நாமலின் இங்கிலாந்து வீடு தொடர்பாக போலி பிரசாரம் - பெரமுன சி.ஐ.டியில் முறைப்பாடு
ஒரு பொய்யைச் சொன்னாலும் அதில் ஒரு அடிப்படை வேண்டாமா? 34 முதல் 36 பில்லியன் ரூபா என்பது சாதாரணத் தொகையல்ல.
அநுர அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகியோரை இலக்கு வைத்து அப்பட்டமான பிரசாரங்களுக்கு எதிராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் செயற்பாட்டாளர் பசன் கஸ்தூரி நேற்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றினைப் பதிவு செய்தார்.
நாமல் இங்கிலாந்தில் இவ்வளவு பெரிய சொத்தை வாங்கியிருந்தால் அங்குள்ள புலம்பெயர் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் சும்மா இருந்திருப்பார்களா? அதுவும் சட்டவிரோதப் பணமாக இருந்தால் அவர்கள் அதனை முடக்கக் கோரி அந்நாட்டு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்திருக்க மாட்டார்களா? ஏன இதன்போது பசன் கஸ்தூரி கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த முறைப்பாட்டைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் பொதுஜன பெரமுனவையும் அதன் தலைவர்களையும் குறிவைத்து முன்னெடுக்கப்படும் அவதூறுகளை நாம் அவதானித்து வருகிறோம். இதன் ஒரு கட்டமாகவே நாமல் ராஜபக்ஷ இங்கிலாந்தில் 36 பில்லியன் ரூபா பெறுமதியில் வீடு வாங்கியதாக ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பரப்பப்படுகிறது. 2016ஆம் ஆண்டு என்பது ஜே.வி.பியின் பெரிய சகோதரர்கள் பின்வாசல் வழியாகச் சென்று ராஜபக்ஷவினரின் திருட்டுகளைப் பிடிக்கிறோம் என்று சதி செய்த காலம். அத்தகைய கடும் கண்காணிப்பு இருந்த காலத்தில் இவ்வளவு பெரிய தொகையில் சொத்து வாங்குவது எப்படிச் சாத்தியமாகும்?
ஒரு பொய்யைச் சொன்னாலும் அதில் ஒரு அடிப்படை வேண்டாமா? 34 முதல் 36 பில்லியன் ரூபா என்பது சாதாரணத் தொகையல்ல. நாமல் ராஜபக்ஷ போன்ற அரசியலில் நன்கு அறியப்பட்ட ஒரு நபர் உலகின் எந்த நாட்டிலாவது இவ்வளவு பெரிய தொகையில் கொடுக்கல் வாங்கல் செய்தால் அது அந்த நாட்டு வங்கி முறைமையிலும் புலனாய்வுப் பிரிவிலும் சிக்காமல் இருக்காது. ஆனால் இதுவரை அத்தகைய எந்த ஆதாரமும் வெளிவரவில்லை.





