சர்வதேச தொழிலாளர் மாநாட்டில் பங்கேற்பதற்கு தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க ஜெனிவா பயணம்
இம்முறை மாநாட்டின் பிரதான கருப்பொருளாக 'சமூக நீதியை முன்னோக்கி எடுத்துச் சென்று, நிலையான வேலைவாய்ப்புகளை ஊக்குவித்தல்' என்பது ஆழமாக முன்வைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச தொழிலாளர் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 114 ஆவது சர்வதேச தொழிலாளர் மாநாட்டில் பங்கேற்பதற்காக, தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க உள்ளிட்ட இலங்கைத் தூதுக்குழுவினர் 31-05-2026 அன்று சுவிட்சர்லாந்தின் ஜெனிவா சென்றுள்ளனர்.
தொழில் அமைச்சின் ஊடகப் பிரிவினால் நேற்று வெளியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையிலே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில், இவ்வருடம் ஜெனிவா மாநாடானது ஜூன் மாதம் 1 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 12 ஆம் திகதி வரை ஜெனிவாவில் நடைபெறவிருப்பதுடன், இலங்கை அரசாங்கம், தொழில்தருனர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஆகியோரை உள்ளடக்கிய ஒரு முத்தரப்பு தூதுக்குழு இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி இதில் கலந்து கொள்ளவுள்ளது.
இம்முறை மாநாட்டின் பிரதான கருப்பொருளாக 'சமூக நீதியை முன்னோக்கி எடுத்துச் சென்று, நிலையான வேலைவாய்ப்புகளை ஊக்குவித்தல்' என்பது ஆழமாக முன்வைக்கப்பட்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 187 உறுப்பு நாடுகளின் அரசாங்கங்கள், தொழில்தருனர்கள் மற்றும் தொழிலாளர் பிரதிநிதிகள் பங்கேற்கும் இந்த மாநாடானது, உலகளாவிய தொழிலாளர் துறை சார்ந்த கொள்கை ரீதியான விடயங்கள் குறித்து கலந்துரையாடி தீர்மானங்களை மேற்கொள்வதற்கான மிக உயர்ந்த சர்வதேச மாநாடாகக் கருதப்படுகிறது.
'தொழிலாளர் பாராளுமன்றம்' என்று அழைக்கப்படும் இந்த மாநாட்டில், எண்மிய பொருளாதாரம் மற்றும் நவீன தளப் பொருளாதார அமைப்புக்குள் நிலையான வேலைவாய்ப்புகளை ஊக்குவித்தல், பணிப்புரியும் இடங்களில் பாலின சமத்துவத்தைப் பேணுதல், சமூக உரையாடல்களை வலுப்படுத்துதல் மற்றும் அரசாங்கம், தொழில்தருனர்கள், தொழிலாளர்கள் ஆகியோருக்கு இடையிலான முத்தரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்படவுள்ளது.
இந்த மாநாட்டில் பங்கேற்பதன் மூலம் சர்வதேச தொழிலாளர் தரநிலைகள் மற்றும் நடைமுறைகள் குறித்த அனுபவங்களை இலங்கை பகிர்ந்து கொள்வதற்கும், தொழிலாளர் துறையின் புதிய போக்குகள் மற்றும் சவால்கள் தொடர்பான உலகளாவிய கலந்துரையாடல்களில் பங்களிப்பதற்கும் இலங்கைக்கு மிகச்சிறந்த வாய்ப்புக் கிடைக்கும். அத்துடன், நியாயமான சேவை நிபந்தனைகள், சமூக நீதி மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக இலங்கை மேற்கொண்டு வரும் வேலைத்திட்டங்களை சர்வதேச சமூகத்துக்கு முன்னிலைப்படுத்துவதற்கும் இந்த மாநாட்டின் ஊடாக வழிவகுக்கும் என தொழில் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.





