இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி
தெற்காசிய பிராந்திய நாடுகளின் நாணய பெறுமதிகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை ரூபாவின் பெறுமதி சுமார் 4.5 சதவீதத்துக்கும் மேற்பட்ட வீழ்ச்சியைப் பதிவுசெய்திருக்கிறது.
இலங்கை மீண்டுமொரு பொருளாதார நெருக்கடியை நோக்கித் தள்ளப்படுகிறதா என்ற கரிசனையைத் தோற்றுவிக்கும் வகையில் அமெரிக்க டொலரொன்றுக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 354 ரூபாவாக உயர்வடைந்துள்ளது.
இந்த ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியானது இம்மாதத்தில் தெற்காசியப்பிராந்தியத்தில் பதிவான நாணயமொன்றின் மிகமோசமான செயற்திறன் வீழ்ச்சியாகக் கருதப்படுகிறது.
இலங்கை மத்திய வங்கியினால் 21-05-2026 அன்று வெளியிடப்பட்ட நாணயமாற்று விகிதங்களின் பிரகாரம், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி பதிவான 342.70 ரூபாவிலிருந்து 354 ரூபாவாக உயர்வடைந்திருக்கிறது.
கடந்த பெப்ரவரி மாதம் முதல் மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் தீவிரமடைந்த போர்ப்பதற்றங்கள், அதன் விளைவாக ஏற்பட்ட எரிபொருள் விலையேற்றம், சுற்றுலாத்துறை வருமானத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி, உள்நாட்டில் மின்சாரம், போக்குவரத்துக் கட்டணங்கள் மற்றும் பொருட்களின் விலை உயர்வு போன்ற காரணிகள் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சிக்குப் பங்களிப்புச்செய்துள்ளன.
அதேபோன்று தெற்காசிய பிராந்திய நாடுகளின் நாணய பெறுமதிகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை ரூபாவின் பெறுமதி சுமார் 4.5 சதவீதத்துக்கும் மேற்பட்ட வீழ்ச்சியைப் பதிவுசெய்திருக்கிறது.
இந்த வீழ்ச்சி அத்தியாவசிய உணவுப்பொருட்கள், மருந்துப்பொருட்கள், ஏனைய சேவைக்கட்டணங்கள் உள்ளிட்டவற்றில் சடுதியான அதிகரிப்பை ஏற்படுத்தக்கூடும் என்ற கரிசனை தற்போது எழுந்துள்ளது.





