பொருளாதாரத்தை மீட்கும் பொறுப்பை ஏற்கத் தயார் - திலித் ஜயவீர
சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தை மட்டும் நம்பியிருக்க முடியாது. நாம் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, எமது நாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பில்லாத வகையில் தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
முறையான வேலைத்திட்டம் இன்றி எந்தவொரு பொறுப்பையும் ஏற்பது தவறு. தற்போதைய பொருளாதார நெருக்கடியை கையாள்வதற்கு தெளிவான மற்றும் அறிவியல் ரீதியான வேலைத்திட்டம் எம்மிடம் உள்ளது. இன்று அந்தப் பொறுப்பை வழங்கினால், இந்த நொடியே அதனை நடைமுறைப்படுத்திக் காட்ட நான் தயாராக இருக்கின்றேன் என சர்வஜன அதிகாரம் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் வசிக்கும் இலங்கை சமூகத்தினருடன் சர்வஜன அதிகாரம் மற்றும் மெல்போர்ன் சொலிடாரிட்டி ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த திலித்துடன் கைகோருங்கள் எனும் விசேட மக்கள் சந்திப்பு, மெல்போர்ன் அகேசியா வளாக அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், டொலர் பற்றாக்குறையினால் ஏற்பட்டுள்ள அழுத்தமே நாட்டின் முதன்மையான பிரச்சினையாகும். இதனை முகாமைத்துவம் செய்வதற்கு முதலாவதாக மக்களுடன் உண்மையான மற்றும் நம்பிக்கையானதொரு உரையாடலை முன்னெடுக்க வேண்டும். இன்று இந்நாட்டில் டொலர்கள் மட்டுமல்ல, நலிவடைந்துள்ள தலைவர்கள் மீதான நம்பிக்கையுமே மீண்டும் கட்டியெழுப்பப்பட வேண்டும். உண்மையை வெளிப்படையாகக் கூறுவதன் மூலம் சில மணிநேரங்களுக்குள்ளேயே மக்கள் மத்தியில் அந்த நம்பிக்கையை ஏற்படுத்த முடியும்.
எனது அரசியல் பயணம் பல்கலைக்கழக காலத்தில் ஆரம்பமானது. கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்துக்கு பிறகு எமது புதிய அரசியல் இயக்கம், மௌபிம ஜனதா கட்சியாகவும் பின்னர் சர்வஜன அதிகாரமாகவும் உருவெடுத்தது. பாரம்பரிய அரசியல் கோட்பாடுகளுக்கு சவால் விடுக்கும் வகையில், தொழில்முயற்சி சார்ந்த அரசொன்றை உருவாக்குவதே எமது இலக்காகும். நாட்டின் தேசியத்தையும், பௌத்த நாகரிகத்தையும் அடிப்படையாகக் கொண்ட தேசியவாதமே நாட்டின் முன்னேற்றத்துக்கு அத்தியாவசியமானது. இது இனவாதமல்ல. நாட்டை கட்டியெழுப்புவதற்கான உந்துசக்தியாகும்.
பாடசாலைக் கல்வியிலிருந்து பாராளுமன்றம் வரை, இளைஞர்களை புத்தாக்கத்துடன் சிந்திக்கும் மற்றும் இடர்பாடுகளை முகாமைத்துவம் செய்யும் தொழில்முயற்சியாளர்களாக நாம் மாற்ற வேண்டும். இன்று, சர்வதேச அரசியல் செல்வாக்கிற்கு அடிபணியாமல் நாட்டை எவ்வாறு கொண்டு செல்வது என்பதுதான் பெரிய சவாலாக உள்ளது. இந்தச் சவால்களை முறியடிப்பதற்குத் தேவையான ஆளுமையும், அறிவும், முகாமைத்துவத் திறனும் எம்மிடம் உள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தை மட்டும் நம்பியிருக்க முடியாது. நாம் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, எமது நாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பில்லாத வகையில் தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். கடன்தொகைகளை வழங்குபவர்களைக் காட்டிலும், கடன்பட்ட நாடாகிய நாம் எந்தளவுக்கு பலமான நிலையில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கிறோம் என்பதிலேயே வெற்றி தங்கியுள்ளது. அந்த வலிமையும் ஆளுமையும் கொண்ட தலைமைத்துவமே நாட்டுக்கு தேவை.
எமது சர்வஜன அதிகார சபையின் ஊடாக நாங்கள் கிராமப்புற மட்டத்தில் மக்களைத் திரட்டி, அவர்களின் ஆக்கபூர்வமான கருத்துக்களைப் பெற்று வருகிறோம். வெறும் அரசியல் பிரசாரங்களை முன்னெடுக்காமல், மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பயிற்சிகள் மற்றும் மூலதன உதவிகளை வழங்குகிறோம். ஏற்கனவே 50க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட பல தொழில்முயற்சியாளர்கள் எமது வேலைத்திட்டத்தினால் பயன் பெற்றுள்ளனர்.
மெல்போர்ன் வாழ் இலங்கையர்களின் தாய்நாடு மீதான இந்த அக்கறையும், நேசமும் எதிர்கால இலங்கையை கட்டியெழுப்புவதில் பெரும் சக்தியாக அமையும். தாயகத்திலிருந்து ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் வாழ்ந்தாலும், இலங்கை மீதான பற்றுறுதியுடனும் நேசத்துடனும் இருக்கும் உங்கள் அனைவரது பங்களிப்பும், ஒரு தொழில்முயற்சி சார்ந்த இலங்கையை உருவாக்குவதில் முக்கிய மைல்கல்லாக அமையும் என்றார்.





