சொல்லிசை பாடகர் சங்கீர்த்தனின் கைதுக்கு கவனயீர்ப்பு போராட்டம்
ஜனநாயகம் எங்கே?', 'உடைப்போம் உடைப்போம்! குரல்வளையின் விலங்கை உடைப்போம்!' என்பன உள்ளடங்கலாக பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
சொல்லிசை பாடகரான சங்கீர்த்தன் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளமையைக் கண்டித்தும், அச்சட்டத்தை முற்றாக நீக்குமாறு வலியுறுத்தியும் 06-06-2026அன்று கிளிநொச்சியில் பெருந்திரளான இளைஞர், யுவதிகளின் பங்கேற்புடன் மாபெரும் கவனயீர்ப்புப்போராட்டம் நடைபெற்றது.
தமிழீழ விடுதலைப்புலிகளுடுன் தொடர்புடைய உள்ளடக்கத்தைக்கொண்ட பாடலைப் பாடினார் என்ற குற்றச்சாட்டில் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட கிளிநொச்சியைச் சேர்ந்த பாடகரான சங்கீர்த்தன் (24) யாழ் சிறைச்சாலையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அரச பயங்கரவாதத்தை பிரயோகித்து, பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தாயகக் கலைஞனை விடுவிக்கக்கோரி நேற்று சனிக்கிழமை (6) கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு முன்பாகப் பெரும் திரளான இளைஞர், யுவதிகளின் பங்கேற்புடன் மாபெரும் கவனயீர்ப்புப்போராட்டமும், கண்டனப்பேரணியும் நடைபெற்றது.
'குரல்வளையின் விலக்குடைக்க அணிதிரள்வோம்' எனும் மகுடத்தில் கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்போராட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு பயங்கரவாதத்தடைச்சட்டத்துக்கு எதிரான தமது வலுவான நிலைப்பாட்டினை வெளிப்படுத்தியிருந்தனர்.
இக்கவனயீர்ப்புப்போராட்டத்தில் பங்கேற்றவர்கள், 'பாடினால் பயங்கரவாதமா? தாயகக் கலைஞனை உடனே விடுவி!', 'தமிழர் வலிகளைப் பாடுவதும் எழுதுவதும் குற்றமா?', 'ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் பயங்கரவாதத்டைச்சட்டத்தை உடன் நீக்கு!', 'சட்டத்தின் பெயரால் நடக்கும் அரச பயங்கரவாதத்தை உடன் நிறுத்து!', 'உரிமைக்குரல் எழுப்பத் தமிழருக்குத் தடையா? ஜனநாயகம் எங்கே?', 'உடைப்போம் உடைப்போம்! குரல்வளையின் விலங்கை உடைப்போம்!' என்பன உள்ளடங்கலாக பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
அத்தோடு 'தமிழருக்கு மட்டும் கருத்துச்சுதந்திரம் மறுக்கப்படுவதா?', 'வார்த்தைகளுக்கு விலங்கு பூட்டி தமிழரின் வாயடைக்கப் பார்க்காதே', 'கலைக்கு ஏனடா சிறை?', 'பேனா முனைக்கும் பாடும் குரலுக்குப் பயப்படுகிறதா அரசு?' ஆகிய வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் அவர்கள் ஏந்தியிருந்தனர். இது போன்ற முழக்கங்கள் அடங்கிய வாசக அட்டைகளை ஏந்தியவாறும், உணர்ச்சிப் பூர்வமாக முழக்கங்களை எழுப்பியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.





