5 ஆம், 6 ஆம் கட்ட மீளாய்வுகள் தொடர்பில் நாணய நிதியத்துடன் இணக்கப்பாடு
2025 இல் நிதிசெயலாற்றம் வலுவானதாக காணப்பட்டதுடன், அதற்கு மோட்டார் வாகன இறக்குமதி மீதான வரிவிதிப்பு பிரதான காரணமாக அமைந்தது.
விரிவாக்கப்பட்ட நிதிவசதி செயற்திட்டம் குறித்த 5 ஆம் மற்றும் 6 ஆம் கட்ட மீளாய்வுகள் தொடர்பில் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் உத்தியோகத்தர் மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இந்த இணக்கப்பாட்டுக்கு நாணய நிதிய இயக்குநர் சபையினால் ஒப்புதல் அளிக்கப்பட்டதன் பின்னர், இலங்கைக்கு சுமார் 700 மில்லியன் டொலர் நிதி விடுவிக்கப்படும்.
இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டம் தொடர்பான 5 ஆம் மற்றும் 6 ஆம் கட்ட மீளாய்வுகளை முன்னெடுப்பதற்காகவும், மத்திய கிழக்கு மோதல்களினால் இலங்கையின் பொருளாதாரம் முகங்கொடுத்திருக்கும் தாக்கங்கள் குறித்து ஆராய்வதற்காகவும் கடந்த மார்ச் மாதம் 26-03-2026 ஆம் திகதி நாட்டை வந்தடைந்த சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் குழுவினர், 08-04-2026 அன்றுவரை பரந்துபட்ட சந்திப்புக்களில் ஈடுபட்டனர்.
அதனைத்தொடர்ந்து இவ்விஜயத்தின்போது எட்டப்பட்ட இணக்கப்பாடுகள் மற்றும் மதிப்பீடுகள் தொடர்பில் அறிவிக்கும் நோக்கில் கொழும்பிலுள்ள மத்திய வங்கியின் கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான செயற்திட்டப் பிரதானி எவான் பபஜோர்ஜியோ சுட்டிக்காட்டிய முக்கிய விடயங்கள் வருமாறு:
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டம் குறித்த 5 ஆம் மற்றும் 6 ஆம் கட்ட மீளாய்வுகளை முடிவுறுத்துவதற்கு அவசியமான பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் உத்தியோகத்தர் மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இந்த இணக்கப்பாட்டுக்கு நாணய நிதிய இயக்குநர் சபையினால் ஒப்புதல் அளிக்கப்பட்டதன் பின்னர், இலங்கைக்கு சுமார் 700 மில்லியன் டொலர் நிதி விடுவிக்கப்படும்.
இருப்பினும் இலகுவாகப் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருப்பவர்களைப் பாதுகாக்கும் அதேவேளை, செலவினங்களை ஈடுசெய்யும் வகையில் மின்சாரக்கட்டணம் மற்றும் எரிபொருள் விலை நிர்ணயத்தை மேற்கொள்ளல் மற்றும் பல்தரப்புப் பங்காளிகளின் நிதியுதவிகளை உறுதிப்படுத்துவதற்கும், கடன்மறுசீரமைப்பில் எட்டப்பட்டுள்ள முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கும் ஏற்றவகையில் நிதி உத்தரவாத மதிப்பீட்டைப் பூர்த்திசெய்தல் ஆகிய இரு நிபந்தனைகள் நிறைவேற்றப்படுவதை அடிப்படையாகக்கொண்டே இயக்குநர் சபையினால் ஒப்புதல் அளிக்கப்படும்.
அதேவேளை அரசாங்கத்தினால் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்ட பொருளாதார மறுசீரமைப்புக்கள் நாட்டின் மீட்சிக்குப் பங்களிப்புச் செய்துள்ளன. அத்தோடு வெளிநாட்டுக்கையிருப்பு உயர்வடைந்து மார்ச் மாத இறுதியில் கையிருப்பின் பெறுமதி 7 பில்லியன் டொலர்களாகப் பதிவாகியுள்ளது. உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் வருமானத்திரட்சி என்பன எதிர்பார்க்கப்பட்டதை விடவும் முன்னேற்றத்தைப் பதிவுசெய்திருக்கின்றன. கடந்த ஆண்டு நாட்டின் பொருளாதாரம் 5 சதவீத வளர்ச்சியைப் பதிவுசெய்திருக்கிறது. பணவீக்கம் நேர்மறை நிலைக்குத் திரும்பியிருப்பதுடன், கடந்த மார்ச் மாதம் அது 2.2 சதவீதமாக உயர்வடைந்துள்ளது. அதேபோன்று 2025 இல் நிதிசெயலாற்றம் வலுவானதாக காணப்பட்டதுடன், அதற்கு மோட்டார் வாகன இறக்குமதி மீதான வரிவிதிப்பு பிரதான காரணமாக அமைந்தது.
மறுபுறம் மத்திய கிழக்கு மோதல்களால் இலங்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக எரிபொருள் விலைகள் உயர்வடைந்திருப்பதுடன் சுற்றுலாப்பயணிகளின் வருகையை ஊக்குவிக்கக்கூடிய விமானப்போக்குவரத்து சீர்குலைந்திருக்கிறது. அதுமாத்திரமன்றி மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் பணிபுரியும் இலங்கையர்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும் அரசாங்கம் வீடுகள் மற்றும் தொழில்துறைக்கு அவசியமான போதிய எரிபொருள் விநியோகத்தை உறுதிசெய்ததன் மூலம் பொருளாதாhர நடவடிக்கைகளில் ஏற்பட்ட இடையூறுகள் குறைக்கப்பட்டுள்ளன. அத்தோடு 'தித்வா' சூறாவளியினால் ஏற்பட்ட பாதிப்புக்களில் இருந்தும் செயற்திறன்மிக்கவகையில் மீண்டெழவேண்டியுள்ளது. இயற்கைப் பேரழிவு அபாயங்கள், தொடர்ச்சியான வர்த்தகக்கொள்கைசார் நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் மத்திய கிழக்கு மோதல்களால் நாட்டின் பொருளாதாரத்துக்கு ஏற்பட்டிருக்கும் அபாயங்கள், மறுசீரமைப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படவேண்டியதன் அவசியத்தைக் காண்பிக்கின்றன.
இவ்வாறானதொரு பின்னணியில் வருமானத்தை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் செயற்திறன்மிக்க செலவின செயன்முறையின் ஊடாக நிதிநிலையைத் தொடர்ந்து கட்டியெழுப்புவது அவசியமாகும் என வலியுறுத்தினார்.
இது இவ்வாறிருக்க பெரும்பாகப்பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கும், பொருளாதார மீட்சி மற்றும் சகலரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பவற்றை நோக்கிய பாதையில் பயணிப்பதற்கும் தற்போதைய மறுசீரமைப்புக்களைத் தொடர்ந்து முன்னெடுப்பது இன்றியமையாததாகும். அதுமாத்திரமன்றி தற்போது நிலவும் நிச்சயமற்ற சூழ்நிலையில் ஏற்படக்கூடிய வெளியக அதிர்ச்சிகளை சிறந்தமுறையில் எதிர்கொள்வதற்கு ஏற்றவாறு பொருளாதார நெகிழ்ச்சி தன்மையைப் பேணுவதும் அவசியமாகும்.





