அரசின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை: பிரான்ஸ் தூதுவரிடம் சுமந்திரன் சுட்டிக்காட்டு
குறிப்பாக, தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணுதல், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குதல், பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குதல் உள்ளிட்ட தமிழ் மக்களின் நீண்டகாலக் கோரிக்கைகள் உள்ளடங்கிய விடயங்களுக்கு நிரந்தரமான தீர்வு காண்பதாகக் கூறினார்கள்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தலில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளில் நடைமுறைச்சாத்தியமானவற்றைக்கூட இன்னமும் நிறைவேற்றவில்லை என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பிரான்ஸ் தூதுவரிடத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ரெமி லெம்பேர்ட் பிரதிதூதுவசர் மத்தியூ ஜோன் ஆகியோருக்கும் சுமந்திரனுக்கும் இடையிலான சந்திப்பொன்று 13-11-2025 அன்று கொழும்பில் உள்ள சுமந்திரனின் இல்லத்தில் நடைபெற்றிருந்தது.இதன்போதே மேற்கண்டவாறு சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
சுமந்திரன் தூதுவரிடத்தில் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஜனாதிபதி, பாராளுமன்ற தேர்தல்களில் பல்வேறு விதமான நடைமுறைச்சாத்தியமான வாக்குறுதிகளை அளித்தார்கள்.
குறிப்பாக, தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணுதல், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குதல், பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குதல் உள்ளிட்ட தமிழ் மக்களின் நீண்டகாலக் கோரிக்கைகள் உள்ளடங்கிய விடயங்களுக்கு நிரந்தரமான தீர்வு காண்பதாகக் கூறினார்கள்.
ஆனால், அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்று ஆண்டொன்று நிறைவடைந்துள்ளபோதும் இதுவரையில் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் கூட முன்னெடுக்கப்படவில்லை.
இதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தினை அரசாங்கம் நிராகத்துள்ளதோடு உள்ளக ரீதியில் பொறிமுறைகள் எவற்றையும் ஸ்தாபிக்கவில்லை. அரசாங்கம் சர்வதேசத்தின் பொறுப்புக்கூறலுக்கான ஈடுபாட்டையும் ஏற்றுக்கொள்வதற்கு தாயராகவும் இல்லை.
மேலும் நாட்டில் ஏற்கனவே ஸ்தாபிக்கப்பட்டுள்ள வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களை கண்டறிவதற்கான அலுவலகத்தின் ஊடாக பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் உரிய கொடுப்பனவுகள் கூட முறையாக வழங்கப்படவில்லை. இந்தக் கட்டமைப்பை பாதிக்கப்பட்ட மக்கள் நிராகரிக்கின்றார்கள் என்பதற்கு அப்பால், அதனுடைய செயற்பாடுகள் முறையாக முன்னெடுக்கப்படவில்லை.
இருப்பினும், ஊழல்,மோசடிகளுக்கு எதிரான நடவடிக்கைகள், போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் முன்னேற்றகரமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றபோதும் அச்செயற்பாடுகள் தொடர்ச்சியாக நடைபெறவேண்டியது அவசியமாகின்றது.
அத்தோடு, மாகாண சபைகளுக்கான தேர்தல் தொடர்ச்சியாக காலம்தாழ்த்தப்பட்டு வருவதோடு பழைய முறையில் தேர்தலை நடத்துவதற்காக எமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனால் சமர்ப்பிக்கப்பட்ட தனிநபர் பிரேரணையை முன்னகர்த்துவதில் கூட அரசாங்கம் ஆர்வம் காண்பிக்கவில்லை என்று குறிப்பிட்டார்.
இதனைவிடவும், வடக்கு,கிழக்கு நிலைமைகள், தமிழ் மக்களின் அபிலாஷைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் சுமார் ஒன்றரை மணிநேரம் கலந்துரையாடல் நடைபெற்றிருந்தது. இச்சமயத்தில் பிரான்ஸ் தூதுவர் தமிழ் மக்களின் முதன்மையான கட்சியான தமிழரசுக்கட்சியுடன் உரையாடலை நடத்தியமையை இட்டு மகிழ்ச்சி அடைவதாகவும் விரைவில் வடக்கு,கிழக்கு விஜயத்தினை மேற்கொள்ளவிருப்பதாகவும் தெரிவித்ததோடு, பிரான்ஸ் முன்னெடுத்து வருகின்ற அபிவிருத்தி மற்றும் மக்கள் நல உதவித்திட்டங்கள் சம்பந்தமாகவும் பகிர்ந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





