அரசமுறை கடன் செலுத்தலில் செயலாளர், பிரதி செயலாளர் தொடர்பு
நாட்டின் நிதி அதிகாரம் தொடர்பில் இறுதியான பொறுப்பு பாராளுமன்றத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
அரசமுறை கடன் செலுத்தலில் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி செய்யப்பட்ட விவகாரத்தில் திறைசேரியின் பிரதி பணிப்பாளர்கள் இருவர்,பணிப்பாளர்கள் இருவர் மற்றும் கணினி கட்டமைப்பின் பிரதானி ஆகியோர் பதவி நீக்கப்பட்டுள்ளார்கள். இந்த நிதி செலுத்தலில் இவர்களால் மாத்திரம் தொடர்புப்பட்டிருக்க முடியாது. திறைசேரியின் பிரதி செயலாளர் மற்றும் திறைசேரியின் செயலாளர் இவ்விடயத்தில் நிச்சயம் தொடர்புப்பட்டிருக்க வேண்டுமென சுதந்திர சட்டத்திரணிகள் அமைப்பின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன சபாநாயகருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிதியமைச்சு மற்றும் திறைசேரிக்கு வெளிவாரியான குழுவினால் மேற்கொள்ளப்பட வேண்டும். அரச நிதி தொடர்பில் பொறுப்பு மற்றும் அதிகாரம் பாராளுமன்றத்துக்கு உண்டு.ஆகவே இந்த சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் எழுத்துமூலமாக கோரிக்கை விடுத்துள்ளார்.
அரசமுறை கடன் செலுத்தலில் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி செய்யப்பட்ட விவகாரம் குறித்து மைத்திரி குணரத்ன, சபாநாயகருக்கு அனுப்பி வைத்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
இலங்கை அரசாங்கம் 2025ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் நடுப்பகுதியில் 22.9 மில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாட்டு அரசமுறை கடன்களாக செலுத்த வேண்டியிருந்தது.கடன் செலுத்தல் அடிப்படையில் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் 2025 செப்டெம்பர் மாதம் முதல் 2026.01.31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் செலுத்தப்பட்டுள்ளது.ஆனால் அந்த கடன்தொகை குறித்த கடன் வழங்குநருக்கு (நாடு) சென்றடையாமல் கணினி ஊடுருவளாளர்களால் ( மூன்றாம் தரப்பினர்) மோசடி செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக திறைசேரியால் 2026.03.24 ஆதமம் திகதி அல்லது அதனை அண்மித்த காலப்பகுதியில் 'தொழில்நுட்ப விசாரணைக் குழு' நியமிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய திறைசேரியின் பிரதி பணிப்பாளர்கள் இருவர்,பணிப்பாளர்கள் இருவர் மற்றும் கணினி கட்டமைப்பின் பிரதானி ஆகியோர் பதவி நீக்கப்பட்டுள்ளார்கள்.
இதுவரையான காலப்பகுதியில் வெளிநாட்டு அரசமுறை கடன்கள் மற்றும் வட்டி மீள் செலுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை இலங்கை மத்திய வங்கியே முன்னெடுத்தது.இருப்பினும் புதிய நிதிச் சட்டம் நிறைவேற்றப்பட்டதும் அந்த அதிகாரம் வெளிநாட்டு வளங்கள் திணைக்களம் மற்றும் அரச கடன் முகாமைத்துவ அலுவலகத்துக்கு பொறுப்பாக்கப்பட்டது.ஆகவே 2.5 மில்லியன் டொலர் செலுத்தலுக்கான ஆவணங்களை தயாரித்தல் மற்றும் கடன் தொகையை செலுத்தல் உள்ளிட்ட பணிகளை இவ்விரு நிறுவனங்களுமே முன்னெடுத்துள்ளன.
திறைசேரியின் பிரதி செயலாளர், கணக்காளர் மற்றும் கணினி கட்டமைப்பின் பிரதானி ஆகியோரால் மாத்திரம் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்தும் இயலுமை கிடையாது. திறைசேரியின் பிரதி செயலாளர் மற்றும் திறைசேரியின் செயலாளர் இவ்விடயத்தில் நிச்சயம் தொடர்புப்பட்டிருக்க வேண்டும்.
நாட்டின் நிதி அதிகாரம் தொடர்பில் இறுதியான பொறுப்பு பாராளுமன்றத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் திறைசேரியின் மேலதிக செயலாளரின் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
திறைசேரி தொடர்பில் அதிகாரமிக்க நிதியமைச்சின் செயலாளர், திறைசேரியின் செயலாளராக பதவி வகிப்பதால் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிதியமைச்சு மற்றும் திறைசேரிக்கு வெளிவாரியான குழுவினால் மேற்கொள்ளப்பட வேண்டும். அரச நிதி தொடர்பில் பொறுப்பு மற்றும் அதிகாரம் பாராளுமன்றத்துக்கு உண்டு.ஆகவே இந்த சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.





