பாதாள குழுக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையிலான தொடர்பு: அமைச்சர் ஆனந்த விஜேயபால
தற்போது கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களை எதிர்வரும் நாட்களில் நாட்டுக்கு அழைத்து வந்து அவர்களுக்கு எதிராக மேலதிக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்போம்.
தமது அரசியல் இருப்பை தக்கவைத்துக் கொள்ள கடந்த காலங்களில் அரசியல்வாதிகள் குற்றவாளிகளை போஷித்து அவர்களுக்கு அடைக்கலம் வழங்கினர். இதன் காரணமாகவே இந்த நாட்டில் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகள் தலைதூக்கின.ஆனால் தற்போது நாட்டில் சட்டத்தை மிஞ்சிய எவருக்கும் அதிகாரமில்லை.பொலிஸ் தரப்பை அரசியலில் இருந்து விடுவித்தமையாலேயே கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட குற்றவாளிகளை கைது செய்ய முடிந்துள்ளது என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த விஜேயபால தெரிவித்தார்.
திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் கெஹெல்பத்தர பத்மே பெக்கோ சமன் கொமாண்டோ சலிந்த உள்ளிட்டோர் 6 பேர் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டிருந்தனர். குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவொன்று இந்தோனேசியாவிற்கு சென்று அந்நாட்டு பொலிஸாருடன் இணைந்து மேற்கொண்ட ஒருங்கிணைந்த விசேட சுற்றிவளைப்பில் அவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்த விடயம் தொடர்பில் தெளிவுப்படுத்தும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று 28-08-2025 அன்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேயபால தலைமையில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதன்போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் கெஹெல்பத்தர பத்மே பெக்கோ சமன் கொமாண்டோ சலிந்த உள்ளிட்டோர் 6 பேர் இந்தோனேசியாவில் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சுற்றிவளைப்பு 7 நாட்களாக முன்னெடுக்கப்பட்டது. இந்தோனேஷியா பொலிஸார் மற்றும் குற்றப்புலனாய்வுத்திணைக்களத்தின் அதிகாரிகள் இணைந்து இந்த ஒருங்கிணைந்த விசேட சுற்றிவளைப்பை மேற்கொண்டிருந்தனர். எமது நாட்டின் புலனாய்வுப்பிரிவு உள்ளிட்ட பலரது ஒத்துழைப்பும் இதற்கு கிடைக்கப்பெற்றது. அத்துடன் சர்வதேச பொலிஸாரும் இதற்கு ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர்.இதற்கமையவே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
தற்போது பொலிஸார் அரசியல் தலையீட்டில் இருந்து விடுப்பட்டு சுதந்திரமாக செயற்படுகின்றனர். அவர்களுக்கு சுயாதீனமாக செயற்படுவதற்காக சந்தர்ப்பத்தை தற்போதைய அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இதன்காரணமாகவே கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட குற்றவாளிகளை கைது செய்ய முடிந்துள்ளது. பொலிஸார் சுதந்திரமாக செயற்படுவதன் பிரதிபலனை எம்மால் தற்போது அடைந்துக்கொள்ள முடிந்துள்ளது.
கடந்த காலங்களில் திட்டமிட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் சமூகத்தில் பல விமர்சனங்கள் எழுந்தன. அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் மற்றும் குற்றவாளிகளுக்கு அவர்கள் வழங்கிய ஆதரவு காரணமாகவே நாட்டில் திட்டமிட்ட குற்றச் செயல்கள் அதிகரித்தன. அதில் எந்தவித சந்தேகமும் கிடையாது.தமது அரசியல் நோக்கத்துக்காகவே அவர்கள் திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய தரப்பினருக்கு ஆதரவு வழங்கினர்.தமது இருப்பை தக்கவைத்துக்கொள்ளவும் குற்றவாளிகளை போசித்து அடைக்கலம் வழங்கினர். இதன் காரணமாகவே இந்த நாட்டில் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகள் தலைதூக்கின.
தற்போது நாம் பாதாள உலக்குழுக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையிலான தொடர்புகளை கண்டறிந்துள்ளோம். விசாரணைகளை மேற்கொண்டு வருகிறோம்.இந்த இரண்டு தரப்பினர்களுக்கு இடையில் தொடர்புகள் உள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இது தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு எதிர்காலத்தில் நாம் தகவல்களை வெளிப்படுத்துவோம்.
நாட்டில் இடம்பெறும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவோம். தற்போது கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களை எதிர்வரும் நாட்களில் நாட்டுக்கு அழைத்து வந்து அவர்களுக்கு எதிராக மேலதிக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்போம்.
பாதாள உலக்குழுக்களின் உறுப்பினர்களாகவோ, அரசியல்வாதிகளாகவோ, அரச அதிகாரிகளாகவோ அல்லது பொலிஸ் உத்தியோகர்களாகவோ இருக்கலாம் சட்டத்தின் முன் அனைவரும் சமம். தவறு இழைத்தால் பாரபட்சம் இன்றி அனைவருக்கும் சட்டநடவடிக்கை எடுக்கப்படும். இந்நாட்டு மக்கள் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் வாழக்கூடிய வளமான நாட்டை உருவாக்குவோம் என்றார்.





