உயிர்த்த ஞாயிறு தின உண்மை வெகுவிரைவில் வெளிவரும் - ரில்வின் சில்வா
அரசாங்கத்தின் மீது திட்டமிட்ட வகையில் குற்றச்சாட்டுக்கள், விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்கள் சம்பவம் பற்றி முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் ஒருசில பிரதான சூத்திரதாரிகள், பிரதான சூத்திரதாரி யார்? என்பது பற்றி நூல் வெளியிடுகிறார்கள். நூல் வெளியீட்டு நிகழ்வுக்கு பல பிரதான சூத்திரதாரிகள் சென்றிருந்தார்கள். உண்மை வெகுவிரைவில் வெளிவரும். ஆகவே கலக்கமடைய தேவையில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
வவுனியாவில் 05-04-2026 அன்று நடைபெற்ற 55 ஆவது ஏப்ரல் வீரர்கள் ஞாபகார்த்த நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, மக்களுக்காகவே எமது தோழர்கள் உயிர்நீத்தார்கள். 1970ஆம் ஆண்டு காலப்பகுதியில் அரசியல் உரிமைகளுக்காக நாங்கள் ஜனநாயக ரீதியில் போராட்டத்தில் ஈடுபட்டோம்.எமது போராட்டம் மனித குலத்துக்கு எதிரானதாக அமையவில்லை. நாங்கள் எந்தவொரு இனத்துக்கோ அல்லது மதத்துக்கோ எதிரானதல்ல,
எமது ஜனநாயக போராட்டத்தை 1970 ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த அரசாங்கம் எமக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்து விட்டு எமது போராட்டத்தை ஆயுதப் போராட்டமாக மாற்றியமைத்தது. அந்த போராட்டத்தில் உயிரிழந்த எமது தோழர்கள் நாட்டுக்காக தியாகம் செய்தார்கள்.
பாரிய போராட்டத்துக்கு பின்னர் ஜனநாயக ரீதியில் ஆட்சியமைத்துள்ளோம். நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளியவர்கள் இன்று பொருளாதார மேம்பாடு பற்றி பேசுகிறார்கள்.பொருளாதார பாதிப்பில் இருந்து மீள்வதற்கு கடுமையாக செயற்பட வேண்டும்.அனைவரும் அதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.
நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளிய எதிர்க்கட்சியினர் இன்று அரசாங்கத்துக்கு எதிராக ஒன்றிணைந்துள்ளார்கள். இன்று தூய்மையானவர்களை போன்று ஊழலுக்கு எதிராக பேசுகிறார்கள். ஒரு குடும்பத்தின் ஊழல் மோசடியால் நாடு வங்குரோத்து நிலையடைந்தது என்பதை உயர்நீதிமன்றம் தெளிவாக அறிவித்துள்ளது. இதன் பின்னரும் அவர்கள் ஊழல் பற்றி பேசுவது ஆச்சியரியமாக உள்ளது.
நடப்பு உலகளாவிய நிலைவரங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும்.மத்திய கிழக்கின் மோதல் நிலைமையை அரசாங்கம் என்ற ரீதியில் எம்மால் கட்டுப்படுத்த முடியாது. அந்த மோதல்களால் ஏற்படும் நெருக்கடிகளை முகாமைத்துவம் செய்வதற்கு கூடிய அவதானம் செலுத்த வேண்டும். எரிபொருள் தட்டுப்பாட்டை முகாமைத்துவம் செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டுள்ளன.
உலகளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் மக்கள் கூட்டுப்பொறுப்புடன் செயற்பட வேண்டும். நெருக்கடி நிலைமையின் போது எரிபொருளை பதுக்கி வைத்து அவற்றை அதிக விலைக்கு விற்று பயனடைய வேண்டும் என்று நினைப்பது முற்றிலும் தவறானது. நாடு என்ற ரீதியில் மாற்றமடைய வேண்டுமாயின் தனிநபரின் செயற்பாடுகள் மற்றும் சிந்தனைகளில் மாற்றம் ஏற்பட வேண்டும்.
அனைத்தையும் எதிர்க்கும் எதிர்க்கட்சியினர் தான் இன்று உள்ளார்கள். உலகில் வேறெந்த நாடுகளிலும் இவ்வாறானதொரு எதிர்க்கட்சிகள் இல்லை. நாட்டை அழித்தாவது ஆட்சியை கைப்பற்றவே நினைக்கிறார்கள். பொய்யான குற்றச்சாட்டுக்களை தினசரி முன்வைக்கிறார்கள். ஒருசில ஊடகங்கள் அந்த பொய்களுக்கு முன்னுரிமை வழங்குகின்றன.
ஏப்ரல் மாதத்துக்கு பின்னர் அரசாங்கம் நெருக்கடிக்குள்ளாகும்.மக்கள் வீதிக்கு இறங்குவார்கள் என்று குறிப்பிட்டார்கள். இந்த மாதத்தில் அவர்களின் எண்ணம் நிறைவேறுமா என்பதை நானும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் வீதிக்கு இறங்கமாட்டார்கள்.மாறாக அரசாங்கத்தை பாதுகாக்கவே வீதிக்கு இறங்குவார்கள்.
மத்திய கிழக்கின் மோதல் நிலைமையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது என்பதை நாங்கள் நன்கு அறிவோம். நெருக்கடி நிலைமையை முகாமைத்துவம் செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். மக்களை நெருக்கடிக்குள்ளாக்கி அதில் சுகபோகமாக வாழும் மனநிலை அரசாங்கத்தில் எவருக்கும் இல்லை. ஏனெனில் இது மக்களாட்சி அரசாங்கம்.
உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்கள் சம்பவம் பற்றி முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் ஒருசில பிரதான சூத்திரதாரிகள், பிரதான சூத்திரதாரி யார்? என்பது பற்றி நூல் வெளியிடுகிறார்கள். நூல் வெளியீட்டு நிகழ்வுக்கு பல பிரதான சூத்திரதாரிகள் சென்றிருந்தார்கள். உண்மை வெகுவிரைவில் வெளிவரும். ஆகவே கலக்கமடைய தேவையில்லை.
அரசாங்கத்தின் மீது திட்டமிட்ட வகையில் குற்றச்சாட்டுக்கள், விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இவற்றுக்கு நாங்கள் ஒருபோதும் பலவீனமடைய மாட்டோம்.ஏனெனில் பல ஆண்டுகாலமாக நாங்கள் இவ்வாறான விமர்சனங்களுக்கு முகங்கொடுத்துள்ளோம். ஆகவே விமர்சனங்களால் அரசாங்கத்தை எவராலும் வீழ்த்த முடியாது என்பதை தெளிவாக குறிப்பிட்டுக் கொள்கிறேன். அனைத்து இன மக்களையும் ஒன்றிணைத்து அரசாங்கத்தை உருவாக்கியுள்ளோம். நாட்டின் அடிப்படை பிரச்சினைகளுக்கு நாங்கள் தீர்வு பெற்றுக்கொடுப்போம் என்றார்.





