145 வீடுகளை இந்திய துணை ஜனாதிபதி நிகழ்நிலை ஊடாக கையப்பு
இதுவரைகாலமும் இலங்கைவாழ் இந்திய மக்களுக்கு இந்தியா 50 ஆயிரம் வீடுகளை வழங்கியுள்ளது.
இந்திய வீடமைப்பு திட்டத்தின் 03ஆம் கட்டத்தின் ஊடாக நிர்மாணிக்கப்பட்ட 145 வீடுகளை இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஸ்ணன் நிகழ்நிலை முறைமை ஊடாக கையளித்து வைத்தார்.
இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் சி.பி இராதாகிருஸ்ணன் இலங்கையில் உள்ள இந்தியவர்கள் வரவேற்கும் நிகழ்வில் கலந்துக் கொண்டார்.
பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் 19-04-2026 அன்று நடைபெற்ற நிகழ்வில் துணை ஜனாதிபதி சி.பி இராதாகிருஸ்ணன் பம்பலப்பிட்டி கதிரேசன் ஆலயம் மற்றும் வெள்ளவத்தை மயூராபதி அம்மன் ஆலய அறங்காவலர்கள் மற்றும் இந்திய வம்சாவளி அமைப்புக்களின் பிரதிநிதிகளால் மேள, தாளங்களுடன் வரவேற்கப்பட்டார்.
இலங்கை - இந்திய தேசிய கீதத்துடன் நிகழ்வு ஆரம்பமானது. நிகழ்வில் வரவேற்புரை நிகழ்த்திய இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா,இந்த சிறப்பு நிகழ்வில் பாரத துணை பிரதமரை வரவேற்பது நான் பெற்றதொரு பாக்கியமாகும்.இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டு ஆயிரம் கணக்காக மக்களும் இலங்கையில் உள்ள இந்திய வம்வாவளி மக்களும் எனது நிலைப்பாட்டையே கொண்டிருப்பார்கள் என்று கருதுகிறேன்.
இந்தியாவில் தமிழகத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்த இந்த மக்கள் இன்றும் இந்தியாவுடன் வலுவான உறவு நிலையை பேணி வருகிறார்கள்.
இந்த நிகழ்வில் கலந்துக் கொண்ட அமைச்சர்களான சரேஜா சாவித்ரி போல்ராஜ், சமந்த வித்தியாரத்ன மற்றும் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி ஆகியோருக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நிகழ்வுக்கு வருகைத் தந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் உட்பட அனைவரையும் வரவேற்பதுடன்,நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய துணை ஜனாதிபதியின் உரையை கேட்பது மகிழ்ச்சிக்குரியது என்றார்.
இதனைத் தொடர்ந்து கோபியோ அமைப்பின் பிரதிநிதிகள் இந்திய துணை ஜனாதிபதிக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர். தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பாரத் அருள்சாமி ஆகியோரும் துணை ஜனாதிபதிக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.
இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் அக்கட்சியின் உறுப்பினர்களான ராமேஸ்வரன்,ஜெகதீஸ்வரன் ஆகியோர் துணை ஜனாதிபதிக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர்களான சாவித்ரி போல்ராஜ், சமந்த வித்யாரத்ன மற்றும் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஆகியோருக்கு இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
இதனைத் தொடர்ந்து இந்திய வீடமைப்புத் திட்டத்தின் 03ஆம் கட்டத்தின் ஊடாக நிர்மாணிக்கப்பட்ட 145 வீடுகளை இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஸ்ணன் நிகழ்நிலை முறைமை ஊடாக கையளித்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து நிகழ்வில் சிறப்பு உரையாற்றிய இந்திய துணை ஜனாதிபதி சி.பி இராதாகிருஸ்ணன், இந்தியாவின் மூன்றாம் கட்ட வீட்டுவசதித் திட்டம் நிறைவுப் பெற்றதை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டுள்ளோம்.இன்று வழங்கப்படும் 145 வீடுகளுடன் 3 ஆம் கட்ட வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் பயனாளர்களுக்கு 4000 வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. இதுவரைகாலமும் இலங்கைவாழ் இந்திய மக்களுக்கு இந்தியா 50 ஆயிரம் வீடுகளை வழங்கியுள்ளது. எதிர்வரும் காலங்களில் மேலும் 10 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்படும்.
இலங்கையில் வாழும் இந்திய மக்களின் நலன் தொடர்பில் இந்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும். எமது மக்களின் வாழ்கையை மேம்படுத்த என்றும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என்றார். இதன் பின்னர் இந்திய துணை ஜனாதிபதி பம்பலப்பிட்டி கதிரேசன் ஆலயத்தில் சிறப்பு பூஜை வழிபாட்டில் ஈடுபட்டார்.





