நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.
இதனைப் புரிந்துகொண்டு தமிழரசுக் கட்சி செயற்பட்டிருக்க வேண்டும். மாறாக, அது உள்ளக முரண்பாடுகளில் தீவிர கவனம் செலுத்தத் தொடங்கியதன் விளைவாகப் பிரதான எதிரியை மறந்து விட்டது. பிரதான இலக்கையும் இலட்சியத்தையும் அது தொலைத்து விட்டது.
அடுத்த தேர்தலுக்கு இடையில் இந்த நிலையை மாற்றியமைக்கத் தவறினால், தமிழரசுக் கட்சியினால் பெரும் வீழ்ச்சியொன்றிலிருந்து தப்பிக்க முடியாமல் போகும். இப்போது சிறிதரன் மற்றும் சுமந்திரன் ஆகிய இரு ஆளுமைகளுக்கு இடையிலான தனிநபர் மோதல் பகிரங்கமாகியுள்ளது.
இவர்களை வைத்து இப்போது அடுத்த கட்டத்திலும் முரண்பாடுகள் தோன்றுகின்றன. சுமந்திரனுக்கு ஆதரவான தரப்புக்கள் ஒரு பக்கம், சிறிதரனுக்கு ஆதரவான தரப்புகள் மற்றொரு பக்கம் நிற்க, இந்த மோதல்கள் வடக்கில் மாத்திரமல்ல கிழக்கிலும் பரவலாகி வருகின்றன.
தீவிர தமிழ் தேசிய அரசியல் அல்லது விடுதலைப் போராட்டத்துடன் இணைந்த அரசியல் செயற்பாடே சிறிதரனின் பலம். அதனை வைத்து அவர் கிளிநொச்சியில் தனது வாக்கு வங்கியை வலுப்படுத்தி வைத்திருக்கிறார்.
ஆனால், சுமந்திரன் இதில் பலவீனமாகவே இருக்கிறார். அவர் கிளிநொச்சியில் சிறிதரனைத் தோற்கடிப்பதற்கு பல முனைகளில் செயற்பாடுகளை முன்னெடுக்கிறார்.
அதேவேளை, சுமந்திரனை கட்சிக்குள் தோற்கடிப்பது கடினம் என்பது சிறிதரனுக்குத் தெரிந்து விட்டது. அரசியல் ரீதியாகச் சுமந்திரன் கட்சிக்குள் தன்னை வலுப்படுத்தியிருக்கிறார்; கட்சியின் யாப்பையும் தன்னிடமுள்ள அதிகாரத்தையும் கொண்டு கட்சியைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்.
இந்த நிலையில், சிறிதரன் தனக்கான அரசியல் தளத்தை மேலும் வலுப்படுத்த அடிமட்ட மக்களுடன் நெருங்கிச் செயற்படத் தொடங்கியிருக்கிறார். சுமந்திரன்கூட அவ்வாறான ஒரு நகர்வையே முன்னெடுக்கிறார்.
இது தமிழரசுக் கட்சியின் இரண்டு பிரதான தலைவர்கள் அடிமட்டத்தை நோக்கி இறங்கிச் செல்வதைக் காட்டுகிறது. 'கீரைக்கடைக்கும் எதிர்க்கடை வேண்டும்' என்பது போல நடக்கின்ற இந்த காரியங்கள், தமிழ் தேசிய அரசியலுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளப்படுமேயானால் அது ஆரோக்கியமானதாக அமையலாம்.
தந்தை செல்வா எந்த நோக்கத்திற்காகத் தமிழரசுக் கட்சியைத் தொடங்கினாரோ - அதாவது தமிழர் தாயகக் கோட்பாடு, தன்னாட்சி உரிமை மற்றும் அரசியல் தூய்மை - அந்த நோக்கங்கள் தற்போது சுயபரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டியவை.
மார்ச் 31ஆம் திகதி தந்தை செல்வாவின் சிலைக்கு மாலை அணிவிப்பதோடு கடமை முடிந்துவிடுவதில்லை. அவர் காட்டிய அறவழிப் போராட்ட குணமும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும் இன்று கட்சித் தலைவர்களிடம் மருந்துக்கும் இல்லை.
அடுத்த தேர்தலுக்கு முன்னர் இந்த உட்கட்சி மோதல்களை முடிவுக்குக் கொண்டு வராவிட்டால், தமிழரசுக் கட்சி ஒரு பாரிய வீழ்ச்சியைச் சந்திப்பதைத் தவிர்க்க முடியாது.
தந்தை செல்வாவின் கனவை நனவாக்க வேண்டுமானால், தலைவர்கள் தங்கள் ஈகோக்களைத் துறந்து, தமிழ்த் தேசியத்தின் நலனுக்காக ஒன்றிணைய வேண்டும். அதுவே இந்த பிறந்த நாளில் அவருக்குச் செய்யும் உண்மையான கௌரவமாகும்.





