போர்ச் சூழலுக்குள் பொருளாதார நிலை
ஹோர்மூஸ் நீரிணை ஒரு வாரத்திற்கு மேல் மூடியிருந்தால் அது உலகளாவிய பொருளாதாரப் பெருமந்தத்திற்கு வழிவகுக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே வெடித்துள்ள நேரடிப் போர், உலக நாடுகளைப் போலவே இலங்கையையும் ஒரு பாரிய பொருளாதார மற்றும் இராஜதந்திர நெருக்கடிக்குள் தள்ளியிருக்கிறது. இந்த போர் வெறும் இரு நாடுகளுக்கு இடையிலான மோதலாக மட்டும் நின்றுவிடாமல், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் தலையீட்டினால் ஒரு பிராந்தியப் போராக உருவெடுத்துள்ளது.
நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ரஷ்யா - உக்ரேன் போர் வெடித்தபோது ஏற்பட்ட பொருளாதார அதிர்வுகளிலிருந்து உலகம் இன்னும் மீளாத நிலையில், தற்போது மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள இந்தப் பதற்றம் இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு ஒரு பேரிடியாக அமைந்துள்ளது.
உக்ரேன் போரினால் கோதுமை, எரிசக்தி மற்றும் சமையல் எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்ட சிக்கல்களைப் போலவே, தற்போதைய போரும் உலகளாவிய விநியோகச் சங்கிலியைத் துண்டித்து, குறிப்பாக எரிபொருள் விலையேற்றத்தின் ஊடாக இலங்கையை நிலைகுலையச் செய்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகக் காணப்பட்ட கொதிநிலை இப்போது போராக வெடித்திருப்பது, எதிர்பார்க்கப்பட்ட ஒரு விடயமாக இருந்தாலும், இவ்வளவு மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று எவரும் கணிக்கவில்லை.
இலங்கையைப் பொறுத்தவரை, இந்தப் போரின் மிக நேரடியான மற்றும் ஆபத்தான தாக்கம் அதன் வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையில் எதிரொலிக்கிறது. மத்திய கிழக்கு நாடுகளில் சுமார் 15 இலட்சம் இலங்கைத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
2025ஆம் ஆண்டில் மட்டும் இவர்கள் சுமார் 8 பில்லியன் டொலர்களை நாட்டுக்கு அந்நியச் செலாவணியாக அனுப்பி வைத்திருந்தனர். இலங்கையின் அந்நியச் செலாவணி கையிருப்பை நிலைநிறுத்துவதற்கும், பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டெழுவதற்கும் இவர்களது வருமானமே முதுகெலும்பாக இருந்து வருகிறது.
ஆனால், போர் நெருக்கடியினால் இந்த தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதுடன், அவர்களின் வேலைவாய்ப்பும் நிச்சயமற்றதாக மாறியுள்ளது. போர் நீடிக்குமானால், அவர்களில் கணிசமானோர் தாயகம் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்படும். இது இலங்கைக்கு இருமுனைத் தாக்குதலாக அமையும்;.
ஒன்று, பில்லியன் கணக்கிலான அந்நியச் செலாவணி வருவாய் இழப்பு, மற்றொன்று உள்நாட்டில் திடீரென அதிகரிக்கும் வேலையில்லாத் திண்டாட்டம். இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான மக்களைக் குறுகிய காலத்தில் பாதுகாப்பாக நாட்டுக்கு அழைத்து வருவதுகூட இலங்கைக்கு இயலாத ஒரு காரியமாகவே இருக்கும்.
அடுத்ததாக, எரிபொருள் விநியோகம் மற்றும் அதன் விலை உயர்வு இலங்கையின் அனைத்து உற்பத்தித் துறைகளையும் முடக்கக்கூடும். ஹோர்மூஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதால், சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இலங்கை நேரடியாக ஹோர்மூஸ் வழியாக எண்ணெய் இறக்குமதி செய்யாவிட்டாலும், நாம் எரிபொருளைப் பெற்றுக்கொள்ளும் இந்தியா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகள் இந்த வழித்தடத்தையே பெரிதும் நம்பியுள்ளன.
இதனால் ஏற்படும் விநியோகத் தட்டுப்பாடு இலங்கையில் எரிபொருள் வரிசைகளை மீண்டும் உருவாக்கியுள்ளது. மாற்று வழிகளில் நைஜீரியா அல்லது அமெரிக்காவிலிருந்து எரிபொருளைப் பெற முயற்சிப்பது மேலதிக போக்குவரத்துச் செலவுகளை ஏற்படுத்தும், இது உள்நாட்டில் மின்சாரக் கட்டணம், போக்குவரத்துச் செலவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலையைத் தாங்க முடியாத அளவுக்கு உயர்த்தும். பொருளாதார ஆய்வாளர் இம்ரான் புர்கான் குறிப்பிடுவது போல, இலங்கையிடம் தற்போது ஒரு மாத காலத்திற்குத் தேவையான எரிபொருள் கையிருப்பு மட்டுமே உள்ளது. போர் வாரக்கணக்கில் நீடித்தால், நாடு மீண்டும் ஒரு பாரிய எரிபொருள் நெருக்கடிக்குள் தள்ளப்படுவது தவிர்க்க முடியாதது.
இலங்கையின் பாரம்பரிய ஏற்றுமதித் துறையான தேயிலைத் துறையும் இந்த போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் தேயிலையை அதிகளவில் கொள்வனவு செய்யும் நாடுகளில் ஈரானும் ஏனைய மத்திய கிழக்கு நாடுகளும் முக்கியமானவை.
போர் காரணமாக ஏற்றுமதித் தடைகள் ஏற்படும்போது, அது அந்நியச் செலாவணி இழப்பைத் தாண்டி, உள்நாட்டுத் தேயிலை உற்பத்தியாளர்களையும் அதனை நம்பியிருக்கும் இலட்சக்கணக்கான தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் சீர்குலைக்கும்.
அத்துடன், இலங்கையின் பொருளாதார மீட்சியில் முக்கிய பங்கு வகிக்கும் சுற்றுலாத்துறைக்கு இந்தப் போர் ஒரு பெரும் முட்டுக்கட்டையாக அமைந்துள்ளது. இந்த ஆண்டில் 3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து 5 பில்லியன் டொலர்களை வருமானமாகப் பெற அரசாங்கம் திட்டமிட்டிருந்தது.
ஆண்டின் முதல் இரு மாதங்களில் 5 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்திருந்த நிலையில், பெப்ரவரி 28 அன்று தொடங்கிய போர் அந்த நம்பிக்கையைச் சிதறடித்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் பயணிக்கும் வான்வெளிகள் மூடப்பட்டுள்ளதால், வாரம் ஒன்றுக்கு 15 மில்லியன் டொலர் வருமான இழப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
மேலும், இலங்கைக்கு வந்திருந்த 10 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் திரும்பிச் செல்ல முடியாமல் சிக்கியிருப்பது சர்வதேச ரீதியில் சுற்றுலாத்துறையின் நம்பிக்கையைக் குறைக்கும். டுபாயில் சிக்கியுள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு அந்நாட்டு அரசு தங்குமிடக் கட்டண விலக்களித்துள்ள போதிலும், இலங்கையினால் அத்தகைய சலுகைகளை வழங்க முடியாமல் 14 நாட்கள் வீசா நீடிப்பை மட்டுமே வழங்க முடிந்துள்ளது.
வரலாற்று ரீதியாகப் பார்த்தால், சர்வதேச போர்ச் சூழல்கள் இலங்கையின் அரசியல் ஸ்திரத்தன்மையையே மாற்றியமைத்துள்ளன. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவுக்கும், அதனைத் தொடர்ந்த மக்கள் எழுச்சிக்கும் உக்ரேன் போரினால் ஏற்பட்ட எரிபொருள் மற்றும் உர நெருக்கடியே முக்கிய காரணமாக அமைந்தது.
69 இலட்சம் மக்களின் ஆணையுடன் ஆட்சிக்கு வந்த ஒரு தலைவரையே வீட்டுக்கு அனுப்பிய போர்ச் சூழல், இப்போதும் அத்தகைய ஒரு நிலையை ஏற்படுத்தாது என்று உறுதியாகக் கூற முடியாதுள்ளது.
ஹோர்மூஸ் நீரிணை ஒரு வாரத்திற்கு மேல் மூடியிருந்தால் அது உலகளாவிய பொருளாதாரப் பெருமந்தத்திற்கு வழிவகுக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இத்தகைய நெருக்கடி நிலையில், இலங்கை போன்ற வளரும் நாடுகள் மாற்று எரிசக்தி வளங்களை நோக்கி நகர வேண்டிய அவசியத்தை இந்த போர் உணர்த்தியுள்ளது.
எவ்வாறாயினும், தற்போதைய இக்கட்டான சூழலில் இருந்து இலங்கை தப்பித்துக்கொள்வது என்பது, மத்திய கிழக்கில் அமைதி திரும்புவதிலும், சர்வதேச நாடுகள் இந்த மோதலை எவ்வளவு விரைவாகக் கட்டுப்படுத்துகின்றன என்பதிலுமே தங்கியுள்ளது.
இல்லையேல், மீண்டெழும் கனவில் இருக்கும் இலங்கைப் பொருளாதாரம் மீண்டும் ஒரு நீண்டகாலப் பின்னடைவைச் சந்திப்பதுடன், எதிர்பாராத அரசியல் மற்றும் சமூக விளைவுகளையும் எதிர்கொள்ள நேரிடும். ஆனால் அதற்கான தயார்ப்படுத்தல்கள் அரசாங்கத்திடமும் இல்லை. எதிரணியிடமும் இல்லை என்பது கவலைக்குரியதாகும்.





