ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் 974, 000 டிராம் நிதி மோசடியில் சிக்கியது
கொழும்பில் உள்ள ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் இந்த போலியான கொடுப்பனவுகளை கண்டறிந்து, உடனடியாக உள்ளன விசாரணையை ஆரம்பித்தது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சேவை வழங்குநர் ஒருவரின் மின்னஞ்சல் கணக்கு மூன்றாம் தரப்பினரால் ஹேக் செய்யப்பட்டுள்ளதால் மோசடியான நிதி கொடுக்கல் வாங்கல் இடம்பெற்றுள்ளது என்று ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது.
இதற்கமைய தமக்கு செலுத்தப்பட வேண்டிய டிராம் 974, 000 தொகையிலான கொடுப்பனவு கிடைக்கப்பெறவில்லை என்று குறித்த சேவை வழங்குநர் என்று ஸ்ரீ லங்கன் எயார்லைன் நிறுவனத்துக்கு அறிவுறுத்தியுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சேவை வழங்குநர் ஒருவரின் மின்னஞ்சல் கணக்கு ஹேக் செய்யப்பட்டமையுடன் தொடர்புடைய தவறான கொடுப்பனவு மற்றும் இந்தியாவில் நிறுவனத்தின் நிதி முறைகேடு செய்யப்பட்டமை ஆகிய இரு பரிவர்த்தனைகள் குறித்து ஸ்ரீ லங்கன் எயார்லைன் நிறுவனம் விளக்கமளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: துபாயை தளமாகக் கொண்ட ஒரு சேவை வழங்குநரால் தமக்கு செலுத்தப்பட வேண்டிய டிராம் 974, 000 தொகையிலான கொடுப்பனவு கிடைக்கப்பெறவில்லை என்று ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், குறித்த சேவை வழங்குநரின் மின்னஞ்சல் கணக்கு ஒரு மூன்றாம் தரப்பினரால் ஹேக் செய்யப்பட்டு வங்கி கணக்கு விபரங்கள் மாற்றப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது. மேலும், அந்த மூன்றாம் தரப்பினர் நிறுவப்பட்ட உத்தியோகபூர்வ தகவல் தொடர்பு வழிகள் மூலம் கோரப்பட்ட கூடுதல் ஆவண ஆதாரங்களையும் வழங்கி, தாங்கள் உண்மையான சேவை வழங்குநருடன் தான் நேரடியாக தொடர்பில் இருக்கிறோம் என்று ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை நம்ப வைத்து ஏமாற்றியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் குறித்த கணக்கிற்கு மேலும் எவ்வித கொடுப்பனவுகளும் செல்வதைத் தடுக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதுடன், போலியான இந்த பரிவர்த்தனை விவகாரம் குறித்து ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிகாரிகளுக்கும், இலங்கையின் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கும் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
இந்த முறைகேடு தொடர்பான விசாரணைகள் தற்போது இலங்கை மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அங்கீகரிக்கப்பட்ட கையொப்பங்களுடன் கூடிய, நிறுவப்பட்ட மின்னஞ்சல் அறிவுறுத்தல்கள் மற்றும் துணை ஆவணங்களின் அடிப்படையிலேயே இந்த கொடுப்பனவு செய்யப்பட்டது என்பதை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மீண்டும் வலியுறுத்துகிறது. எனினும், இவை அனைத்தும் பின்னர் ஹேக் செய்யப்பட்ட சேவை வழங்குநரின் கணக்கிலிருந்து மோசடியாக உருவாக்கப்படுபவை என்பது கண்டறியப்பட்டது. மேலும், இந்த நிலைமையானது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டிற்கு முற்றிலும் அப்பாற்பட்ட, சேவை வழங்குநரின் மின்னஞ்சல் அமைப்பில் ஏற்பட்ட ஹேக் காரணமாகவே ஏற்பட்டுள்ளதால், அவர்களுக்கு நிதி கிடைக்காததற்கான பொறுப்பையும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிராகரிக்கிறது.
இந்தியாவின் சென்னையிலுள்ள ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அலுவலகத்தில் இடம்பெற்ற நிதி முறைகேடு தொடர்பாக, சென்னையில் உள்ள நிதித்துறையில் பணிபுரியும் இந்தியப் பிரஜைகளான சில ஊழியர்கள், கொடுப்பனவு விபரங்கள் மற்றும் கையொப்பங்களை மோசடியாக மாற்றி, ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் 22 மில்லியன் இந்திய ரூபா தொகையை முறைகேடு செய்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் இந்த போலியான கொடுப்பனவுகளைக் கண்டறிந்து, உடனடியாக உள்ளன விசாரணையை ஆரம்பித்தது. இந்த உள்ளக விசாரணையைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட ஊழியர்கள் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டார்கள். இவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.தற்போது விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. மேலும், ஏற்பட்ட நிதி இழப்பை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.





