ஏப்ரல் மாதத்தில் 9 எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்தடையும் - அமைச்சர் விஜித்த நம்பிக்கை
புதன்கிழமை விடுமுறையைத் தொடர்ந்து வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. நிலைமை சீரானதும் தேவையேற்படும் போது மீண்டும் வேலைகளை ஆரம்பிப்போம்.
ஏப்ரல் மாதத்தில் 9 எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்தடைய உள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியால் மாத்தறையில் 05-04-2026 அன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 55ஆவது ஏப்ரல் வீரர்கள் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், மத்திய கிழக்கில் ஏற்பட்ட போர்ச் சூழலால் உருவான எரிசக்தி நெருக்கடியை அரசாங்கம் தற்போது வெற்றிகரமாக முகாமைத்துவம் செய்துள்ளது.
எனவே, விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்ட புதன்கிழமையை மீண்டும் வேலை நாளாக மாற்றுவதற்கும், கியூ.ஆர் முறைமை மற்றும் ஒற்றை-இரட்டை இலக்க முறைமைகளை நீக்கி நிலைமையை வழமைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க முடியும்
நாங்கள் ஏற்கனவே புதிய வழிமுறைகளை அறிமுகப்படுத்தினோம். ஆரம்பத்தில் ஓரிரு வாரங்கள் சிரமங்கள் இருந்தன, வரிசைகள் உருவானது உண்மைதான். இதனால் உடனடி நடவடிக்கையாக கியூ.ஆர் முறைமை மற்றும் ஒற்றை-இரட்டை இலக்க விநியோக முறையை அறிமுகப்படுத்தினோம்.
புதன்கிழமையை விடுமுறை நாளாக அறிவித்தோம். தற்போது வரிசைகளை இல்லாமல் செய்துள்ளோம். கியூ.ஆர் மற்றும் ஒற்றை-இரட்டை முறைமைகள் தற்போது சிறப்பாகச் செயற்படுகின்றன.
இன்னும் சில நாட்களில் அந்த முறைகள் தேவையில்லை என்றால், அவற்றை நீக்குவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம். புதன்கிழமை விடுமுறையைத் தொடர்ந்து வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. நிலைமை சீரானதும் தேவையேற்படும் போது மீண்டும் வேலைகளை ஆரம்பிப்போம்.
எரிபொருள் கப்பல்கள் வருவதில் தாமதம் ஏற்பட்டதாலேயே அந்த நேரத்தில் அத்தகைய முடிவுகளை எடுத்தோம். ஆனால் இப்போது அச்சப்படத் தேவையில்லை. ஏப்ரல் மாதத்தில் மேலும் 9 கப்பல்கள் வரவுள்ளன என்றார்.





