நிதியமைச்சரான ஜனாதிபதி நாளை பாராளுமன்றில் விசேட உரை
இந்த மோசடி தொடர்பில் நிறுவன மட்டத்தில் உள்ளக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில், குற்றப்புலனாய்வுத் திணைக்களம் ஊடாகவும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திறைசேரியின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
அவுஸ்ரேலிய கடன் வழங்குநருக்கு திறைசேரியால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர் மூன்றாம் தரப்பினரால் மோசடி செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் நிதியமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாளை செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றவுள்ளார்.
2025 செப்டெம்பர் மாதம் முதல் டிசெம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் திறைசேரியால் செலுத்தப்பட்ட 10 கொடுப்பனவுகளின் மொத்த தொகையான 2.5 மில்லியன் டொலர் மோசடி செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் அரசாங்க நிதி பற்றிய குழுவில் முன்னிலையான திறைசேரியின் செயலாளர் ஹர்ஷன சூரியபெரும பல விடயங்களை வெளிப்படுத்தினார்.
இந்த மோசடி தொடர்பில் நிறுவன மட்டத்தில் உள்ளக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில், குற்றப்புலனாய்வுத் திணைக்களம் ஊடாகவும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திறைசேரியின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றம் நாளை கூடவுள்ள நிலையில், இந்த நிதி மோசடி விவகாரம் தொடர்பில் நிதி அமைச்சரான,ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க விசேட உரையாற்றவுள்ளார்.
இந்த விடயம் குறித்து அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா குறிப்பிடுகையில், அரசாங்க நிதி பற்றிய குழுவுக்கு பதிலளிக்க வேண்டிய கடப்பாடு திறைசேரியின் செயலாளருக்கு உண்டு,பதவியில் இருக்கும் திறைசேரி செயலாளர் என்ற ரீதியில் அவருக்கு ஒரு பொறுப்பு உள்ளது. அவர் அந்தப் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில்இ அதைச் செய்யக்கூடிய ஒருவரிடம் ஒப்படைக்க வேண்டும். இது அவருக்கு தனிப்பட்ட ரீதியிலும் முக்கியமானது. ஏனெனில் இந்த முக்கியமான சிவில் சேவைப் பதவியை வகிக்கும் முதலாவது அரசியல்வாதி இவராவார். இந்த நியமனத்திற்கு முன்னர் இவர் அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினராகவும், எமது குழுவின் உறுப்பினராகவும் பதவி வகித்தார்.
நாட்டின் நிதி அதிகாரம் பாராளுமன்றத்துக்கு பொறுப்பாக்கப்பட்டுள்ளது.ஆகவே 2.5 மில்லியன் டொலர் மோசடி குறித்து உன்னிப்பாக அவதானித்து வருகிறோம். இன்னும் நான்கு வாரத்துக்குள் முழுமையான அறிக்கை சமர்ப்பிக்குமாறு திறைசேரியின் செயலாளருக்கு அறிவுறுத்தியுள்ளோம் என்றார்.





