இந்திய துணை ஜனாதிபதியின் 'சகோதரத்துவ இராஜதந்திரம்'
இந்தியாவின் வரவு-செலவுத் திட்டத்தில் இலங்கைக்காக நிதி ஒதுக்கீடு செய்தமை மற்றும் எரிசக்தி நெருக்கடியின் போது 38,000 மெற்றிக் தொன் எரிபொருளை வழங்கியமை போன்ற செயல்கள் வெறும் வணிக ரீதியிலானவை அல்ல.
இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணனின் உத்தியோகபூர்வ இரண்டு நாள் (ஏப்ரல் 19-20) இலங்கை விஜயமானது, வெறும் சம்பிரதாயபூர்வமான அரசமுறைப் பயணமாக அமையாமல், இரு நாடுகளுக்கும் இடையிலான புவிசார் அரசியல் மற்றும் கலாசார உறவுகளை மீள்வரைவு செய்யும் முக்கிய நகர்வாக அமைந்திருக்கிறது.
குறிப்பாக, இலங்கையில் ஏற்பட்டுள்ள புதிய அரசியல் மாற்றங்களுக்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்ட இந்த உயர்மட்ட விஜயம், இந்தியாவின் 'அயலகத்திற்கு முதலிடம்' என்ற கொள்கையின் நீட்சியாகவும், இலங்கையின் புதிய நிர்வாகத்துடன் நம்பிக்கையானதொரு பயணத்தைத் தொடங்குவதற்கான வலுவான சமிக்ஞையாகவும் பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருடனான சந்திப்புகளின் போது, இருதரப்பு உறவுகளின் எதிர்காலப்பாதை குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
பொருளாதார மேம்பாடு, கல்வி, சுகாதாரம் மற்றும் முதலீடு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இணக்கம் காணப்பட்டிருக்கிறது.
குறிப்பாக, இலங்கையின் அரச நிர்வாகக் கட்டமைப்பை டிஜிட்டல் மயமாக்குவதிலும் மனிதவள மேம்பாட்டிலும் இந்தியாவின் தொழில்நுட்பப் பாய்ச்சலைப் பகிர்ந்து கொள்ள முன்வந்திருப்பது, ஒரு நவீன இலங்கையை நோக்கிய பயணத்தில் இந்தியா மூலோபாயப் பங்காளியாக இருக்க விரும்புவதை உணர்த்துகிறது.
'தித்வா' சூறாவளி போன்ற இயற்கை அனர்த்தங்களின் போதும், பொருளாதார நெருக்கடி நிலவிய தருணங்களில் வழங்கப்பட்ட எரிபொருள் மற்றும் நிதியுதவிகள் குறித்தும் இங்கு நன்றியுடன் நினைவுகூரப்பட்டது. இது இரு நாடுகளுக்கும் இடையிலான 'உற்ற நண்பன்' என்ற பிணைப்பை மீண்டும் ஒருமுறை உலகிற்கு உறுதிப்படுத்தியது.
இந்த விஜயத்தின் மிக முக்கியமான மனிதாபிமான மைல்கல்லாக, இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு வழங்கப்பட்ட தீர்வுகளைக் குறிப்பிடலாம்.
பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்தில் நடைபெற்ற புலம்பெயர் இந்தியர்களின் விசேட நிகழ்வில் உரையாற்றிய துணை ஜனாதிபதி, இந்திய வம்சாவளி மக்களுக்கான குடியுரிமை வழங்கும் திட்டத்தை ஆறாம் தலைமுறை வரை நீட்டிப்பதாக அறிவித்தார். இது மலையக மக்களின் அடையாளச் சிக்கல்களுக்குப் பெரியதொரு வரப்பிரசாதமாகும்.
'ஊட்டி முதல் அட்டன் வரை, மதுரையிலிருந்து மஸ்கெலியா வரை எமது தொப்புள்கொடி உறவு வியாபித்துள்ளது' என்று அவர் உணர்ச்சி;பூர்வமாகக் குறிப்பிட்டது, இரு நாட்டு மக்களுக்கும் இடையிலான கலாசார ஒருமைப்பாட்டைப் பிரதிபலித்தது.
மேலும், இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் முன்னெடுக்கப்படும் வீடமைப்புத் திட்டங்களின் கீழ், மூன்றாம் கட்டத்தில் பூர்த்தி செய்யப்பட்ட 145 வீடுகளை அவர் வைபவ ரீதியாக கையளித்தார்.
இதுவரை 50,000 வீடுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், எதிர்காலத்தில் மேலும் 10,000 வீடுகள் நிர்மாணிக்கப்படும் என்ற உறுதிமொழி, அம்மக்களின் வாழ்வாதார மேம்பாட்டில் இந்தியாவின் நேரடிப் பங்களிப்பைத் தொடரச் செய்துள்ளது.
அதேபோல், இலங்கைத் தோட்டத் தொழிலாளர் கல்வி அறக்கட்டளை ஊடாக வழங்கப்படும் கல்விப் புலமைப்பரிசில் நிதியுதவியை உயர்த்துவதற்கும், பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் எடுக்கப்பட்ட தீர்மானம், எதிர்காலத் தலைமுறையினரின் கல்வித் தரத்தை உயர்த்துவதில் இந்தியாவின் நீண்டகால அக்கறையை வெளிப்படுத்தியது.
அரசியல் ரீதியாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் மட்டுமல்லாது, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவையும் சந்தித்து அவர் கலந்துரையாடினார். இது இலங்கையின் உள்நாட்டு அரசியல் நிலைப்பாடுகளுக்கு அப்பாற்பட்டு, ஒரு தேசமாக இலங்கையுடன் இந்தியா கொண்டுள்ள நிலையான மற்றும் ஆழமான உறவை வெளிப்படுத்தியது.
நுவரெலியா சீதை அம்மன் ஆலயத்தில் அவர் மேற்கொண்ட வழிபாடு, இரு நாடுகளையும் இணைக்கும் இதிகாச காலத்து ஆன்மீகப் பாலத்தை மீண்டும் நினைவூட்டியது.
மீனவர் பிரச்சினை போன்ற சிக்கலான விவகாரங்களுக்கு இரு தரப்பினரும் இணைந்து ஒரு நிரந்தரத் தீர்வை எட்ட வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தியமை, பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்பில் இந்தியாவின் பொறுப்புணர்வைக் காட்டியது.
பொருளாதார ரீதியாக இந்தியா அடைந்து வரும் அபரிமிதமான வளர்ச்சியின் பயன்கள், அதன் அண்டை நாடான இலங்கையையும் சென்றடைய வேண்டும் என்பதில் அவர் காட்டிய உறுதிப்பாடு, 'இணைவோம், வளர்வோம்' என்ற தாரக மந்திரத்தை வெறும் சொல்லாக அல்லாமல் செயலாக மாற்றும் முயற்சியாகும்.
இலங்கை வாழ் மக்களின் மகிழ்ச்சியிலும் துயரத்திலும் இந்தியா எப்போதும் உற்ற துணையாக இருக்கும் என்ற அவரது வாக்குறுதி, இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளுக்கு அப்பால் இருக்கும் மனிதநேயப் பிணைப்பை உணர்த்தியது.
இந்தியாவின் வரவு-செலவுத் திட்டத்தில் இலங்கைக்காக நிதி ஒதுக்கீடு செய்தமை மற்றும் எரிசக்தி நெருக்கடியின் போது 38,000 மெற்றிக் தொன் எரிபொருளை வழங்கியமை போன்ற செயல்கள் வெறும் வணிக ரீதியிலானவை அல்ல. அவையொரு மூத்த சகோதரனின் கடமையாகவே பார்க்கப்படுகின்றன.
இந்த விஜயமானது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பன்முகத்தன்மை கொண்ட உறவை மேலும் பலப்படுத்தியுள்ளது. குறிப்பாக, தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் துறைகளில் இந்தியாவின் ஒத்துழைப்பு இலங்கையின் எதிர்கால வளர்ச்சிக்கு ஒரு ஊக்கியாக அமையும். மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டமை மற்றும் வீடமைப்பு திட்டங்களை துரிதப்படுத்தியமை என்பன இந்தியாவின் மனிதாபிமான முகத்தை மீண்டும் பறைசாற்றியுள்ளது. அத்துடன் பிராந்திய பாதுகாப்பில் இரு நாடுகளும் கொண்டுள்ள ஒத்த கருத்துக்கள், தெற்காசியாவின் ஸ்திரத்தன்மைக்கு வழிவகுக்கும்.
இந்திய துணை ஜனாதிபதியின் இந்த விஜயம், பாதுகாப்பு மற்றும் பொருளாதார ரீதியான ஒத்துழைப்புகளைத் தாண்டி, சாதாரண மக்களின் உணர்வுகளோடும் கலாசாரத்தோடும் கலந்த ஒரு 'சகோதரத்துவ இராஜதந்திரத்தை' மீண்டும் ஒருமுறை ஆழமாக வேரூன்றச் செய்துள்ளது.
இது பிராந்திய ஒத்துழைப்பில் புதிய அத்தியாயத்தின் தொடக்கமாக அமைவதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளது.
இந்திய மற்றும் இலங்கை தேசங்களுக்கு இடையிலான இந்த ஒத்துழைப்பு, எதிர்காலத்தில் தெற்காசிய பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கும் வளர்ச்சிக்கும் ஒரு முன்மாதிரியாகத் திகழும் என்பதில் ஐயமில்லை. உத்தியோகபூர்வ சந்திப்புகள், ஆன்மீகப் பயணங்கள் மற்றும் புலம்பெயர் மக்களுடனான உரையாடல்களென அனைத்து அம்சங்களிலும் இந்த விஜயம் முழுமையான வெற்றியைப் பெற்றுள்ளது.





