மின் வழங்கல் பாதிப்புகளை தவிர்ப்பதில் அமைச்சர் தோல்வி - சத்தியலிங்கம் எம்.பி.
2025 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் 2026 ஆம் ஆண்டு பெப்ரவரி வரை இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி வெப்பப் பெறுமானத்தில் மிக குறைவாக இருந்ததாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு உறுதிப்படுத்தி உள்ளது.
தரம் குறைந்த நிலக்கரி மூலம் அண்ணளவாக 8.5 பில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மேலதிக நிதி இழப்புகளைத் தடுக்க எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்கு போதுமான மற்றும் தரமான நிலக்கரியைப் பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்தத் தவறியமை அதன் விளைவாக நிறுவன நட்டங்களைக் குறைத்தல் மற்றும் மின்வழங்கல் பாதிப்புகளைத் தவிர்த்தல் முதலியவற்றில் அமைச்சர் தோல்வியடைந்துள்ளதாக கருதுகிறோமென இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 10-04-2026 அன்று நடைபெற்ற வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, வலுசக்தி அமைச்சர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு அவர் மீது நம்பிக்கையில்லா முன்மொழிவை கொண்டுவரும்போது எமது கட்சியானது இவ்விடயம் ஏற்கனவே பொது முயற்சிகள் பற்றிய பாராளுமன்ற குழு ஏற்கனவே இது குறித்து விசாரித்து வருவதாலும் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இவ்விடயம் நிலுவையில் இருப்பதாலும், அவர் மீது விசாரணை முடிய முன்பு இந்த நம்பிக்கையில்லா முன்மொழிவு என்பது தேவையற்ற ஒன்று எனக்கருதியது. ஆனால் தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயங்களின் அடிப்படையில் இவ்விடயம் இலகுவாக கடந்து செல்லும் ஒன்று என்று கருதவில்லை.
இலங்கையின் வலுசக்தித் துறையின் நிர்வாகம் ஆனது வரலாற்று அடிப்படையில் தேசிய பாதுகாப்பு, பொருளியல் உறுதிப்பாடு, பொதுமக்கள் நம்பிக்கை ஆகியவற்றின் சங்கமமாகத் திகழ்கிறது. வலுசக்தி அமைச்சருக்கு எதிரான இந்த நம்பிக்கையில்லா முன்மொழிவு ஆனது அரசியல் அமைப்பு, நன்னடத்தை மற்றும் நிருவாகக் காரணங்களை அடிப்படை ஆகக்கொண்டது.
எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட 35 பாராளுமன்ற உறுப்பினர்களால் கையெழுத்திடப்பட்ட இந்த முன்மொழிவு ,மூன்று முதன்மையான கவலைகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்கள் பொதுமக்களின் நம்பிக்கையை பாதுகாக்கும் வகையிலும், நேர்மையுடனும் செயற்பட வேண்டும். அத்துடன் மனச்சாட்சிப்படி நடத்தல் மற்றும் தமது கடமைகளுக்குப் பொறுப்புக் கூறுதல் போன்ற விடயங்களை அமைச்சர் மீறியதாக கருதப்படுகின்றது.
நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிவையத்திற்குப் போதுமான மற்றும் தரமான நிலக்கரியைப் பெற்றுக்கொள்வதை உறுதிப் படுத்தத் தவறியமை அதன் விளைவாக நிறுவன நட்டங்களைக் குறைத்தல் மற்றும் மின் வளங்கல் பாதிப்புகளைத் தவிர்த்தல் முதலியவற்றில் அமைச்சர் தோல்வியடைந்துள்ளதாக கருதுகிறோம்.
2025 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் 2026 ஆம் ஆண்டு பெப்ரவரி வரை இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி வெப்பப் பெறுமானத்தில் மிக குறைவாக இருந்ததாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு உறுதிப்படுத்தி உள்ளது.இதன் காரணமாக நுரைச்சோலை மின் நிலையத்தில் 150 மெகாவாட்டிற்கும் அதிகமான மின் உற்பத்தி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இலங்கையின் இன்றைய எரிசக்தி நெருக்கடி மற்றும் அரசின் கொள்கைகளின் பின்னணியில் இந்த முன்மொழிவு ஆராயப்பட வேண்டும்.மின்சாரசபை பொறியியலாளர் சங்கத்தின் கருத்துப்படி எதிர்வரும், காலப்பகுதியில் வறட்சி நிலையினால் இந்த நிலக்கரி தட்டுப்பாடு பாரிய மின்வெட்டுக்கு வழிவகுக்கும் என்றார்.





