நிகழ்நிலையில் சாட்சியமளிக்க கோட்டாவுக்கு யாழ்.நீதிமன்றம் அனுமதி
2022 ஆம் ஆண்டு அவர் ஜனாதிபதி பதவியிலிருந்து விலகியதன் பின்னர் அவருக்குரிய சட்ட விலக்குரிமை நீங்கியதால், மீண்டும் இந்த வழக்கில் சாட்சியமளிப்பதற்காக அவரை அழைப்பதற்கான சட்டப் பின்னணி உருவானது.
முன்னிலை சோசலிசக் கட்சியின் அரசியல் செயற்பாட்டாளர்களான லலித் மற்றும் குகன் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கில் , அப்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் முன்னாள் ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்ஷ நிகழ்நிலை ஊடாக சமூகமளிப்பதற்கு யாழ்.ண நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
யாழ்ப்பாணம் - அச்சுவேலி பகுதியில் வைத்து கடந்த 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் திகதி லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகிய இருவரும் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான இந்த வழக்கு, 02-06-2026 அன்று யாழ். நீதிவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
முன்னதாக, தான் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்துக்கு நேரில் ஆஜராகி சாட்சியமளிப்பது தனது உயிருக்கு அச்சுறுத்தலாக அமையலாம் எனத் தெரிவித்து கோட்டாபய ராஜபக்ஷ மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்து சட்ட நடவடிக்கை எடுத்திருந்தார். தான் யாழ்ப்பாணத்துக்குச் சென்று சாட்சியமளித்தால் எல்.டி.டி.ஈ. அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்பதால், யாழ்.நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து தனக்கு விலக்கு அளிக்குமாறு அவர் அந்த மனுவில் கோரியிருந்தார்.
இதற்கமைய, அவர் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் ஆஜராவதைத் தடுத்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்திருந்தது. அதனைத் தொடர்ந்து, 2019 ஆம் ஆண்டில் அவர் ஜனாதிபதியாகப் பதவியேற்றதை அடுத்து, அரசியலமைப்பின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்படும் விலக்குரிமையின் அடிப்படையில் அவருக்கு எதிரான இந்த நீதிமன்ற நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டன.
எவ்வாறாயினும், 2022 ஆம் ஆண்டு அவர் ஜனாதிபதி பதவியிலிருந்து விலகியதன் பின்னர் அவருக்குரிய சட்ட விலக்குரிமை நீங்கியதால், மீண்டும் இந்த வழக்கில் சாட்சியமளிப்பதற்காக அவரை அழைப்பதற்கான சட்டப் பின்னணி உருவானது.
இதனைத் தொடர்ந்து, கடந்த 2025 ஜூலை 30 ஆம் திகதி நீதிவான் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கத் தான் தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது சட்டத்தரணிகள் ஊடாக உயர் நீதிமன்றத்துக்கு அறிவித்திருந்தார்.
முன்னிலை சோசலிசக் கட்சியின் அரசியல் செயற்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர், 2011 ஆம் ஆண்டு வடக்கு மாகாணத்தில் காணாமல்போனோரின் குடும்ப உறுப்பினர்களை ஒன்றிணைத்து ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்துகொண்டிருந்த போதே யாழ்ப்பாணத்தில் வைத்து காணாமல் ஆக்கப்பட்டனர்.





