கடந்தகால வரைவுகளிலிருந்தே புதிய அரசியலமைப்பு உருவாக்கம்: அமைச்சர் ஹர்ஷன
பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவும் புதிதாகவன்றி, முன்னைய வரைவுகளை அடிப்படையாகக்கொண்டே தயாரிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணிகளை பூச்சியத்திலிருந்து ஆரம்பிக்கவேண்டிய அவசியமில்லை எனவும், மாறாக கடந்த காலங்களில் தயாரிக்கப்பட்ட வரைவுகளை அடிப்படையாகக்கொண்டு அப்பணிகளைத் தொடரமுடியும் எனவும் சுட்டிக்காட்டியுள்ள நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, இருப்பினும் அதற்குரிய காலவரையறை குறித்து சரிவரக்கூறமுடியாது எனத் தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் 19-02-2026 அன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பில், புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.
அதன்படி புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணிகள் ஆரம்பிக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியினால் வழங்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.
இருப்பினும் அதனை முதலில் இருந்து ஆரம்பிக்கவேண்டிய அவசியமில்லை எனவும், மாறாக ஏற்கனவே கடந்த காலங்களில் பல்வேறு வரைவுகள் மற்றும் ஆவணங்கள் தயாரிக்கப்பட்டிருப்பதனால், அவற்றை அடிப்படையாகக்கொண்டு புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணியைத் தொடர்ந்து முன்னெடுக்கமுடியும் எனவும் சுட்டிக்காட்டினார். பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவும் புதிதாகவன்றி, முன்னைய வரைவுகளை அடிப்படையாகக்கொண்டே தயாரிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை கடந்தகால வரைவுகளை அடிப்படையாகக்கொண்டு புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணிகள் முன்னெடுக்கப்படும் என்றாலும், அதற்குரிய காலவரையறை தொடர்பில் உறுதியாகக் கூறமுடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.





