அரச வைத்தியசாலைகளில் ஒட்சிசன் பயன்பாடு முதலாவது தேசிய வழிகாட்டல் வெளியீடு
திஸ்ஸமஹாராம, அவிசாவளை, உடுகம மற்றும் கேகாலை ஆகிய வைத்தியசாலைகளில் தற்போது ஒட்சிசன் உற்பத்தி அலகுகள் நிறுவப்பட்டுள்ளன.
அரச வைத்தியசாலைகளில் ஒட்சிசன் பயன்பாட்டை முறைப்படுத்தும் நோக்கில், இலங்கையின் முதலாவது தேசிய வழிகாட்டிக் கையேடு உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
கொழும்பில் அண்மையில் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது. யுனிசெப் அமைப்பின் ஒத்துழைப்புடன் சுகாதார அமைச்சு மேற்கொண்ட ஆய்வின் முடிவாக இந்த வழிகாட்டல் கையேடு தொகுக்கப்பட்டுள்ளது.
இதனை நடைமுறைப்படுத்த , சுகாதாரப் பணியாளர்களுக்கான விசேட பயிற்சித் திட்டங்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக 100 நிபுணர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்கள் ஊடாக மாவட்ட மற்றும் மாகாண மட்டத்திலுள்ள ஏனைய பணியாளர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்படவுள்ளன.
நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, அரச வைத்தியசாலைகளில் ஒட்சிசன் பயன்பாட்டிற்காக அரசாங்கம் ஆண்டுதோறும் பெருமளவு நிதியைச் செலவிடுகிறது. ஆகையால் இவ்வாறான முறையான வழிகாட்டல்கள் மூலம் தேவையற்ற விரயங்களைக் குறைத்து, நோயாளர்களுக்குத் தரமான சிகிச்சையை வழங்க முடியும். மேலும், திஸ்ஸமஹாராம, அவிசாவளை, உடுகம மற்றும் கேகாலை ஆகிய வைத்தியசாலைகளில் தற்போது ஒட்சிசன் உற்பத்தி அலகுகள் நிறுவப்பட்டுள்ளன.
மேற்படி பிரிவுகளின் மூலம் அவ்வைத்தியசாலைகளுக்கு அவசியமான ஒட்சிசன் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள முடிவதுடன், மேலதிக ஒட்சிசனை ஏனைய வைத்தியசாலைகளுக்கும் வழங்கக் கூடியதாக உள்ளது. அத்தோடு இந்த வழிகாட்டல்கள் மற்றும் பயிற்சித் திட்டங்கள் சுகாதாரத் துறையினரின் நிபுணத்துவத்தை மேம்படுத்த உதவும் என்றார்.





