இலங்கையின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் இந்தியா என்றும் உறுதியான பங்காளி - இந்திய உயர்ஸ்தானிகர்
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்திடப்பட்டது.
இலங்கையின் உள்ளுர் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதிலும், நாடு முழுவதிலும் உள்ள சமூகங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியை ஆதரிப்பதிலும் இந்தியா என்றும் ஒரு உறுதியான, உண்மையான பங்காளியாக விளங்கும் என்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.
இந்திய அரசாங்கத்தின் மானிய நிதியுதவியுடன் குருநாகல் மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட 'பத்தினி கிராமம்' மாதிரி கிராமத்தை நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் கலாநிதி சுசில் ரணசிங்க ஆகியோர் இணைந்து, இக்கிராமத்திலுள்ள வீடுகளைத் தகுதியுடைய 24 பயனாளி குடும்பங்களிடம் கையளித்தனர். இத்திட்டத்தின் மூலம் இலங்கையின் தேசிய அபிவிருத்திக்கான இந்தியாவின் நீண்டகால அர்ப்பணிப்பு மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.
இந்நிகழ்வில் வடமேல் மாகாண ஆளுநர் திஸ்ஸ குமாரசிறி வர்ணசூரிய, மகளிர் மற்றும் சிறுவர் விவகார பிரதி அமைச்சர் கலாநிதி நாமல் சுதர்ஷன, குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ இந்திக திஸாநாயக்க மற்றும் வீடமைப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன், இலங்கையின் அனைத்து 25 மாவட்டங்களிலும் இந்த மாதிரி கிராம வீட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்திடப்பட்டது. மாவட்ட வீட்டு வசதிக் குழுக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட குறைந்த வருமானம் பெறும் 600 குடும்பங்களுக்கு வீட்டு வசதி அளிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இதன் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் 24 வீடுகளைக் கொண்ட ஒரு மாதிரி கிராமம் அமைக்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் இதுவரை யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை, கண்டி, மாத்தளை, கம்பஹா, கொழும்பு, அனுராதபுரம், பதுளை, புத்தளம், மொனராகலை மற்றும் இரத்தினபுரி உள்ளிட்ட 17 மாவட்டங்களில் மாதிரி கிராமங்கள் மக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. தற்போது இத்திட்டத்தின் 98.5 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், எஞ்சிய மாவட்டங்களிலுள்ள மாதிரி கிராமங்களும் மிக விரைவில் பொதுமக்களிடம் கையளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.





