உணவு பாதுகாப்பின்மை நெருக்கடிக்குள் இலங்கை சிக்கும்: சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக ஆய்வாளர்
2022 ஆம் ஆண்டு இலங்கை முகங்கொடுத்த தீவிர பொருளாதார நெருக்கடி மற்றும் அதனைத்தொடர்ந்து ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் வரிசை யுகம் என்பவற்றின் பின்னர், வெளியக அதிர்ச்சிகளைக் கையாள்வதற்கான நாட்டின் இயலுமை பலவீனமான நிலையிலேயே உள்ளது.
2022 ஆம் ஆண்டு முகங்கொடுத்த தீவிர பொருளாதார நெருக்கடியின் பின்னர், வெளியக அதிர்ச்சிகளைக் கையாள்வதற்கான இலங்கையின் இயலுமை பலவீனமான நிலையிலேயே உள்ளது. இத்தகைய பின்னணியில் மத்திய கிழக்கு மோதல்கள் தொடர்ந்து நீடித்தால், அது நாட்டின் பேரண்டப்பொருளாதார ஸ்திரத்தன்மையை சிதைப்பதுடன், நாட்டை உணவுப்பாதுகாப்பின்மை மற்றும் உயர் வாழ்க்கைச்செலவு நெருக்கடிக்குள் தள்ளும் என சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் தெற்காசிய ஆய்வுகள் நிலைய ஆய்வாளர் கலாநிதி ரஜினி கமகே எச்சரித்துள்ளார்.
மத்திய கிழக்கு மோதல்களால் இலங்கையின் பொருளாதாரத்தின் மீது ஏற்படக்கூடிய தாக்கங்கள் தொடர்பில் ரஜினி கமகேவினால் வெளியிடப்பட்டிருக்கும் ஆய்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் கூட்டுத்தாக்குதல் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்டிருக்கும் போரின் விளைவாக ஹோர்முஸ் நீரிணையை மையப்படுத்தியிருந்த உலகளாவிய எரிபொருள் விநியோகச்சங்கிலி மற்றும் கப்பல் போக்குவரத்துப்பாதை என்பவற்றில் இடையூறுகள் ஏற்பட்டிருக்கின்றன.
அதனையடுத்து இலங்கை எரிபொருள் பங்கீட்டு முறைமையை (கோட்டா முறைமை) நடைமுறைப்படுத்துவதற்குத் தீர்மானித்தது. இறக்குமதி செய்யப்படும் எரிபொருள், உரம் மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களில் இலங்கை பெருமளவுக்குத் தங்கியிருப்பதனால், அது தற்போதைய வெளியக அதிர்ச்சிகளால் வெகுவாகப் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளது.
2022 ஆம் ஆண்டு இலங்கை முகங்கொடுத்த தீவிர பொருளாதார நெருக்கடி மற்றும் அதனைத்தொடர்ந்து ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் வரிசை யுகம் என்பவற்றின் பின்னர், வெளியக அதிர்ச்சிகளைக் கையாள்வதற்கான நாட்டின் இயலுமை பலவீனமான நிலையிலேயே உள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில் ஹோர்முஸ் நீரிணை பதற்றங்களுக்கு மத்தியில் உணவுப்பொருட்களில் விலையேற்றத்தினால் வெகுவாகப் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் ஒன்றாக இலங்கை அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த நிலைவரம் நாட்டின் பேரண்டப்பொருளாதார ஸ்திரத்தன்மையை சிதைக்கும் அபாயத்தைக் கொண்டிருப்பதுடன், நாட்டை உணவுப்பாதுகாப்பின்மை மற்றும் உயர் வாழ்க்கைச்செலவு நெருக்கடிக்குள் தள்ளக்கூடும்.
அதேவேளை இந்நெருக்கடியைக் கையாள்வதற்கு மின்சார நுகர்வை சுமார் 25 சதவீதத்தினால் குறைத்தல், கியூ.ஆர் குறியீடு அடிப்படையிலான எரிபொருள் பங்கீட்டு முறைமை, புதன்கிழமையை அரச நிறுவனங்களுக்கான சிறப்பு விடுமுறை தினமாக அறிவித்தமை, விளம்பர மற்றும் வீதி விளக்குகளைக் குறிப்பிட்ட நேரத்தின் பின்னர் அணைத்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.
இதனிடையே எரிபொருள் விலையேற்றம், சுற்றுலாத்துறை மந்தநிலை மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இலங்கைக்கு அனுப்பிவைக்கப்படும் பணவனுப்பல்களில் ஏற்படக்கூடிய வீழ்ச்சி என்பன நாட்டின் பொருளாதாரத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
குறிப்பாக அரச நிறுவனங்களை மூடுதல் மற்றும் பொதுப்போக்குவரத்து சேவையை மட்டுப்படுத்தல் போன்ற உலகளாவிய நெருக்கடியின் பக்கவிளைவுகள், டிஜிட்டல் முறைமைக்கு நிலைமாற்றமடைய முடியாத நிலையில் உள்ள மற்றும் அன்றாட வாடிக்கையாளர்களை நம்பியிருக்கும் சிறு வணிகங்களைப் பெரிதும் பாதிக்கும்.
தற்போது எரிபொருள் மற்றும் மின்கட்டண உயர்வு என்பன ஏற்கனவே உணவு மற்றும் போக்குவரத்து விலைகள், கட்டணங்களில் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது. ஆகவே போர் தொடரும் பட்சத்தில் வாழ்க்கைச்செலவு மேலும் அதிகரிக்கும் என எதிர்வுகூறலாம். ஏற்கனவே இலகுவில் பாதிக்கப்படக்கூடிய நலிவுற்ற நிலையில் உள்ள மக்கள் மத்தியில் இந்த அழுத்தங்கள் கடுமையான பாதிப்புக்களை ஏற்படுத்தும்.
எவ்வாறாயினும் மத்திய கிழக்கு மோதல்கள் விரைவில் முடிவுக்கு வந்து வர்த்தகப் பாதைகள் வழமை நிலைக்குத் திரும்பினாலும், உலகளாவிய பொருளாதார நெருக்கடியின் பின்விளைவுகள் நீண்டகாலத்துக்கு நீடிக்கும் என அதில் எச்சரித்துள்ளார்.





