பிரபல நிறுவனங்களின் பெயரில் நிதி மோசடி - பொலிஸார் எச்சரிக்கை
அறிமுகமில்லாதவர்களால் பகிரப்படும் இணைய இணைப்புகளில் உள் நுழைதல் அல்லது செயலிகளை நிறுவுவதையோ தவிர்க்கவும்.
இணையம் மற்றும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் சமீபகாலமாக அதிகரித்துள்ளது. நாடளாவிய ரீதியில் மேற்படி மோசடிகள் குறித்து நாளாந்தம் பல முறைபாடுகள் பதிவாவதைக் காணக் கூடியதாக உள்ளது.
நாட்டில் உள்ள முன்னணி மற்றும் நம்பிக்கைக்குரிய நிறுவனங்களின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தி, மோசடிக்காரர்கள் பொதுமக்களை ஏமாற்றி மோசடி செய்து வருவதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பிரபல நிறுவனங்களின் பிரதிநிதிகளென அறிமுகமாகும் நபர்கள், அந்நிறுவனத்தின் சேவையைப் பெற விசேட கைபேசி செயலி ஒன்றை தரவிறக்கம் செய்யுமாறு தெரிவித்து, பின்னர், அந்த செயலியை நிறுவ கைபேசியின் திரையை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு அறிவுறுத்துகின்றனர். அவ்வாறான தகவல்களைப் பெற்று கைபேசியை மோசடிக்காரர்கள் தொலைவிலிருந்தே இயக்கி இணைய வங்கிச் சேவைகளின் ஊடாக பணத்தை மிக நுணுக்கமான முறையை கையாண்டு மோசடி செய்சவதாகவும் தெரியவந்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் அதிக இலாபம் ஈட்டும் முதலீடுகள் தொடர்பான விளம்பரங்கள் குறித்து பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுவது அவசியம். தனிப்பட்ட வங்கி கணக்கு இலக்கம், கடவுச்சொற்கள் மற்றும் ஒ.டி.பி இலக்கங்களை எக்காரணம் கொண்டும் முன்றாம் தரப்பினக்கு பகிர வேண்டாம்.
அறிமுகமில்லாதவர்களால் பகிரப்படும் இணைய இணைப்புகளில் உள் நுழைதல் அல்லது செயலிகளை நிறுவுவதையோ தவிர்க்கவும். குறிப்பாக, உங்கள்கைபேசி திரையை மற்றவர்கள் பார்க்கும் வகையில் பகிர்வதை முற்றாகத் தவிர்த்துக் கொள்ளவும். அவ்வாறு நிதி மோசடிக்கு ஆளாக நேரிடும் பட்சத்தழல் உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கிக்கு அறிவித்து கணக்குகளை முடக்குவதுடன் பொலிஸாருக்கும் தகவல் வழங்குமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு வலியுறுத்தியுள்ளது.





