அமெரிக்காவின் அடுத்த இலக்கு கியூபாவா?
கியூபாவின் மீதான அமெரிக்காவின் அடுத்த நகர்வு, இலங்கையின் வெளியுறவுக் கொள்கையின் உண்மையான முகத்திரையை கிழிக்கும் ஒரு வரலாற்று சான்றாக அமையப்போகிறது.
சர்வதேச அரசியல் களம் தற்போது பாரிய மாற்றத்தின் விளிம்பில் நிற்கிறது. வல்லரசு நாடுகளின் அதிகாரப் போட்டி, வளங்களைச் சுரண்டும் தந்திரங்கள் மற்றும் சிறிய நாடுகளின் பிழைப்புவாத அரசியல் என்று உலக வரைபடம் புதிய சவால்களைச் சந்தித்து வருகின்றது.
இந்த சூழலில், இலங்கைக்கான கியூப தூதுவர் பட்றீசியா லசாரா பீகோ குவேரா அண்மையில் பிரதமர் ஹரிணி அமரசூரியவைச் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்துப் பேசியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.
அதற்கு முன்னதாக, அவர் ஜே.வி.பி. தலைமையகத்திற்குச் சென்று கட்சியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவைச் சந்தித்திருந்தார். ஈரான் மீதான அமெரிக்காவின் போர் மிரட்டல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் இடம்பெற்றுள்ள இந்தச் சந்திப்புகள், வெறும் இராஜதந்திரச் சந்திப்புகளுக்கும் அப்பால் ஆழமான அரசியலைக் கொண்டுள்ளன.
இலங்கைக்கும் கியூபாவுக்கும் இடையிலான உறவு என்பது தசாப்த காலப் பாரம்பரியத்தைக் கொண்டது. சர்வதேச அரங்கில் இலங்கை தனிமைப்படுத்தப்பட்ட போதெல்லாம், கியூபா ஒரு உற்ற நண்பனாகத் தார்மீக அடிப்படையில் குரல் கொடுத்து வந்துள்ளது.
குறிப்பாக, ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கை போர்க்குற்றச்சாட்டுகள் மற்றும் மனித உரிமை மீறல் அழுத்தங்களை எதிர்கொண்டபோது, கியூபா எவ்வித நிபந்தனையுமின்றி இலங்கையின் பக்கம் நின்றது. ராஜபக்ஷவினர் காலம் முதல் கடந்த நல்லாட்சி அரசாங்கம் வரை, இராஜதந்திர ரீதியாக இலங்கைக்குப் பலம் சேர்த்த நாடுகளில் கியூபா முதன்மையானது.
ஈரானும் இவ்வாறே பொருளாதார மற்றும் வலுசக்தி ரீதியில் இலங்கைக்குத் துணை நின்றது. ஆனால், இன்று அந்தப் பழைய நண்பர்களை இலங்கை அணுகும் விதம் கவலையளிப்பதாக உள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் மீள் வருகை, உலக நாடுகளுக்கு ஒரு தெளிவான எச்சரிக்கையை விடுத்துள்ளது. வர்த்தகராக அரசியலை அணுகும் டிரம்ப், அமெரிக்காவின் எதிரிகளாகக் கருதப்படும் நாடுகளின் மூல வளங்களை கைப்பற்றுவதையே தனது முதன்மை இலக்காகக் கொண்டுள்ளார்.
காசாவை இஸ்ரேலின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து அதனைக் கைப்பற்றும் திட்டம், உக்ரைனை அச்சுறுத்தி அந்நாட்டின் கனிம வளங்களை அகழ்ந்தெடுக்கும் உரிமையைப் பறித்தமை என்று அவரது பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
இதன் மிக அண்மைய உதாரணமாக வெனிசுவேலாவைக் குறிப்பிடலாம். ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் கடத்தப்பட்டதும், அந்நாட்டின் எண்ணெய் வளம் அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் சென்றதும் ஒரு சர்வதேசப் பேரதிர்ச்சியாகும்.
வெனிசுவேலாவின் வீழ்ச்சி கியூபாவை நேரடியாகப் பாதித்துள்ளது. ஏனெனில் கியூபாவுக்கான பிரதான எரிபொருள் விநியோகஸ்தராக வெனிசுவேலாவே இருந்தது. கடந்த மூன்று மாதங்களாக எரிபொருள் கிடைக்காத நிலையில், கியூபாவில் மின்சாரம் மற்றும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்களின் மன உறுதி சோதிக்கப்படுகிறது.
ஆறு தசாப்தங்களாக கியூபாவின் கம்யூனிச ஆட்சியை வீழ்த்தத் துடிக்கும் அமெரிக்காவுக்கு, காஸ்ட்ரோவின் மறைவுக்குப் பின்னரான தற்போதைய சூழல் சாதகமாகத் தெரிகிறது. காஸ்ட்ரோவைக் கொல்ல சிஐஏ 634 முறை சதி செய்ததாக வரலாறுகள் கூறுகின்றன. புளோரிடா கரையில் இருந்து வெறும் 150 கி.மீ தொலைவில் இருந்துகொண்டு அமெரிக்காவுக்கு சவால் விடுத்த கியூபா, இன்று வெனிசுவேலாவின் எண்ணெய் மற்றும் ரஷ்யாவின் முழுமையான ஆதரவின்றித் தத்தளிக்கிறது. ஈரானைத் தொடர்ந்து அடுத்த ஆட்சி மாற்றத்தை கியூபாவில் ஏற்படுத்துவதே தனது இலக்கு என்றவாறு ட்ரம்ப் பகிரங்கமாக முழங்குகிறார்.
இந்த நெருக்கடியான நேரத்தில் கியூப தூதுவர் இலங்கையின் ஆட்சியாளர்களை சந்திப்பது, சர்வதேச அளவில் தனக்கு ஆதரவான நாடுகளை அணிதிரட்டும் ஒரு முயற்சியே ஆகும்.
ஆனால், இலங்கை இன்று ஒரு 'பிழைப்புவாத' அரசியலை முன்னெடுத்து வருகிறது. அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் ஈரானியக் கப்பல் தாக்கப்பட்டபோது இலங்கை மௌனம் காத்தது.
மதுரோ கடத்தப்பட்டபோது இலங்கை கண்டனம் தெரிவிக்கவில்லை. ஜே.வி.பி ஒரு பெயரளவு அறிக்கையோடு தனது கடமையை முடித்துக்கொண்டது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், டிரம்ப்பை பகைத்துக்கொள்ளாமல் இருப்பதையே தனது ஆட்சிக் கவசமாக கருதுகிறது. இது வெறும் தந்திரம் என்பதைத் தாண்டி, பலவீனமான வெளியுறவுக் கொள்கையின் வெளிப்பாடாகும்.
தெற்காசியப் பிராந்தியத்தில் ஒரு காலத்தில் அணிசேரா நாடுகளின் வரிசையில் கம்பீரமாக நின்ற இலங்கை, இன்று வல்லரசுகளின் அதட்டலுக்குப் பயந்து தன் பழைய நண்பர்களுக்குக் கைகொடுக்க மறுக்கிறது. சர்வதேச உறவுகளில் 'நன்றி மறப்பது' என்பது ஒரு தேசத்தின் நற்பெயருக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.
ரஷ்யாவின் முதலாவது எண்ணெய் கப்பல் ஹவானாவை சென்றடைந்திருந்தாலும், அமெரிக்காவின் பிடி கியூபாவைச் சுற்றி இறுகி வருகிறது. இலங்கை போன்ற நாடுகள் தங்களின் இராஜதந்திரத் தார்மீகங்களை அடகு வைத்துவிட்டு, வல்லரசுகளின் காலடியில் தஞ்சம் புகுவது நீண்ட கால அடிப்படையில் பாதிப்பையே ஏற்படுத்தும்.
'அமெரிக்காவின் அடுத்த இலக்கு கியூபாவா?' என்ற கேள்விக்கான பதில் டிரம்ப்பின் கைகளில் இருக்கலாம். ஆனால், 'இலங்கையின் அடுத்த துரோகம் யாரைத் தேடி?' என்ற கேள்விக்கு விடை தற்போதைய ஆட்சியாளர்களின் பச்சோந்தித்தனமான வெளியுறவுக் கொள்கையில் ஒளிந்துள்ளது.
தற்போது கியூபா தனிமைப்படுத்தப்படுவதை வேடிக்கை பார்க்கும் இலங்கை, நாளை தனக்கொரு சர்வதேச நெருக்கடி வரும்போது எவருடைய கரங்களை எதிர்பார்க்கும்? தார்மீகப் பலமற்ற இராஜதந்திரம் என்பது ஒட்டுண்ணி வாழ்வு போன்றது.
கியூபாவின் மீதான அமெரிக்காவின் அடுத்த நகர்வு, இலங்கையின் வெளியுறவுக் கொள்கையின் உண்மையான முகத்திரையை கிழிக்கும் ஒரு வரலாற்று சான்றாக அமையப்போகிறது.
கியூபா வீழ்ந்தால், அதுவொரு சித்தாந்தத்தின் வீழ்ச்சி மட்டுமல்ல, இலங்கையின் இராஜதந்திர நேர்மைக்கு கிடைக்கும் சாவுமணியும் கூடவாகும். சர்வதேச அரங்கில் நம்பகத்தன்மையை இழந்துவிட்ட ஒரு நாடு, எவ்வளவு நிதியைப் பெற்றாலும் உலகத் தலைவர்களிடையே மதிப்பைப் பெற முடியாது என்பதுதான் கசப்பான உண்மை.
இந்தப் புரிதலை தற்போது ஆட்சிப்பீடத்தில் உள்ள அநுர அராசாங்கத்தினர் புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகின்றது.





