சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் - ராஜித வலியுறுத்து
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, பணவீக்கம் மற்றும் மக்களின் வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கே வழிவகுக்கும்.
இலங்கை வரலாற்றில் முன்னெப்பொழுதும் இல்லாத வகையில், வெளிநாட்டுக் கடன் தவணையாகச் செலுத்தப்பட வேண்டிய 2.5 மில்லியன் டொலர் நிதியை இணையவழி மோசடிக்காரர்கள் கையகப்படுத்தியுள்ளமை நாட்டின் நிதிப் பாதுகாப்பில் பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன வலியுறுத்தியுள்ளார்.
இத்தனை உயர்மட்டப் பாதுகாப்புகளையும் மீறி மக்கள் வரிப்பணம் திருடப்பட்டுள்ளமை குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் பங்களிப்புடன் கூடிய வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் 24-04-2026 அன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், இலங்கை வரலாற்றில் மட்டுமன்றி, உலக வரலாற்றிலேயே ஒரு நாடு தனது வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தும் போது, அந்த நிதி இணையவழி மோசடிக்காரர்களின் கைகளுக்குச் சென்றதாகக் கூறப்படும் சம்பவத்தை நான் கேள்விப்பட்டதே இல்லை. ஒரு நாட்டின் திறைசேரியிலிருந்து மற்றுமொரு நாட்டுக்கு நிதி பரிமாற்றம் செய்யப்படும் போது, அது சர்வதேச வங்கி விதிகளின்படி மிகவும் பாதுகாப்பான முறையிலேயே நடைபெறும்.
இவ்வளவு பெரிய தொகை இணையவழி மோசடிக்காரர்களின் கணக்கிற்குச் சென்றது என்பதை நம்பவே முடியவில்லை. ஏனெனில், சர்வதேச சட்டங்களின்படி ஒரு கணக்கில் பெரிய தொகை வைப்பிலிடப்படும் போது, அந்த வங்கியானது அந்தப் பணம் எங்கிருந்து வந்தது என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இவ்வளவு பெரிய பரிவர்த்தனைக்கு நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் பலரின் கையொப்பம் அவசியம். இத்தனை பாதுகாப்புகளையும் மீறி இந்த நிதி எப்படி திசைமாறியது என்பது பாரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
இந்த மோசடி தொடர்பாக தற்போது அரசாங்கம் முன்னெடுத்துள்ள உள்ளக விசாரணைகள் போதுமானவை அல்ல. கீழ்மட்ட அதிகாரிகளைக் கொண்டு நடத்தப்படும் விசாரணை மூலம் உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிய முடியாது. இது திருடனிடமே திருட்டைப் பற்றி கேட்பது போன்றது.
எனவே, சர்வதேச நாணய நிதியம் போன்ற அமைப்புகளை உள்ளடக்கிய ஒரு சர்வதேச மட்டத்திலான வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும். நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் இதற்கு முழுப் பொறுப்பேற்க வேண்டும்.
இந்த 2.5 மில்லியன் டொலர் என்பது மக்களின் வரிப்பணமாகும். இவ்வாறான இழப்புகள் ஏற்படும் போது, அதனை ஈடுகட்ட அரசாங்கம் மீண்டும் மக்கள் மீதே வரிகளை விதிக்கும். இது அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, பணவீக்கம் மற்றும் மக்களின் வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கே வழிவகுக்கும்.
அமைச்சர்களின் சொத்து விபரங்கள் குறித்த செய்திகளை வெளியிடும் ஊடகங்களின் உரிமங்களை இரத்து செய்யப்போவதாக அரசாங்கத் தரப்பினர் விடுக்கும் எச்சரிக்கைகள் ஜனநாயகத்துக்கு எதிரானது. ஊடக சுதந்திரத்திற்காகப் போராடியவர்கள் என்று கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்தவர்கள், தற்போது தமக்கு எதிராகச் செய்திகள் வரும்போது ஊடகங்களை முடக்க நினைப்பது அவர்களின் இரட்டை வேடத்தைக் காட்டுகிறது.
அமைச்சர்களின் வருமானம் மற்றும் சொத்து விபரங்கள் குறித்துக் கேள்வி எழுப்பப்படும் போது, அவர்கள் நீதிமன்றத்திற்குச் சென்று தமது நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட்டதாக கூறுவதற்கு முன்னால், தமக்கு அத்தகைய நற்பெயர் இருப்பதை முதலில் நிரூபிக்க வேண்டும். முழுநேர அரசியல்வாதிகளாக இருப்பதாகக் கூறிக்கொள்ளும் சிலரிடம் எவ்வாறு குறுகிய காலத்தில் கோடிக்கணக்கான சொத்துக்கள் சேர்ந்தன என்பது குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார்.





