ஓய்வுபெற்ற இராணுவத்தினரை துப்பாக்கிதாரிகளாக்கப்படுகின்றனர் - பிரதி அமைச்சர் அருண ஜயசேகர
கடத்தல்களுக்கு ஆதரவாக ஒருசில அரச அதிகாரிகள், சட்டத்தரணிகள், வங்கி அதிகாரிகள் அல்லது கணக்காய்வு அதிகாரிகள் மற்றும் எமது பாதுகாப்புப் பிரிவுகளில் பணியாற்றியவர்களும் செயற்படுகின்றனர்.
பாதாள உலகம் என்று ஒன்று கிடையாது, சில குழுக்களே உள்ளனர். எம்மை அச்சுறுத்துவதற்காக ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களைத் துப்பாக்கிதாரிகளாகவும், தமது தேவைகளுக்காகவும் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
இது தொடர்பான அனைத்துத் தகவல்களையும் நாம் தற்போது திரட்டியுள்ளோம் என பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருண ஜயசேகர தெரிவித்தார்.
கடற்படையினரால் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட மீன்பிடிப் படகுகள்17-04-2026 அன்று மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்துக்குக் கொண்டுவரப்பட்டதை அடுத்து, குறித்த நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக விஜயம் செய்திருந்த பிரதி அமைச்சர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், சித்திரைப் புத்தாண்டின் பின்னர் பணிகளை ஆரம்பிக்கும் போதே போதைப்பொருள் கடத்தல் படகுகளைக் கைது செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த கால அரசியல்வாதிகளின் தலையீட்டுடனும், அனுமதியோடும் திட்டமிட்ட முறையில் உருவாக்கப்பட்ட இந்த போதைப்பொருள் கடத்தல், இன்று எமது இளைஞர்களின் எதிர்காலத்தைச் சீர்குலைக்கும் கொடிய நோயாக மாறியுள்ளது.
ஜனாதிபதியின் தலைமையில் பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் கடற்படையினர் இணைந்து சர்வதேசத் தகவல்களின் உதவியுடன் பாரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
2025 ஆம் ஆண்டில் மாத்திரம் கடற்படையினரால் 75,000 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இவ்வருடம் ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 50,000 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள்கள் மீட்கபப்பட்டுள்ளன. பாதாள உலககுழு செயற்பாடுகளில் போதைப்பொருள் கடத்தலும் ஒருபகுதியாக உள்ளது.
திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ஒரு தரப்பினரே இந்த போதைப்பொருள் கடத்தல்களிலும் ஈடுபடுகின்றனர். பாதாள உலகம் என்று ஒன்று கிடையாது, மாறாக சில துப்பாக்கிதாரிகளே உள்ளனர்.
கடத்தல்களுக்கு ஆதரவாக ஒருசில அரச அதிகாரிகள், சட்டத்தரணிகள், வங்கி அதிகாரிகள் அல்லது கணக்காய்வு அதிகாரிகள் மற்றும் எமது பாதுகாப்புப் பிரிவுகளில் பணியாற்றியவர்களும் செயற்படுகின்றனர்.
இவர்களுக்கு எதிராகச் செயல்படுபவர்களை அச்சுறுத்துவதற்காகவே, ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களைத் துப்பாக்கிதாரிகளாக இவர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
ஆகையால் ஓய்வுபெறும் இராணுவத்தினரை கண்காணிக்கவும், இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை சட்டத்தின் முன் நிறுத்த தேவையான தகவல்களை திரட்டியுள்ளோம் என்றார்.





