தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் தீவிர விசாரணைகள் - கலாநிதி ஹர்ஷன சூரியபெரும
அரச கடன் முகாமைத்துவ சட்டத்துக்கமைய 2015.12.31 ஆம் திகதி முதல் வெளிநாட்டு அரசமுறை கடன் செலுத்தல் பொறுப்பினை நிதியமைச்சு ஏற்றுக்கொண்டது.
அவுஸ்திரேலிய கடன் வழங்குநருக்கு திறைச்சேரியால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் 3 ஆம் தரப்பினரால் திறைசேரியின் மின்னஞ்சல் கட்டமைப்புக்குள் ஊடுருவி மோசடி செய்யப்பட்டுள்ளது. நாடு கடந்த மோசடி என்பதால் இரகசியத்தன்மையை பாதுகாக்கும் பொருட்டு சகல தகவல்களையும் தற்போது வெளியிட முடியாது. தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று திறைச்சேரியின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியபெரும தெரிவித்தார்.
சைபர் மோசடி என்பது இலங்கைக்கு ஒன்றும் புதிதல்ல, மோசடி செய்யப்பட்ட 2.5 மில்லியன் டொலரை மீள அறவிடுவது குறித்து தற்போது உத்தவாதமளிக்க முடியாது. விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டே தீர்மானிக்கப்படும் எனவும் திறைச்சேரியின் செயலாளர் குறிப்பிட்டார்.
நிதியமைச்சின் காரியாலயத்தில் 23-04-2026அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்தாவது: 2022 ஆம் ஆண்டு பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட நாட்டையே பொறுப்பேற்றோம். சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட கடன் செயற்றிட்டத்துக்கமைவாக பொருளாதாரம் ஸ்திரப்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதார நிலைமை தற்போது நிலைபேறான தன்மையில் காணப்படுகிறது.மொத்த தேசிய உற்பத்தியும் வளர்ச்சியடைந்த போக்கில் காணப்படுகிறது.
நிதி மறுசீரமைப்புக்கமைய இலங்கை மத்திய வங்கியின் சுயாதீனம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில்,அரச கடன் முகாமைத்துவ சட்டத்துக்கமைய, அரச கடன் முகாமைத்துவ அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டு அரசமுறை கடன் செலுத்தலில் இருந்து மத்திய வங்கி விலக்கப்பட்டுள்ளது.
அரச கடன் முகாமைத்துவ சட்டத்துக்கமைய 2015.12.31 ஆம் திகதி முதல் வெளிநாட்டு அரசமுறை கடன் செலுத்தல் பொறுப்பினை நிதியமைச்சு ஏற்றுக்கொண்டது. 2026 ஜனவரி மாதம் வெளிநாட்டு வளங்கள் திணைக்களம் மீது சைபர் தாக்குதல் முயற்சி 2026 ஜனவரி மாதமளவில் திறைசேரியின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் கணினி கட்டமைப்பில் ஒரு தரப்பினர் சைபர் தாக்குதலை மேற்கொள்வதற்கு முயற்சிப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதேபோல் முழு கட்டமைப்புக்குள்ளும் ஒரு தரப்பினர் உள்நுழைய முயற்சிப்பதையும் அறிந்துக்கொண்டோம்.
இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் சைபர் பிரிவு மற்றும் உரிய தரப்பினருக்கு அறிவுத்தினோம். இதனைத் தொடர்ந்து வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் கணினி கட்டமைப்பின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டது.
2025 இறுதி பகுதியில் 2.5 மில்லியன் டொலர் மோசடி 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் காணப்பட்ட அச்சுறுத்தல் தொடர்பான பரீசிலனைகளைத் தொடர்ந்து முற்பட்ட காலப்பகுதியில் கொடுக்கல்கள் மற்றும் நிதி நிலைமை குறித்து ஆராயுமாறு நிதியமைச்சு வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்துக்கு அறிவுறுத்தியது.
2025 இறுதிபகுதி மற்றும் 2026 ஜனவரி முதல் வார காலப்பகுதிகளில் கடன் மறுசீரமைப்புக்கு உட்படுத்தப்பட்ட அவுஸ்ரேலிய கடன் வழங்குநர்களுக்கு திறைசேரி ஊடாக செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் மின்னஞ்சல் கட்டமைப்புக்குள் மூன்றாம் தரப்பினரால் ஊடுருவி மோசடி செய்யப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.





