மக்கள்நேய ஆட்சியின் ஜனநாயக பண்புகளை வெளிப்படுத்துவதே"பிரஜா சக்தி" - பிரதமர் கலாநிதி ஹரிணி
தனித்துவமான பொருளாதார முறையை இனம் கண்டு கிராமத்தை அபிவிருத்தி செய்வதே இத்திட்டத்தின் நோக்கமாகுமெனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
"பிரஜா சக்தி" வேலைத்திட்டமானது மக்கள்நேய ஆட்சியின் ஜனநாயகப் பண்புகளை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய கட்டமென்றும், பிரதேசத்திற்குரிய தனித்துவமான பொருளாதார முறையை இனம் கண்டு கிராமத்தை அபிவிருத்தி செய்வதே இத்திட்டத்தின் நோக்கமாகுமெனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
மக்கள்நேய ஆட்சியின் கீழ் மக்கள் எதிர்பார்த்த உண்மையான அர்த்தத்தை உள்வாங்கி, கிராமிய அபிவிருத்தி மூலம் நாட்டின் அபிவிருத்தியில் மக்களைப் பங்களிப்புச் செய்ய வைப்பதற்காக, கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் "பிரஜா சக்தி" வறுமை ஒழிப்பு தேசிய இயக்கத்தின் "ஆயிரம் கிராமங்களில், ஆயிரம் பணிகள்" திட்டத்தின் கொழும்பு மாவட்ட ஆரம்ப நிகழ்வு, 02-06-2026 அன்று நாம்பமுணுவ கிராம உத்தியோகத்தர் பிரிவில் நடைபெற்ற 'பிரஜா சக்தி' அபிவிருத்தி சபையினால் தரிசுநிலங்களாகக் கிடந்த வயல்களை மீண்டும் பயிர்செய்யும் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இக்கருத்தினைத் தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த பிரதமர், "அரசின் மக்கள்நேய ஆட்சியின் ஜனநாயகப் பண்புகளை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய சந்தர்ப்பமாக 'பிரஜா சக்தி' வேலைத்திட்டத்தை அடையாளப்படுத்தலாம். இந்தத் திட்டத்தின் பெயரின் உண்மையான அர்த்தம் என்னவென்றால், மக்கள்நேய ஆட்சி என்பது அரசு மாத்திரம் செயற்படுவதல்ல, மாறாக அது அரசு, அரச உத்தியோகத்தர்கள் மற்றும் மக்கள் ஆகிய அனைத்துத் தரப்புகளும் இணைந்து மேற்கொள்ளும் கூட்டு முயற்சி என்பதை உணர்ந்துகொள்வதாகும். தேர்தல்காலங்களில் மாத்திரம் ஆட்சியாளர்கள் மக்களுடன் இணைந்து இயங்குவது அல்ல, மாறாக மக்களை ஆட்சியின் ஓர் அங்கமாக மாற்றிச் செயற்பாட்டுரீதியாகவே அவர்களின் பங்களிப்பைப் பெற்றுக்கொள்ளும் எண்ணக் கருவை, இந்த 'பிரஜா சக்தி' வேலைத்திட்டத்தின் ஊடாக சகல கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் உள்வாங்கும் விதத்தில் ஸ்தாபித்திருக்கின்றோம் என்றார்.





