பிரதி சொலிசிட்டர் ஜெனரலின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது - சரத் வீரசேகர
அசாத் மௌலானாவின் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு சுரேஷ் சலே மீது பழி சுமத்துவதன் பின்னணியில் அரசியல் நோக்கம் உள்ளது.
வெளிநாட்டில் அரசியல் தஞ்சம் கோரியுள்ள அசாத் மௌலானவின் வாக்குமூலத்துக்கமைய உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சுரேஷ் சலே என்று பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலிப பீரிஸ் குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அரசியல் நோக்கத்தை இலக்காகக் கொண்டே இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
கொழும்பில் 24-05-2026 அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி சுரேஷ் சலே என்று சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பிரான்ஸில் அரசியல் தஞ்சம் கோரியுள்ள அசாத் மௌலானாவின் வாக்குமூலத்துக்கு அமைவாகவே அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேவை பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலிப பீரிஸ் பிரதான சூத்திரதாரியாக சித்திரித்துள்ளார்.
அசாத் மௌலானாவின் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு சுரேஷ் சலே மீது பழி சுமத்துவதன் பின்னணியில் அரசியல் நோக்கம் உள்ளது. குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் என்பது பல்வேறு விசாரணைகள் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது புதிய விடயத்தை குறிப்பிடுவது மக்களை தவறாக வழிநடத்தும் ஒரு செயற்பாடு என்றே குறிப்பிட வேண்டும்.
குண்டுத்தாக்குதல் விவகாரத்தை இந்த அரசாங்கம் முழுமையாக அரசியல்மயப்படுத்தியுள்ளது.கத்தோலிக்க சபையும், கத்தோலிக்க மக்களும் போலி வாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்டுள்ளார்கள். குண்டுத்தாக்குதல் இடம்பெற்ற போது பாதுகாப்பு துறையில் முக்கிய பதவிகளில் இருந்தவர்கள் அந்த தாக்குதல்களை தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை. தற்போது அவர்கள் தான் விசாரணைகளை மேற்கொண்டு பிறிதொருவர் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள் இது வேடிக்கையானது என்றார்.





