2.5 மில்லியன் டொலர் மோசடி திட்டமிட்ட கொள்ளையாகும் - சமிந்த விஜேசிறி
இந்த நிதி மோசடி சம்பவம் தற்செயலாக நடந்த ஒன்றல்ல, மாறாக அரசாங்கமே திட்டமிட்டு நடத்திய ஒரு திருட்டு சம்பவமாகும்.
அவுஸ்திரேலியாவிற்கு செலுத்த வேண்டிய 2.5 மில்லியன் டொலர் நிதி மாயமான சம்பவம் தற்செயலாக நடந்த ஒன்றல்ல, அது அரசாங்கத்தால் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு கொள்ளையாகும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த மோசடி குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்ய அரசாங்கம் அச்சப்படுவது ஏன் எனவும், நிதி இழப்பு குறித்த உண்மைகளை பல மாதங்களாக மறைத்து வைத்திருப்பது ஆட்சியாளர்களின் தொடர்பையே உறுதிப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பதுளையில் 24-04-2026 அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், இந்த நிதி மோசடி சம்பவம் தற்செயலாக நடந்த ஒன்றல்ல, மாறாக அரசாங்கமே திட்டமிட்டு நடத்திய ஒரு திருட்டு சம்பவமாகும். 2.5 மில்லியன் டொலர் மாயமான விவகாரம் பொதுவெளியில் கசியும் வரை அரசாங்கம் அதனை மூடி மறைத்திருந்தது ஏன்? இந்தச் சம்பவம் கடந்த டிசம்பர் மாதமே நடந்திருந்தாலும், ஏப்ரல் மாதம் எதிர்க்கட்சிகள் இதனை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் வரை அரசாங்கம் மௌனம் காத்தமை, இதில் அரசாங்கத்தின் உயர்மட்டப் புள்ளிகளுக்குத் தொடர்பு இருப்பதையே உறுதிப்படுத்துகிறது.
வழமையாக ஒரு இணையவழித் தாக்குதல் அல்லது நிதி மோசடி இடம்பெற்றால், அதனை உடனடியாக நாட்டுக்கு அறிவிப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும். ஆனால், இந்த அரசாங்கம் பல மாதங்களாக அதனை இரகசியமாக வைத்திருந்தது. திருடப்பட்ட பணம் தற்போதைய ஆட்சியாளர்களின் சர்வதேச வங்கிக் கணக்குகளுக்குச் சென்றிருக்கலாம். அவர்கள் தமது தனிப்பட்ட மற்றும் கட்சி நலன்களுக்காகவே இந்தப் பணத்தைப் பயன்படுத்தியுள்ளனர்.
மேலும், நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் திறைசேரியின் அதிகாரிகள் இந்த மோசடிக்குச் சர்வதேச ஹெக்கர்களைக் கைகாட்டித் தப்பிக்க முயல்கின்றனர். முன்பும் இவ்வாறான சம்பவங்கள் நடந்துள்ளன என்று அதிகாரிகள் கூறுவது, தற்போதைய திருட்டை நியாயப்படுத்துவதற்காகச் சொல்லப்படும் ஒரு சாக்குப்போக்காகும். மோசடி நடந்தவுடன் அது குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திலோ அல்லது பொலிஸாரிடமோ முறைப்பாடு செய்ய அரசாங்கம் இதுவரை முன்வரவில்லை என்பது திருடனே திருட்டைப் பற்றித் தேட விரும்பவில்லை என்ற நிலையையே காட்டுகிறது.
மக்களுக்குப் புரியும்படி சொல்வதானால், பிச்சை எடுப்பவர்களைப் போல நடித்து, எங்களுக்கு சம்பளம் வேண்டாம், உடுத்த ஆடை இல்லை' என்று கூறி ஆட்சியைப் பிடித்தவர்கள், இன்று மாளிகைகளை அமைத்துக்கொண்டு ஆடம்பர வாழ்க்கை வாழ்கின்றனர். மக்களின் வரிப்பணத்தை திருடி தமது பைகளை நிரப்புவதற்காகவே இவர்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தியுள்ளனர்.
இந்த 2.5 மில்லியன் டொலர் இழப்பிற்கு நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி, மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அனைவரும் பொறுப்புக்கூற வேண்டும். இந்த மோசடி தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படாவிட்டால் அவர்கள் அனைவரும் வரலாற்றில் மோசடிக்காரர்களாகவே அடையாளப்படுத்தப்படுவார்கள் என்று எச்சரிக்கின்றோம் என்றார்.





