சுயநிர்ணய கோரிக்கை இலட்சியத்தை அடைவோம் - தமிழ்த் தேசிய மே தினப் பிரகடனத்தை வெளியிட்டு சிறிதரன் எம்.பி.
தினக்கூலிகள் தினக்கூலிகளாகவே, காணியற்றவர்கள் காணியற்றவர்களாகவே, வீடற்றவர்கள் வீடற்றவர்களாகவே இருக்க எமது நிலம் வறுமையால் பெருத்து, வாழ்வாதாரத்தால் நலிந்து வீழ்ந்து கிடக்கிறது.
‘யாமார்க்கும் குடியல்லோம், எவர்க்கும் அஞ்சோம்’ என்ற தைரியமும் தன்மானமும் தவிர வேறெந்த ஆசைகளும் இன்றிய காலநதியில் நம்பிக்கையைக் கொண்டு, எம்மை நாமே ஆள வேண்டும் என்றும் உள்ளத்தில் எரியும் சுயநிர்ணயக் கோரிக்கை இலட்சியத்தை அடைந்துகொள்வோம் என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.
கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் 01-05-2026அன்று ‘யாமார்க்கும் குடியல்லோம்" என்ற கருப்பொருளில், கிளிநொச்சி மாவட்ட தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைந்த ஏற்பாட்டில் பேரெழுச்சியாய் நடைபெற்ற தமிழ்த் தேசிய மே நாள் நிகழ்வில், பிரகடனத்தை வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அப்பிரகடனத்தில் மையப்படுத்தி உரையாற்றுகையில், உலக சூழமைவில் சர்வதேச சவால்களையும், பிராந்தியத்தின் பிணக்குகளையும் எதிர்கொண்டவாறு இலங்கைத் தீவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் அகமெங்கும் துளிர்த்த நம்பிக்கைப் பலத்தினை சரிவடையச் செய்திருக்கிறது. பௌத்த சிங்கள மேலாதிக்க மனநிலைகளில் இருந்து முற்றிலும் வெளிவர முடியாத புதிய அரசு பதவிக்கு வந்திருக்கிறது. சேகுவேராவையும், லெனினையும் முன்னே பிடித்தபடி மாக்சிச கருத்துகளை விதைத்தவாறு புதிய யுகம் நோக்கிய பயணம் என்ற அழகிய கோசங்கள் அரங்கேறி வருகின்றன.
சிங்களவர்களைப் போலவே தமிழர்களும் ஓர் தேசிய இனத்தவர்கள் என்றும், பயங்கரவாதத் தடைச் சட்டம் மனித குலத்திற்கே அவமானம் என்றும் பேசிய நாக்குகள் தளர்வடையத் தொடங்கியுள்ளன. புதிய அரசியல் கலாசாரம் என்கின்ற கனவு பழைய பந்திக்குத் திரும்பியிருக்கிறது. அரசியல் தீர்வுமின்றி, வாழ்வாதார மாற்றங்களுமின்றி வாழ்வில் அந்தரகரமான பொழுதுகளையே தமிழர்கள் சுவாசிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
பல்லாயிரக் கணக்கான குடியிருப்பு நிலங்கள் படையினர் வசமே உள்ளன. கனிய வளங்களும், காட்டு வளமும் வளப் பாதுகாப்பு என்ற பேரில் அதற்குரிய திணைக்களங்களினால் ஆட்சியாளர்களின் அனுபவிப்புக்கு ஆட்பட்டுக் கிடக்கின்றன. கடல்வள மேலாண்மை அயலக மீனவர்களிடமும், கட்டுக்கடங்கா சிலரிடமும் அகப்பட்டு அந்தரிக்கிறது. எமது மீனவர்கள் சுய தொழிலையும், சுய பொருளாதாரத்தையும் அடைய முடியாத அளவுக்கு நாட்பட்ட சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
விலைச் சமநிலை, கால விலையேற்றம், உற்பத்திச் செலவு, ஏற்றுமதி இறக்குமதி வணிகத்தில் நிலையான முகாந்திரமும், முகாமைத்துவமும் இன்றி தமிழ் விவசாயிகள் பேரிடர் படுகின்றனர். முதலீட்டாளர்களும், புலம்பெயர்ந்தோரும் தங்கள் நிலங்களின் வளங்களை ஆள முடியாமல் புலி அடையாளம் பொறிக்கப்படுகின்றனர்.
விளைநிலங்கள் மீது விகாரைகளும், தமிழர் விவேகத்தின் மீதும் எழுத்துலக ஆளுமைகள் மீதும் தடை உத்தரவுகளும் பிறப்பிக்கப்படுகின்றன. பயங்கரவாதத் தடைச் சட்டம் எந்த விசைக் குறைப்புமின்றி வீரியம் பெற்றே இருந்து வருகிறது. அஞ்சுதலும், அடிபணிதலும் அரச சேவையாளர்களிடையே விரவிக் கிடக்கிறது.
அரசியல் தீர்வு என்றும், வடகிழக்கு தமிழர் தேசத்திற்கு அதிகாரப் பகிர்வு என்றும், விரைவில் மாகாண சபைத் தேர்தல் என்றும் போட்ட முழக்கங்கள் முனகிச் செல்கின்றன. தினக்கூலிகள் தினக்கூலிகளாகவே, காணியற்றவர்கள் காணியற்றவர்களாகவே, வீடற்றவர்கள் வீடற்றவர்களாகவே இருக்க எமது நிலம் வறுமையால் பெருத்து, வாழ்வாதாரத்தால் நலிந்து வீழ்ந்து கிடக்கிறது.
யாமார்க்கும் குடியல்லோம், எவர்க்கும் அஞ்சோம்’ என்ற தைரியமும் தன்மானமும் தவிர வேறெந்த ஆசைகளும் இன்றிய காலநதியில் நம்பிக்கை ஒன்றையே பலமாகக்கொண்டு எங்கள் நிலம் எமக்கே வேண்டும் என்றும், எம்மை நாமே ஆள வேண்டும் என்றும் உள்ளத்தில் எரியும் சுயநிருணயக் கோரிக்கை ஒன்றைத் தவிர அந்த இலட்சியத்தை அடைந்துகொள்வோம் என்ற தீராத திடசங்கற்பத்தை தவிர எமது ஈழத்தொழிலாளர்களின் மீட்சிக்கு வழி ஏதும் இல்லை என்பதே மே நாள் பிரகடனத்தின் பிரதான செய்தியாகும் என்றார்.





