நான் அரசியல் செய்ய வரவில்லை: தென்னிந்திய துணைத்தூதுவர் கேதீஸ்வரன்
எந்தவொரு அரசியல் பிரசாரத்திலும் தான் ஈடுபடவில்லை என மறுப்பு வெளியிட்டுள்ள துணைத்தூதுவர் கேதீஸ்வரன், இந்த விஜயம் மீனவ சமூகங்களுடனான வழமையான சந்திப்பு மாத்திரமே என்றும் விளக்கமளித்துள்ளார்.
புதுச்சேரியில் எந்தவொரு அரசியல் பிரசாரத்திலும் தான் ஈடுபடவில்லை என மறுப்பு வெளியிட்டிருக்கும் தென்னிந்தியாவுக்கான இலங்கைத் துணைத்தூதுவர் கணேசநாதன் கேதீஸ்வரன், தனது இராஜதந்திரக் கடமைகளின் ஓரங்கமாக மீனவ சமூகங்களுடனான வழமையான சந்திப்பிலேயே ஈடுபட்டதாக விளக்கமளித்துள்ளார்.
தென்னிந்தியாவுக்கான இலங்கைத் துணை தூதுவர் கணேசநாதன் கேதீஸ்வரன் தமிழகத்தின் புதுச்சேரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு அரசியல் நிகழ்வில் கலந்துகொண்டதாகவும், இதனூடாக அவர் தேர்தல் காலப்பகுதியில் இராஜதந்திரிகளுக்குரிய விதிமுறைகளை மீறியிருப்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து இந்திய தேசிய காங்கிரஸின் சிரேஷ்ட தலைவரான பவன் கேரா அவரது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் செய்திருக்கும் பதிவில், துணைத்தூதுவர் கேதீஸ்வரன் ஒரு பிராந்திய அரசியல் கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் பங்கேற்றதாகக் குற்றஞ்ட்டியுள்ளார். இது ஒரு நாட்டின் உள்விவகாரங்களில் வெளிநாட்டு இராஜதந்திரிகள் தலையிடுவதைத் தடுக்கும் 1961 ஆம் ஆண்டின் இராஜதந்திர உறவுகளுக்கான வியன்னா உடன்படிக்கையை கடுமையாக மீறும் செயல் எனவும் அவர் விசனம் வெளியிட்டுள்ளார்.
'லட்சிய ஜனநாயக கட்சி'யின் (LJK) தலைவரும், தொழிலதிபர் சாண்டியாகோ மார்ட்டினின் மகனுமான ஜோஸ் சார்லஸ் மார்ட்டினின் அழைப்பின் பேரில் புதுச்சேரியின் வைத்திக்குப்பம் பகுதியில் வசிக்கும் மீனவர்களை கேதீஸ்வரன் சந்தித்ததாக கேரா அவரது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் (BJP) புதுச்சேரி தலைவரும், ராஜ் பவன் தொகுதி வேட்பாளருமான வி.பி.ராமலிங்கம் அந்த நிகழ்வில் கலந்துகொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு இந்நிகழ்வின் ஏற்பாட்டாளர்களுக்கு எதிராக இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா எனவும், வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் இதுகுறித்து முறையான இராஜதந்திர ரீதியிலான கண்டனத்தை வெளியிடுவாரா எனவும் அவர் தனது பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்நிலையில் எந்தவொரு அரசியல் பிரசாரத்திலும் தான் ஈடுபடவில்லை என மறுப்பு வெளியிட்டுள்ள துணைத்தூதுவர் கேதீஸ்வரன், இந்த விஜயம் மீனவ சமூகங்களுடனான வழமையான சந்திப்பு மாத்திரமே என்றும் விளக்கமளித்துள்ளார்.
“நான் இங்கு அரசியல் செய்ய வரவில்லை,” என 'த இந்து' நாளிதழுக்கு அளித்திருக்கும் நேர்காணலில் கூறியிருக்கும் அவர், இந்த சந்திப்பு ஒரு திறந்தவெளி பொது இடத்தில் நடைபெற்றதாகவும், இது எந்த அரசியல் கட்சியாலும் ஏற்பாடு செய்யப்படவில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார். மேலும் தனது உத்தியோகபூர்வ கடமைகளின் ஓரங்கமாக புதுச்சேரி, நாகப்பட்டினம் மற்றும் கன்னியாகுமரி உள்ளடங்கலாக தமிழகம் முழுவதும் உள்ள மீனவர்களைத் தான் தொடர்ந்து சந்தித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.





