உடனடி நிவாரணப்பொருட்களை அரசிடம் கையளித்த ஜெய்க்கா
ஜெய்க்காவினால் வழங்கப்பட்ட நிவாரணப்பொருட்களில் கூடாரங்கள், போர்வைகள், உறங்கும் மெத்தைகள், நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் என்பன உள்ளடங்குகின்றன.
பேரனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையிலான உடனடி நிவாரணப்பொருட்கள் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவரகத்தினால் (ஜெய்க்கா) இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளன.
‘தித்வா' சூறாவளி காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அனர்த்தங்களில் சிக்கி பல நூற்றுக்கணக்கானோர் பலியாகியிருப்பதுடன், இலட்சக்கணக்கானோர் தமது இருப்பிடங்களையும் வாழ்வாதாரத்தையும் இழந்து வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இலங்கைக்கு சர்வதேச நாடுகள், அரச சார்பற்ற அமைப்புக்கள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் உதவிகளை வழங்கிவருகின்றனர்.
அதற்கமைய பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையிலான உடனடி நிவாரணப்பொருட்கள் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவரகத்தின் அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டன.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் நடைபெற்ற இக்கையளிப்பு நிகழ்வில் பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜயசேகர, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் சம்பத் கொட்டுவேகொட, இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் இஸொமாட்டா அகியோ, இலங்கையிலுள்ள ஜைக்கா அலுவலகத்தின் சிரேஷ்ட பிரதிநிதி குரொனுமா கெஞ்சி ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
ஜெய்க்காவினால் வழங்கப்பட்ட நிவாரணப்பொருட்களில் கூடாரங்கள், போர்வைகள், உறங்கும் மெத்தைகள், நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் என்பன உள்ளடங்குகின்றன.
ஜப்பானின் இந்த உதவிகள் தொடர்பில் நன்றியை வெளிப்படுத்திய பாதுகாப்பு பிரதியமைச்சருக்குப் பதிலளித்த ஜப்பான் தூதுவர், இருநாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நல்லுறவை நினைவுகூர்ந்ததுடன், இக்கடினமான வேளையில் ஜப்பான் இலங்கை மக்களுடன் தோளாடு தோளாக நிற்கும் எனத் தெரிவித்தார்.
ஜெய்க்காவின் ஒருங்கிணைப்பில் 31 பேரடங்கிய மருத்துவக்குழு புத்தளம் மாவட்டத்தில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு அவசியமான மருத்துவ உதவிகளை வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.





