ரணிலின் மனைவியிடம் சிஐடி வாக்குமூலம் பதிவு
குறித்த பதில்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் பெற்றுக்கொள்ளப்பட்ட விதம் தொடர்பாக சட்டமா அதிபருக்கு மாற்றுக் கருத்து இருப்பதாகவும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் உள்ளக தகவல்கள் தெரிவித்தன.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரித்தானியாவுக்கு முன்னெடுத்ததாக கூறப்படும் விஜயம் தனிப்பட்ட விஜயமா? அரசு விஜயமா? என்பது தொடர்பான சர்ச்சை எழுந்துள்ள நிலையில், அரசப் பணத்தை மோசடியாக தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறி அவருக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கு தொடர்பிலான நடவடிக்கைகளுக்காக ரணில் விக்ரமசிங்கவின் மனைவி மைத்திரி விக் கிரமசிங்கவிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசேட வாக்குமூலம் ஒன்றினைப் பதிவு செய்துள்ளது.
பிரித்தானியாவின் வூல்ஹம்டன் பல்கலைக்கழகத்தில் மைத்திரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவுக்காகவே ரணில் விக் கிரமசிங்க சென்றதாகக் கூறப்பட்ட நிலையில், அது தொடர்பிலான விடயம் ஒன்றினை உறுதி செய்து கொள்வதற்காக மைத்திரி விக் கிரமசிங்கவிடம் இவ்வாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசேட வாக்குமூலம் ஒன்றினைப் பதிவு செய்ததாகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் தகவல்கள் தெரிவித்தன.
முன்னதாக கோட்டை நீதிவான் நீதிமன்றிற்கு விடயங்களை முன்வைத்திருந்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், மைத்திரி விக்கிரமசிங்கவுக்கு இந்த விவகாரத்தில் தொடர்பு இருக்கிறதா என்பது தொடர்பாகவும் சிஐடியினருக்கு விசாரணை செய்ய ஆலோசனை வழங்கி இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.
அதன்படி, கடந்த பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி மைத்திரி விக்ரமசிங்கவை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு வந்து வாக்குமூலம் அளிக்குமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் அறிவித்திருந்தனர். எனினும், தனக்கு இருவார கால அவகாசம் வழங்குமாறு மைத்திரி விக்ரமசிங்க தனது சட்டத்தரணி ஊடாகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் கூறியிருந்தார். அதன் பின்னர் மைத்திரி விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படாத நிலையில், நேற்றைய தினம் முற்பகல் வேளையில் இந்த விசேட வாக்குமூலத்தைக் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் மைத்திரி விக்ரமசிங்கவின் வீட்டுக்குச் சென்று அங்கு வைத்துப் பதிவு செய்து கொண்டுள்ளனர்.
இது தொடர்பில் எதிர்வரும் 29ஆம் திகதி ரணில் விக் கிரமசிங்கவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு வரும்போது குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் கோட்டை நீதிவான் நீதிமன்றிற்கு அவரது வாக்குமூலத்தின் சுருக்கத்தைச் சமர்ப்பிக்க உள்ளதாகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் தகவல்கள் தெரிவித்தன. இதேவேளை, ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான வழக்கு விசாரணைகளில் மேலும் பல விடயங்கள் குறித்த வழக்குத் திகதியில் வெளிப்படுத்தப்பட உள்ளதாக அறிய முடிகிறது.
குறிப்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் வூல்ஹம்டன் பல்கலைக்கழகத்திலிருந்து பெற்றுக்கொண்டிருக்கக்கூடிய பதில்களை அன்றைய தினம் நீதிமன்றத்துக்கு முன்வைக்க எதிர்பார்ப்பதாகக் கருதப்படுகிறது.
எவ்வாறாயினும், குறித்த பதில்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் பெற்றுக்கொள்ளப்பட்ட விதம் தொடர்பாக சட்டமா அதிபருக்கு மாற்றுக் கருத்து இருப்பதாகவும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் உள்ளக தகவல்கள் தெரிவித்தன.
எவ்வாறாயினும், இந்த விடயங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்பார்வை செய்யும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிசிடமிருந்து பெற்றுக்கொள்ளும் ஆலோசனைக்கு அமையக் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைக் குழுவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அறிய முடிகிறது.





